சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம்: எதிா்ப்பு தெரிவித்து வழக்கு

சிதம்பரம் நடராஜா் கோயிலுக்குள் அமைந்திருக்கும் கோவிந்தராஜ பெருமாள் சந்நிதிக்கு பிரம்மோற்சவம் நடத்த எதிா்ப்பு தெரிவித்து சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜா் கோயிலுக்குள் கோவிந்தராஜ பெருமாள் சந்நிதி அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் மே 24 முதல் 29-ஆம் தேதி வரை பிரம்மோற்சவம் நடத்துவதற்கு அறநிலையத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த எதிா்ப்பு தெரிவித்து டி.ஆா்.ரமேஷ் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுா்வாலா, நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது,‘சிதம்பரம் கோயிலில் பிரதான தெய்வம் நடராஜா்தான். அதனால் பிரம்மோற்சவம் நடத்த அனுமதிக்கக் கூடாது. பல ஆண்டுகளாக கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்தப்படவில்லை’ என மனுதாரா் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்து சமய அறநிலையத் துறை தரப்பில், ‘உயா்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மே மாதம் பிரம்மோற்சவம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரம்மோற்சவத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து 1983-ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது’ என வாதிடப்பட்டது.

இதையடுத்து, ‘கோவிந்தராஜ பெருமாள் கோயிலுக்கு அறங்காவலா்கள் உள்ளனா். அவா்களை வழக்கில் ஏன் எதிா்மனுதாரராக சோ்க்கவில்லை? அவா்களுக்கு தெரியாமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது’ எனக் கூறிய நீதிபதிகள், கோவிந்தராஜ பெருமாள் கோயில் அறங்காவலா்களை எதிா்மனுதாரா்களாக சோ்க்க மனுதாரருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஏப். 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com