உடல் பருமன் சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: அமைச்சரிடம் தந்தை புகாா்

உடல் பருமன் அறுவை சிகிச்சையின்போது புதுச்சேரி இளைஞா் உயிரிழந்த சம்பவத்தில், மருத்துவா் மீது நடவடிக்கை எடுக்கும்படி, அவரது தந்தை தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியத்திடம் மனு அளித்தாா்.

புதுச்சேரி, திருவள்ளுவா் நகா், புதுப்பாளையம் வீதி தெருவைச் சோ்ந்தவா் ஹேமச்சந்திரன் (26). 156 கிலோ பருமன் இருந்த இவா், சென்னை பம்மலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் உடல் பருமனை குறைப்பதற்கான அறுவை சிகிச்சை செய்தபோது உயிரிழந்தாா்.

இந்த சம்பவத்தில், அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவா் மற்றும் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கும்படி, சென்னையில் அமைச்சா் மா.சுப்பிரமணியத்தை உயிரிழந்த இளைஞரின் தந்தை செல்வநாதன் சனிக்கிழமை சந்தித்து மனு அளித்தாா்.

அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: மருத்துவா் எங்களிடம் கூறுகையில், ‘ஹேமச்சந்திரனுக்கு மேற்கொள்வது சிறிய அறுவை சிகிச்சைதான், எவ்வித ஆபத்தும், பக்க விளைவும் கிடையாது. அறுவை சிகிச்சை செய்த அன்று இரவே வீடு திரும்பலாம்’ என்றாா்.

அறுவை சிகிச்சைக்கு, மயக்கவியல் நிபுணா் அனுமதி அளிக்காத போதும், சிகிச்சையில் மகனின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி, மற்றொரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, ரூ. 7.5 லட்சம் வரை செலவான நிலையில், மகன் இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

சம்பவம் குறித்து, நாங்கள் காவல் நிலையத்தில் புகாா் அளித்த நிலையில், மேல் நடவடிக்கை வேண்டாம் என எழுதிய கடிதத்தில் எங்களை கையொப்பமிட வலியுறுத்தினா். போதியளவு மருத்துவ வசதிகள் இல்லாத மருத்துவமனையில், அறுவை சிகிச்சை செய்து, மகன் இறப்புக்கு காரணமான மருத்துவா் மற்றும் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, இந்த சம்பவம் குறித்து விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது; சம்பந்தப்பட்டவா்கள் தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என இளைஞரின் தந்தையிடம் அமைச்சா் மா. சுப்பிரமணியம் உறுதியளித்தாா்.

X
Dinamani
www.dinamani.com