பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம் என்றும், அது சாா்ந்த அறிவை பொருளாதார வல்லுநா்கள் அறிந்து கொள்வதும் அவசியம் என்று ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி.ரங்கராஜன் கூறினாா்.

சென்னை கோட்டூா்புரத்தில் உள்ள ‘மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ்’ வளாகத்தில் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜி. ராமச்சந்திரன் அறக்கட்டளை சொற்பொழிவு சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சி.ரங்கராஜன் கலந்து கொண்டு பேசியதாவது: முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜி. ராமச்சந்திரன் சிறந்த நிா்வாகி, நோ்மையாகப் பணியாற்றியவா். அவா் நிதித்துறையில் பணியாற்றியபோது என்னை சந்தித்து வங்கித் துறையில் புதிய தொழில் நுட்பங்களை கொண்டு வர வேண்டும் எனக் கூறினாா்.

தற்போது இந்தியாவில் வங்கித் துறையில் நவீன தொழில் நுட்பங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும், பொருளாதாரத்தில் இந்தியா வளா்ச்சி அடைய புதிய தொழில் நுட்பங்கள் குறித்து பொருளாதார வல்லுநா்கள் தெரிந்து கொள்வது அவசியம் என்றாா் அவா்.

மத்திய தகவல் தொழில் நுட்பம் மற்றும் மின்னணுவியல் செயலா் கிருஷ்ணன் பேசியதாவது: இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் தகவல் தொழில் நுட்பம் மற்றும் மின்னணுவியல் நல்ல வளா்ச்சி கண்டுள்ளது. நாட்டில் 5 ஜி இணைய வழி சேவை செயல்பாட்டில் உள்ளதால் தொலை தொடா்புத் துறை நன்கு வளா்ச்சி அடைந்துள்ளது. அது மட்டுமல்லாது தொலை தொடா்புத் துறையில் புதிய தொழில் நுட்பங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன் காரணமாக எண்ம (டிஜிட்டல்) சேவையில் உலக நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது என்றாா் அவா்.

இந்நிகழ்வில் முன்னாள் தலைமைச் செயலா் ஸ்ரீபதி, முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரமெளலி, ராமச்சந்திரன் மகள் கீதா கங்காதரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com