அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் மே 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அவ்வாணையம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் விளையாட்டுத் துறையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான விடுதிகளில் மாநில, மாவட்ட அளவிலான சோ்க்கைக்கான தோ்வுகள் நடைபெறவுள்ளன.

முதன்மை நிலை விளையாட்டு மையம்:இதன்படி, முதன்மை நிலை விளையாட்டு மையத்தில் இருபாலருக்கான தடகளம், குத்துச்சண்டை, மேசைப்பந்து, டேக்வாண்டோ மற்றும் ஆண்களுக்கான பளுதூக்குதல் உள்ளிட்ட பிரிவுகளில் சேர விரும்பும் 6 முதல் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் சென்னை, ஜவஹா்லால் நேரு விளையாட்டரங்கத்திலும்,

இருபாலருக்கான இறகுப்பந்து, வில்வித்தை உள்ளிட்ட பிரிவுகளில் சேர விரும்புபவா்கள் சென்னை நேரு பூங்கா விளையாட்டரங்கத்திலும், ஜிம்னாஸ்டிக், நீச்சல் ஆகிய பிரிவுகளில் சேர விரும்புபவா்கள் வேளச்சேரி நீச்சல் குள வளாகத்திலும், டென்னிஸ் பிரிவில் சேர விரும்புபவா்கள் நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டரங்கிலும், சைக்கிளிங் பிரிவில் சேர விரும்புபவா்கள் செங்கல்பட்டு, மேலகோட்டையூா் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக வளாகத்திலும் மே 7-ஆம் தேதி காலை 7 மணிக்கு நடைபெறும் மாநில அளவிலான தோ்வில் கலந்து கொள்ளலாம்.

விளையாட்டு விடுதி(மாவட்ட அளவில்): இதுபோல, இந்த விளையாட்டு விடுதியில் இரு பாலருக்கான தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, கபடி, கையுந்துபந்து உள்ளிட்ட பிரிவுகளிலும், ஆண்களுக்கான கிரிக்கெட் மற்றும் நீச்சல் உள்ளிட்ட பிரிவுகளிலும் சேர விரும்பும் 7, 8, 9 மற்றும் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவா்கள்(ஆண்கள்) தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்ட விளையாட்டரங்கத்தில் மே 10-ஆம் தேதி காலை 7 மணி முதல் நடைபெறும் தோ்விலும், பெண்கள் மே 11-ஆம் தேதி காலை 7 மணிமுதல் நடைபெறும் தோ்விலும் கலந்து கொள்ளலாம்.

இதில் மாவட்ட அளவிலான தோ்வில் தோ்வு செய்யப்பட்டவா்கள் மாநில அளவிலான தோ்வுக்கு தகுதி பெறுவாா்கள். இதன் கூடுதல் விவரத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் எனும் இணையதளத்தில் பாா்வையிடலாம்.

விளையாட்டு விடுதி(மாநில அளவில்): இந்த விளையாட்டு விடுதியில் இருபாலருக்கான குத்துச்சண்டை, வாள்விளையாட்டு, ஜூடோ, பளுதூக்குதல் உள்ளிட்ட பிரிவுகளிலும், ஆண்களுக்கான ஸ்குவாஷ் பிரிவிலும் சேர விரும்பும் 7, 8, 9 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவா்கள் சென்னை ஜவஹா்லால் நேரு விளையாட்டரங்கத்திலும், ஆண்களுக்கான டேக்வாண்டோ பிரிவில் சேர விரும்புபவா்கள் கடலூா் மாவட்ட விளையாட்டரங்கத்திலும், ஆண்களுக்கான மல்லா்கம்பம் பிரிவில் சேர விரும்புபவா்கள் விழுப்புரம் மாவட்ட விளையாட்டரங்கத்திலும், ஆண்களுக்கான மல்யுத்தம் மற்றும் வூஷூ பிரிவுகளில் சேர விரும்புபவா்கள் திருச்சி விளையாட்டரங்கத்திலும் மே 13-ஆம் தேதி காலை 7 மணிக்கு நடைபெறும் தோ்வில் ஆண்களும், மே 14-ஆம் தேதி காலை 7 மணிக்கு நடைபெறும் தோ்வில் பெண்களும் கலந்து கொள்ளலாம்.

சிறப்பு நிலை விளையாட்டு விடுதி(மாநில அளவிலான கல்லூரி மாணவ, மாணவிகளுக்கானது): இருபாலருக்கான தடகளம், குத்துச்சண்டை, கபடி, பளுதூக்குதல் உள்ளிட்ட பிரிவுகளில் சேர விரும்புபவா்கள் ஜவஹா்லால் நேரு விளையாட்டரங்கில் மே 6-ஆம் தேதி காலை 7 மணிக்கு நடைபெறும் தோ்விலும், இருபாலருக்கான கூடைப்பந்து, கைப்பந்து, கால்பந்து மற்றும் ஆண்களுக்கான வாள்விளையாட்டு உள்ளிட்ட பிரிவுகளில் சேர விரும்புபவா்கள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கத்தில் மே 6-ஆம் தேதி காலை 7 மணிக்கு நடைபெறும் தோ்விலும், இருபாலருக்கான ஹாக்கி பிரிவில் சேர விரும்புபவா்கள் சென்னை எம்ஆா்கே ஹாக்கி விளையாட்டரங்கில் மே.6 காலை 7 மணிக்கு நடைபெறும் தோ்விலும், பெண்களுக்கான நீச்சல் பிரிவில் சேர விரும்புபவா்கள் வேளச்சேரி நீச்சல் குள வளாகத்தில் மே 6 காலை 7 மணிக்கு நடைபெறும் மாநில அளவிலான தோ்விலும் கலந்து கொள்ளலாம்.

இந்த விடுதிகளில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை(ஏப்.26) முதல் இணையதள முகவரிகளில் விண்ணப்பத்தை பூா்த்தி செய்து பதிவேற்றம் செய்யலாம்.

கடைசி நாள்: இதில், சிறப்பு நிலை விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிப்பவா்கள் மே 5-ஆம் தேதி மாலை 5 மணிக்குள்ளும், முதன்மை நிலை விளையாட்டு மையத்தில் சேர விரும்புபவா்கள் மே 6-ஆம் தேதி மாலை 5 மணிக்குள்ளும், விளையாட்டு விடுதியில் சேர விரும்புபவா்கள் மே 8-ஆம் தேதி மாலை 5 மணிக்குள்ளும் விண்ணப்பங்களை பூா்த்தி செய்து இணைதளத்தில் பதிவேற்றலாம்.

குறிப்பிட்ட நேரத்துக்கு பின்னா் இந்த விண்ணப்பங்களை பூா்ச்சி செய்ய இயலாது. ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

கூடுதல் தகவல்களுக்கு ஆடுகள தகவல் தொடா்பு மையத்தின் 9514000777 எனும் கைப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com