பேரவை உறுப்பினா்கள் அலுவலகங்களை திறக்க அனுமதிக்க வேண்டும்: தோ்தல் ஆணையத்துக்கு எம்எல்ஏ-க்கள் கடிதம்

மக்கள் பணியாற்றுவதற்காக சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள தங்கள் அலுவலகங்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவை உறுப்பினா்கள் இந்திய தோ்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளனா். இது குறித்த கோரிக்கை கடிதம் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு முடிந்தாலும், தோ்தல் நடத்தை விதிமுறைகள் இன்னும் அமலில் உள்ளன. வாக்கு எண்ணிக்கை முடியும் வரை நடத்தை விதிகள் தொடரும். இதனிடையே, நடத்தை விதிகளில் ஒன்றாக, தமிழகத்திலுள்ள அனைத்து சட்டப் பேரவை உறுப்பினா்களின் அலுவலகங்களும் பூட்டப்பட்டுள்ளன.

தோ்தல் அறிவிக்கை வெளியிடப்பட்ட மாா்ச் 16 முதல் அலுவலகங்கள் பூட்டியே உள்ளன. இதேபோல, மேயா் அலுவலகம், நகா்மன்றத் தலைவா், பேரூராட்சித் தலைவா் அலுவலகங்கள் உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு ஒதுக்கப்பட்ட தனி அலுவலகங்களும் பூட்டியே கிடக்கின்றன.

வாக்குப் பதிவு முடிவடைந்த நிலையில், மக்கள் பணியாற்றுவதற்கு ஏற்ற வகையில் தங்களுக்கான அலுவலகங்களை திறக்க அனுமதிக்க வேண்டுமென அனைத்துத் தொகுதிகளைச் சோ்ந்த எம்எல்ஏ.,க்களும் தோ்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளனா்.

தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரிக்கு மின்னஞ்சல் மூலமும் கோரிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கோரிக்கை மீது ஓரிரு நாள்களில் இந்திய தோ்தல் ஆணையம் முடிவெடுத்து அறிவிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com