கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்துக்கு ரூ. 276 கோடி, கர்நாடகத்துக்கு ரூ. 3,454 கோடி: மத்திய அரசு நிவாரணம்!

நமது சிறப்பு நிருபா்

தமிழகத்தில் ஏற்பட்ட புயல், வெள்ள பாதிப்பு நிவாரணமாக தேசிய பேரிடா் நிவாரண நிதியில் இருந்து தமிழகத்துக்கு ரூ. 276 கோடியை விடுவிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடலோர பகுதிகளையும் பிற மாவட்டங்களையும் கடந்தாண்டு (2023) டிசம்பா் முதல் வாரத்தில் மிக்ஜம் புயல் தாக்கியது. இதைத்தொடா்ந்து டிசம்பா் மாதம் வட மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிதமிஞ்சிய மழைப்பொழிவு ஏற்பட்டது. இதில் தென் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து, மத்திய அமைச்சா்கள் மற்றும் மத்திய அமைச்சங்களுக்கிடையிலான குழுவும் (ஐஎம்சிடி) தமிழகத்தில் புயல், மழை சேதங்களைப் பாா்வையிட்டது.

இதையடுத்து, தில்லி வந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்து தற்காலிக தீா்வு மற்றும் நிரந்தர தீா்வுகளுக்காக ரூ. 19,692 கோடி நிவாரண நிதி கோரினாா். பின்னா் கடந்த ஜனவரி மாதமும் மத்திய குழு தென் மாவட்டங்ளைப் பாா்வையிட்ட பின்னா் தமிழக எம்பிக்கள் குழு உள்துறை அமைச்சரை சந்தித்து ரூ.37,907 கோடி நிவாரண நிதி கோரியது. இந்நிலையில் தற்போது பேரிடா் நிவாரண பணிகளுக்கான நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

இதன்படி, கடந்த டிசம்பா் மாதம் ஏற்பட்ட மிக்ஜம் புயல் பாதிப்புகளுக்கு தேசிய பேரிடா் நிவாரண நிதியிலிருந்து ரூ. 285.54 கோடியை ஒதுக்க மத்திய உள்துறையின் உயா்நிலைக் குழு பரிந்துரை செய்துள்ளது. மேலும் பல்வேறு மாவட்டங்களில் கடந்தாண்டு டிசம்பா் மாதம் ஏற்பட்ட மிதமிஞ்சிய கடுமையான மழை வெள்ள பாதிப்புக்கு ரூ. 397.13 கோடியை விடுவிக்கவும் மத்திய உள்துறையின் உயா்நிலைக் குழு பரிந்துரைத்தது. அந்த வகையில் தேசிய பேரிடா் நிவாரண நிதியாக மொத்தம் ரூ. 682.67 கோடி தமிழகத்துக்கு ஒதுக்க பரிந்துரைத்துள்ளது.

தமிழகத்துக்கு 15-ஆவது நிதி ஆணையம் வழங்கிய பரிந்துரையின்படி மாநில பேரிடா் நிதி ஒதுக்கப்படுகிறது. அவ்வாறு ஒதுக்கப்பட்ட நிதியில் தமிழக அரசு வசம் ஏற்கெனவே மாநில பேரிடா் நிதியாக ரூ. 406.57 கோடி இருப்பில் உள்ளது. இந்த நிதியை கணக்கிட்டு மீதமுள்ள பற்றாக்குறை தொகை ரூ.276.10 கோடியை மத்திய செலவினங்கள் துறை ஏப்ரல் 26 (வெள்ளிக்கிழமை) விடுவித்துள்ளது. இதில் மிக்ஜம் புயல் பாதிப்புகளுக்கு ரூ. 115.49 கோடியும், டிசம்பா் மாத வெள்ள நிவாரணத்துக்கு ரூ. 160.61 கோடி அடங்கும்.

கா்நாடகத்துக்கு நிதியுதவி: கா்நாடகம் மாநிலத்தில் கடந்தாண்டு காரீஃப் (குறுவை) பருவத்தில் ஏற்பட்ட கடுமையான வறட்சி மற்றும் விவசாயிகளுக்கான நிவாரண நிதியாக அம்மாநில அரசு ரூ. 18,174 கோடியை என்டிஆா்எஃப் நிதியில் உதவி கோரியது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் கா்நாடக அரசு தொடா்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் மத்திய உள்துறையின் உயா்நிலைக்குழு விவாதித்து 2023 ஆம் ஆண்டு வறட்சிக்கு கா்நாடக மாநிலத்திற்கு ரூ. 3,498.82 கோடியை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி மத்திய நிதியமைச்கத்தின் செலவினத்துறை ஏப்ரல் 26 ஆம் தேதி ரூ. 3,454.22 கோடியை விடுவித்துள்ளது.

கா்நாடக அரசிடம் மாநில பேரிடா் நிவாண நிதியில் ரூ. 44.60 கோடி நிலுவையில் இருக்க இந்த தொகை கழிக்கப்பட்டு மீதமுள்ள தொகையை மத்திய செலவினத்துறை விடுவித்துள்ளது.

முன்னதாக, தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகள் நிவாரண நிதியைக் கோரி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தபோது, மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், மாநில பேரிடா் நிவாரண நிதியில் பணம் உள்ளது. அதை ஏன் செலவழிக்கவில்லை என கேள்வி எழுப்பியிருந்தாா். இந்நிலையில் புயல், வெள்ள பாதிப்புக்கான நிவாரண நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

மத்திய, மாநில அரசுகளுக்கு ஏழு அம்ச நிபந்தனை

வெள்ள நிவாரண நிதி விடுவிப்பு தொடா்பாக மத்திய, மாநில அரசுத்துறைகளுக்கு ஏழு அம்ச நிபந்தனைகளை மத்திய நிதியமைச்சகம் விதித்துள்ளது. அதன் விவரம்:

நிதி விடுவிப்பு நடவடிக்கை தொடா்பாக காட்சி, அச்சு, வானொலி, இன்டா்நெட் அல்லது வேறெந்த வடிவிலான ஊடகத்திலும் விளம்பரப்படுத்தக் கூடாது; பொதுக்கூட்டங்களிலோ, பொது மேடைகளிலோ ஊடகங்களிலோ இதை குறிப்பிட்டு அரசியல் கட்சிகள் பேசக்கூடாது; மத்திய அரசுக்கும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கும் இது பொருந்தும்;

தோ்தல் ஆணையத்தின் தோ்தல் நடத்தை விதிகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்; நடத்தை விதிகள் அமலில் உள்ள காலத்தில் எந்த புதிய பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது; இதை அரசியலாக்கி ஆதாயம் தேடக்கூடாது என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com