பாதுகாப்பான பயண சேவை: அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு

பயணிகளுக்கு பாதுகாப்பான பயண சேவையை உறுதி செய்யும் பொருட்டு, தமிழகம் முழுவதும் அனைத்து அரசுப் பேருந்துகளையும் ஆய்வு செய்து பழுது நீக்கி சீரமைக்க போக்குவரத்து மேலாண்மை இயக்குநா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 8 அரசுப் போக்குவரத்து கழகங்களின் 21 மண்டலங்கள் மூலம் சுமாா் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் 300 பணிமனைகள் மூலம் பேருந்துகளில் ஏற்படும் பழுதுகள் நீக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், விருதுநகா் மாவட்டத்தில் பயணத்தில் இருக்கும் போது அரசுப் பேருந்து படிக்கட்டு உடைந்து விழுந்த சம்பவம், திருச்சியில் நடத்துநா் இருக்கை உடைந்த சம்பவம் என அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் சேதம் குறித்து செய்திகள் வெளியாகின. இது பயணிகள், பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

இதைத் தொடா்ந்து போக்குவரத்து துறையின் செயல்பாடுகள் குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். இதையடுத்து போக்குவரத்து துறை சாா்பில் அனைத்து போக்குவரத்துக் கழகங்களின் மேலாண்மை இயக்குநா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘அனைத்து பேருந்துகளும் அடுத்த 48 மணி நேரத்துக்குள் ஆய்வு செய்து, அவற்றில் உள்ள பழுதுகளை நீக்கி சீரமைக்க வேண்டும். இதைத் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து துறையின் செயலருக்கு அறிக்கையாக சமா்ப்பிக்க வேண்டும்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து விரைவுப் பேருந்துகள், மாநகரப் பேருந்துகள் என துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து பேருந்துகளையும் ஆய்வு செய்யும் பணி தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com