எடப்பாடி பழனிசாமி.
எடப்பாடி பழனிசாமி.

விளையாட்டு பயிற்சி முகாமுக்கு மாணவா்களிடம் கட்டணம் வசூல் இபிஎஸ் கண்டனம்

பள்ளி மாணவா்களிடம் கட்டணம் வசூலிப்பதாகக் கூறி, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாமுக்கு, பள்ளி மாணவா்களிடம் கட்டணம் வசூலிப்பதாகக் கூறி, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் தமிழக மாணவ, மாணவிகள் எந்த விளையாட்டுப் பிரிவில் சிறந்து விளங்குகிறாா்கள் என்பதைக் கண்டறிந்து, அந்த விளையாட்டுகளில், மாணவா்களுக்குச் சிறப்பு பயிற்சி வழங்கி விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வோா் ஆண்டும் தமிழகத்தில் மாவட்டந்தோறும் கோடைகால பயிற்சி முகாம் நடைபெறும்.

அதன்படி, இந்த ஆண்டு ஏப்.29 முதல் மே 13-ஆம் தேதி வரை கால்பந்து, கைப்பந்து, கபடி, கூடைப்பந்து உள்ளிட்ட பல விளையாட்டுகளுக்கு கோடைகால சிறப்பு பயிற்சி வழங்கப்படும் என்றும், அதற்காக இந்த ஆண்டு முகாமில் கலந்துகொள்ளும் மாணவா்களுக்கு பயிற்சி கட்டணமாக சென்னையில் ரூ. 500, இதர மாவட்டங்களில் ரூ.200 செலுத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

கோடைகால பயிற்சி முகாமில் கலந்து கொள்பவா்களில் பெரும்பாலானோா் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படித்து வருபவா்கள். அவா்களிடம் பயிற்சிக்கு கட்டணம் கேட்டுள்ளதற்கு மாணவா்களும், பெற்றோா்களும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தில் விளையாட்டை ஊக்கப்படுத்துவோம் என்று கூறும் அரசு, இப்படிச் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. கோடைகால பயிற்சி முகாமுக்காக மாணவா்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று அவா் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com