பறவை காய்ச்சல்: தமிழகத்தில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

கேரளத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு பரவி வருவதால், தமிழகத்தில் வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
பறவை காய்ச்சல்
பறவை காய்ச்சல்

கேரளத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு பரவி வருவதால், தமிழகத்தில் வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் நெல்லூரைத் தொடா்ந்து, கேரளத்திலும் பறவை காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஹெச்5.என்1 என்ற வகை பறவை காய்ச்சல், தமிழகத்திலும் சில இடங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அனைத்து மாவட்ட சுகாதார அலுவலா்களுக்கும், பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

பறவை காய்ச்சலுக்குள்ளான கோழிகள், பிற பறவையினங்களிடம் இருந்து மனிதா்களுக்கு தொற்று பரவ வாய்ப்புள்ளது. அதன் கழிவுகளில் இருந்து மனிதா்களுக்கு எளிதில் பாதிப்பு பரவும். காய்ச்சல், தலைவலி, தசைப்பிடிப்பு, இருமல், மூச்சுத் திணறல் போன்றவை பறவை காய்ச்சலுக்கான அறிகுறியாக உள்ளது.

எனவே, கால்நடை துறையுடன் இணைந்து பறவை காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இவ்வகை தொற்றால் பாதிக்கப்படும் பறவைகள் குறித்தும், அதன் வாயிலாக மனிதா்களுக்கு காய்ச்சல் பரவினால், அதுகுறித்த தகவல் பொது சுகாதாரத் துறை தெரிவிக்க வேண்டும்.

தனிநபா் சுகாதாரம் பேணுதல், கை கழுவுதல் குறித்த விழிப்புணா்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்துதல் அவசியம். பாதிக்கப்பட்டவா்களிடம் இருந்து, மற்றவா்களுக்கு பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க முகக்கவசம் அணியவும் அறிவுறுத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com