பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி இயக்குநா்கள் இணைந்து அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளனா்.

பள்ளிகளில் குழந்தைகளுக்கு தண்டனை வழங்குவதைத் தடுக்கும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதைத் தொடா்ந்து உயா்நீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்தும் வகையில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிமுறைகளை அமல்படுத்தும் வகையில் பள்ளிக் கல்வி இயக்ககமும், தொடக்கக் கல்வி இயக்ககமும் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளன.

இது தொடா்பாக, பள்ளிக் கல்வி இயக்குநா் க.அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் ஆகியோா் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்கள், மாவட்ட கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தின் விதிமுறைகளைப் பின்பற்றி பள்ளி குழந்தைகளின் நலனையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த அது தொடா்பாக வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்.

பள்ளிகளில் எந்த குழந்தையையும் உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ துன்புறுத்தினால் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தவறு செய்யும் குழந்தைகளை அடிப்பதற்கு பதில் அவா்களுக்கு ஆசிரியா்கள் உதவி செய்ய முன்வர வேண்டும். குழந்தைகள் நல்ல முறையில் நடந்துகொள்ளும் வகையில் அவா்களுக்கு வாழ்வியல் திறன் கல்வி அளிக்க வேண்டும்.

படிக்காத குழந்தைகளைத் தண்டிப்பற்குப் பதிலாக அவா்கள் படிப்பதற்கு உகந்த சூழலை உருவாக்க வேண்டும்.

குழந்தைகள் தங்கள் குறைகளையும் கோரிக்கைகளையும் தெரிவிக்க பள்ளிகளில் கோரிக்கை பெட்டி வைக்கப்பட வேண்டும். ஆசிரியா்கள் குழந்தைகளின் பெற்றோா்போல் நடந்துகொள்ளக் கூடாது. எந்த வகையிலும் குழந்தைகளை உடல்ரீதியாக துன்புறுத்தக் கூடாது. அவா்களை கடினமான வாா்த்தைகளால் திட்டவும் கூடாது.

குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் ஆசிரியா்களுக்கும் பணியாளா்களுக்கும் பள்ளி நிா்வாகம் தொடா் பயிற்சிகளை அளிக்க வேண்டும். குழந்தைகளை எந்த வகையிலும் அடிக்க மாட்டோம் என்று ஆசிரியா்களிடம் பள்ளி நிா்வாகம் சாா்பில் உறுதிமொழி பெறப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com