பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை: மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் தீர்ப்பு

பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை: மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் தீர்ப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர்: மாணவிகளைத் தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில், உதவிப் பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 2.42 லட்சம் அபராதமும் விதித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (ஏப்.30) தீர்ப்பளித்தது.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் பணியாற்றியவர் உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி (56). இவர் தன்னிடம் படித்த மாணவிகளை, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பெயரைக் கூறி அவர்களை அழைத்தது தொடர்பாக ஒலிப்பேழை (ஆடியோ) சமூக வலைதளங்களில் வெளியானது.

இதுதொடர்பாக நிர்மலாதேவி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கல்லூரி நிர்வாகத்திடம் மாணவிகள் மனு அளித்தனர். இதுகுறித்து கல்லூரிச் செயலர் ராமசாமி மற்றும் 5 மாணவிகள் அளித்த புகாரின் பேரில், அருப்புக்கோட்டை நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து நிர்மலாதேவியை 2018, ஏப்ரல் 16-ஆம் தேதி கைது செய்தனர்.

இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த வழக்கில் தொடர்புடையதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், முன்னாள் ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

நிர்மலாதேவி, கருப்பசாமி, முருகன் ஆகியோர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், விபசார தடுப்புச் சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் 2018, ஜூன் 13-ஆம் தேதி 1,160 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீஸார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். நிர்மலாதேவியை குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம், முருகன், கருப்பசாமி ஆகியோரை திங்கள்கிழமை (ஏப். 29) விடுவித்தது.

நிர்மலாதேவி தரப்பு வழக்குரைஞர் அவகாசம் கேட்டதால், தீர்ப்பு விவரம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள் முன் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி தரப்பில் வழக்குரைஞர் சுரேஷ் நெப்போலியன் ஆஜராகி முன்வைத்த வாதம்:

நிர்மலாதேவியால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் புகார் அளித்த மாணவிகள், சமூகத்தில் எந்த வகையிலும் ஒடுக்கப்படவும் இல்லை, ஒதுக்கப்படவும் இல்லை. அவர்கள் சராசரி மனிதர்களாகவே இயல்பாக வாழ்ந்து வருகின்றனர். நிர்மலாதேவியால் அவர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை.

எனவே, நிர்மலாதேவிக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும். அவர் மீது காவல் துறை பதிவு செய்த 4 பிரிவுகளில் 2 பிரிவுகள் இந்த வழக்குக்குப் பொருந்தாது. இதில் யாரும் பாதிக்கப்படவில்லை. அப்படி உள்ளபோது, அவரது செயலால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவிகள் எந்த வகையிலும் நேரடியாகப் பாதிக்கப்படவில்லை. இதனால், நிர்மலாதேவிக்கு 2 ஆண்டுகள் மட்டுமே தண்டனை வழங்க வேண்டும் என்றார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரசுத் தரப்பு வழக்குரைஞர் சந்திரசேகரன் முன்வைத்த வாதம்: மாணவிகள் பாதிக்கப்படவில்லை. ஆனாலும், பாதிக்கப்படுவார்கள் என்றுதான் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள பிரிவுகளில் உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தெளிவான சில உத்தரவுகளை வழங்கி இருக்கிறது. அதனடிப்படையில், குறைந்தபட்ச தண்டனை வழங்காமல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றார்.

இதையடுத்து நீதிபதி பகவதியம்மாள் பிறப்பித்த உத்தரவில் மாணவிகளைத் தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில், உதவிப் பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 2.42 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

பின்னர், மதுரை மகளிர் சிறைக்கு நிர்மலாதேவியை போலீஸார் அழைத்துச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com