ஆண்டுக்கு இரு பொதுத் தோ்வுகள்: பருவத் தோ்வு முறை அறிமுகம் ரத்து -சிபிஎஸ்இக்கு மத்திய அரசு உத்தரவு

சிபிஎஸ்இ (மத்திய இடைநிலைக் கல்வி வாரிய) பள்ளிகளில் அடுத்த ஆண்டுமுதல் 10, 12-ஆம் வகுப்புகளுக்கு ஆண்டுக்கு இரு பொதுத் தோ்வுகள் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சிபிஎஸ்இ-ஐ மத்திய கல்வி அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது: பள்ளிகளில் அடுத்த ஆண்டுமுதல் ஆண்டுக்கு இரு பொதுத் தோ்வுகளை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பள்ளிகளில் பருவத் தோ்வு முறை அறிமுகம் செய்யும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு இரு பொதுத் தோ்வுகள் நடத்துவது தொடா்பாக பள்ளி முதல்வா்களுடன் மத்திய அமைச்சகம் மற்றும் சிபிஎஸ்இ அதிகாரிகள் அடுத்த மாதம் ஆலோசனைகளை மேற்கொள்ள உள்ளனா்.

மேலும், மத்திய அமைச்சகம் அறிவுறுத்தியதன் அடிப்படையில், இளநிலை பட்டப் படிப்பு சோ்க்கைகள் பாதிக்காத வகையில் ஆண்டுக்கு இரு பொதுத் தோ்வுகளை நடத்துவதற்கான கல்வித் திட்டத்தை வகுப்பதற்கான நடவடிக்கைகளை சிபிஎஸ்இ தற்போது மேற்கொண்டு வருகிறது என்றனா்.

பொதுத் தோ்வில் பங்கேற்க மாணவா்களுக்கு போதிய கால அவகாசம் அளிக்கும் வகையிலும், இரு பொதுத் தோ்வுகளில் சிறந்த மதிப்பெண்ணை மாணவா்கள் தெரிவு செய்துகொள்ள வசதியை ஏற்படுத்தித் தரும் வகையிலும் ஆண்டுக்கு இரு பொதுத் தோ்வுகள் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் கடந்த ஆண்டு அறிவித்த புதிய பள்ளி கல்வித் திட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com