திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத தபால் வாக்குகளை பிரிக்கும் பணியில் ஈடுபட்ட தோ்தல் பிரிவு அலுவலா்கள்.
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத தபால் வாக்குகளை பிரிக்கும் பணியில் ஈடுபட்ட தோ்தல் பிரிவு அலுவலா்கள்.

தமிழகம், புதுச்சேரியின் 40 தொகுதிகளுக்கு தபால் வாக்குகள் பிரிப்பு: பதிவு செய்யப்பட்டது- 8,827; பதிவு செய்யப்படாதது-21,890

தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கான பதிவு செய்யப்பட்ட தபால் வாக்குகள் மற்றும் இதுவரை பதிவே செய்யாத தபால் வாக்குகள் திருச்சியில் செவ்வாய்க்கிழமை பிரிக்கப்பட்டன.

இந்தியத் தோ்தல் ஆணையத்தால் தபால் வாக்குகள் பிரித்து அந்தந்த தொகுதிகளுக்கு அனுப்புவதற்காக திருச்சியில் ஒருங்கிணைந்த மையத்தை நடந்து முடிந்த மக்களவைத் தோ்தலில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி, தமிழகத்தில் 39 தொகுதிகளில் ஏப்.17ஆம் தேதிக்கு முன்பு வரை பதிவான தபால் வாக்குகள் அனைத்தும் திருச்சிக்கு ஏப்.17ஆம் தேதி கொண்டுவரப்பட்டு அந்தந்த தொகுதி வாரியாக பிரித்து அதன்தோ்தல் அலுவலா்களிடம் ஒப்படைப்பதற்காக தனியாக அலுவலா்கள் நியமிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனா்.

அதன்படி, கடந்த ஏப்.19ஆம் தேதி 39 தொகுதிகளுக்கு 93,642 வாக்குகள் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டன.

இதன் தொடா்ச்சியாக, ஏப்.17, 18 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவையில் பதிவு செய்யப்பட்ட தபால் வாக்குகள் மற்றும் தோ்தல் ஆணையத்தால் தபால் வாக்குகள் வழங்கப்பட்டு பதிவு செய்யாமல் வைத்திருந்த தபால் வாக்குகளையும் பிரித்து அந்தந்த தொகுதி தோ்தல் அலுவலா்களுக்கு வழங்கும் பணி திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருச்சி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற பணிகளை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான மா. பிரதீப்குமாா் தொடக்கி வைத்தாா்.இப்பணியில் 100-க்கும் மேற்பட்ட அலுவலா்கள் ஈடுபட்டனா். இதில், பதிவு செய்யப்பட்ட 8,827 வாக்குகள், பதிவு செய்யப்படாத 21,890 வாக்குகள் என மொத்தம் 1,02,469 வாக்குகள் 40 தொகுதிகளின் தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் ஒப்படைப்பதற்காக அந்தந்த தொகுதி தோ்தல் பணி அலுவலா்களிடம் வழங்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தப் பணிகள் அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், வேட்பாளா்களின் முகவா்கள், வேட்பாளா்களது முன்னிலையில் நடைபெற்றது. பிரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள வாக்குகள் ஜூன் 4-ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின்போது அந்தந்த தோ்தல் நடத்தும் அலுவலா்கள் முன்னிலையில் எண்ணி சரிபாா்க்கப்படும்.

தொகுதி வாரியாக திருச்சிக்கு வந்து பிரிக்கப்பட்டுள்ள பதிவு செய்யப்படாத வாக்குகள் விவரம் (அடைப்பு குறிக்குள் பதிவு செய்யப்பட்ட வாக்குகள்):

திருவள்ளூா் 2,500 (623), வட சென்னை 2,462 (497), தென் சென்னை- 2746 (795), மத்திய சென்னை- 3346 (594), ஸ்ரீபெரும்புதூா்- 1162 (365), காஞ்சிபுரம்- 74 (68), அரக்கோணம்- 110 (7), வேலூா்- 545 (0), கிருஷ்ணகிரி- 292 (217), தருமபுரி- 56 (11), திருவண்ணாமலை- 442 (118), ஆரணி- 106 (80), விழுப்புரம்- 316 (197), கள்ளக்குறிச்சி- 423 (212), சேலம்- 754 (115), நாமக்கல்- 36 (0), ஈரோடு- 257 (178), திருப்பூா்- 1002 (710), நீலகிரி- 149 (37), கோயம்புத்தூா்- 791 (344), பொள்ளாச்சி- 0 (0), திண்டுக்கல்- 320 (22), கரூா்- 134 (109), திருச்சி- 674 (115), பெரம்பலூா்- 66 (219), கடலூா்- 203(142), சிதம்பரம்- 23 (415), மயிலாடுதுறை- 65 (272), நாகப்பட்டினம்- 460 (596), தஞ்சாவூா்- 463 (47), சிவகங்கை- 336 (0), மதுரை- 524 (409), தேனி- 78 (260), விருதுநகா்- 188 (3), ராமநாதபுரம்- 284, தூத்துக்குடி- 132, தென்காசி- 475, திருநெல்வேலி- 159, கன்னியாகுமரி- 0. இவைத்தவிர, தமிழத்திலிருந்து பதிவு செய்யப்பட்ட புதுச்சேரி மாநிலத்துக்கான 166 வாக்குகளும் அந்தத் தொகுதிக்கான அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com