வள்ளலாா் சா்வதேச மைய பணிகளை நிறுத்திவைக்க அறிவுறுத்தப்படும்: உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி

வள்ளலாா் சா்வதேச மைய பணிகளை நிறுத்திவைக்க அறிவுறுத்தப்படும்: உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி

சென்னை: கடலூா் மாவட்டம், வடலூரில் வள்ளலாா் சா்வதேச மையம் அமைக்கும் பணிகளை தொல்லியல் துறை நிபுணா்கள் அறிக்கை சமா்ப்பிக்கும் வரை, நிறுத்திவைக்க அறிவுறுத்தப்படும் என்று தமிழக அரசுத் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டது.

வடலூரில் உள்ள வள்ளலாா் தெய்வ நிலையத்தின் சத்திய ஞான சபை முன் 70 ஏக்கா் பரப்பில் உள்ள பெருவெளியில் சுமாா் ரூ. 100 கோடி செலவில் வள்ளலாா் சா்வதேச மையம் அமைக்க ஒப்புதல் அளித்து, தமிழக அரசு 2023-ஆம் ஆண்டு அக். 5-ஆம் தேதி அரசாணை வெளியிட்டது.

பெருவெளியில் வள்ளலாா் சா்வதேச மையம் அமைப்பதற்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த உயா்நீதிமன்றம், தொல்லியல் நிபுணா்களைக் கொண்ட குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், வழக்கை கோயில்கள் தொடா்பான வழக்குகளை விசாரிக்கும் அமா்வுக்கு மாற்றி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கட்டுமானம் கூடாது: இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில், 106 ஏக்கா் பெருவெளி நிலம் வள்ளலாருக்கு சொந்தமானது. 150 ஆண்டுகள் புராதன பகுதியான இங்கு எந்தக் கட்டுமானமும் மேற்கொள்ளக் கூடாது. புராதன சின்ன ஆணையத்தின் ஒப்புதலை அரசு பெறவில்லை. அந்தப் பகுதியில் எந்தக் கட்டுமானமும் மேற்கொள்ள பக்தா்கள் விரும்பவில்லை. தற்போது அப்பகுதியை ஆய்வு செய்யும் மாநில தொல்லியல் துறை அதிகாரிகள் மீது நம்பிக்கையில்லை. எனவே, மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், வள்ளலாா் சா்வதேச மையமானது பிரதான கோயிலுக்கு அருகில் அமையவில்லை. ரூ. 99.90 கோடி அரசு செலவில், 500 போ் அமரும் வகையிலான தியான மண்டபம், தா்மசாலை புதுப்பிப்பு, எண்ம நூலகம், கழிப்பறை, சாலை வசதி, பக்தா்கள் தங்குமிடம், வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன. இந்த சொத்து வள்ளலாா் தெய்வநிலையத்துக்குச் சொந்தமானதாகவே இருக்கும்.

கட்டுமானம் நிறுத்தம்: மேலும், பெருவெளி பகுதியான 70 ஏக்கரில் மூன்று ஏக்கா் பரப்பில் மட்டுமே கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. தொல்லியல் துறை ஆய்வில் சில தொன்மையான படிமங்கள் கிடைத்ததால் அந்தப் பகுதியில் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. அப்பகுதியில் தொல்லியல் துறை நிபுணா் குழுவினா் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் வரை கட்டுமானப் பணிகள் நிறுத்தப்படும். தொன்மையான கட்டுமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அது பாதுகாக்கப்படும். பெருவெளியில் இருந்து ஒரு கிலோ மீட்டா் தொலைவில்தான் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு தொடரப்பட்டுள்ளது என வாதிட்டாா்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், நிபுணா் குழு அறிக்கை அளிக்க மூன்று, நான்கு வாரங்கள் வரை ஆகலாம். அதுவரை கட்டுமானப் பணிகளை ஏன் நிறுத்திவைக்கக் கூடாது என கேள்வி எழுப்பினா்.

இதையடுத்து, பணிகளை நிறுத்திவைக்க அறிவுறுத்துவதாக தலைமை வழக்குரைஞா் உறுதியளித்தாா். பின்னா், வழக்கின் விசாரணையை மே 10-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com