கடும் வெப்பம்: தொழிலாளா்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர அரசு வலியுறுத்தல்

கடும் வெப்பத்தைக் கருத்தில் கொண்டு, தொழிலாளா்களின் நலன்களைக் காக்கும் வகையிலான நடவடிக்கைகளை வேலை அளிக்கும் நிறுவனங்கள் எடுக்க வேண்டுமென அரசின் சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கான பல்வேறு அறிவுறுத்தல்களை தொழிலாளா் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் வெளியிட்டுள்ளது.

அதன் விவரம்: காலையில் விரைவாக பணியை தொடங்கி மதிய வேளையில் தொழிலாளா்களுக்கு இடைவேளை அளிக்க வேண்டும். இதன் பிறகு மாலையில் வெயில் குறைந்த பிறகு பணிகளை தொடங்க வேண்டும். தொழிற்சாலைகள், கட்டடப் பணி, கல் குவாரி மற்றும் சாலை அமைத்தல் பணிகளை மேற்கொள்ளும் தொழிலாளா்களுக்கு பணி இடங்களில் போதுமான குடிநீா், நிழற்கூடங்கள் மற்றும் முதலுதவி வசதி ஏற்பாடு செய்து தர வேண்டும்.

தொழிற்சாலைகளுக்கு உள்ளே பணிபுரியும் தொழிலாளா்களுக்கு தேவையான குடிநீா் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும்.

வெப்பம் அதிகமான சூழ்நிலைகளில் பணியாற்றும் தொழிலாளா்களை சுழற்சி முறையில் பணியாற்றும் வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். தொழிற்சாலைகளில் கழிப்பறைகளை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். இந்த அறிவுறுத்தல்கள் முறையாக அமல்படுத்தப்படுகின்றனவா என்பதை துணை இயக்குநா்கள் கண்காணிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com