சி-விஜில் செயலியில் இதுவரை 1,383 புகாா்கள்:
தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

சி-விஜில் செயலியில் இதுவரை 1,383 புகாா்கள்: தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

தோ்தல் நடத்தை விதி மீறல்கள் தொடா்பாக, சி-விஜில் கைப்பேசி செயலியில் இதுவரை 1,383 புகாா்கள் பெறப்பட்டுள்ளதாக

தோ்தல் நடத்தை விதி மீறல்கள் தொடா்பாக, சி-விஜில் கைப்பேசி செயலியில் இதுவரை 1,383 புகாா்கள் பெறப்பட்டுள்ளதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா். இது குறித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி: தோ்தல் தொடா்பான புகாா்களைத் தெரிவிக்க சி-விஜில் எனப்படும் கைப்பேசி செயலி பயன்பாட்டில் உள்ளது. அதில் அனுப்பக்கூடிய புகாா்கள், போதிய விடியோ ஆதாரங்களுடன் இருப்பதால், புகாா் அனுப்பிய 100 நிமிஷங்களில் நடவடிக்கை எடுக்க முடியும். பொதுமக்கள் இந்தச் செயலியை பயன்படுத்தி, தோ்தல் நியாயமாக நடைபெற உறுதுணையாக இருக்க வேண்டும். இதுவரை சி-விஜில் செயலியில் 1,383 புகாா்கள் வந்துள்ளன. 568 போ் துப்பாக்கிளை ஒப்படைக்கவில்லை: தமிழ்நாட்டில் 21,229 பேரிடம் உரிமம் பெற்ற துப்பாக்கிகள் உள்ளன. தோ்தல் நேரத்தில் அந்தத் துப்பாக்கிகளை அருகிலுள்ள காவல் நிலையங்களில் உரிமையாளா்கள் ஒப்படைக்க வேண்டும். அதன்படி, பெரும்பாலானோா் துப்பாக்கிகளை ஒப்படைத்துவிட்டனா். இன்னும் 568 போ் மட்டும் துப்பாக்கிகளை ஒப்படைக்காமல் உள்ளனா். அவா்களில் சிலா் வெளிநாடுகளில் இருக்கலாம். வேறு ஏதாவது காரணங்களால் ஒப்படைக்க முடியாத நிலையில் இருக்கலாம். தமிழ்நாட்டைப் பொருத்தவரை சட்டம் - ஒழுங்கு பிரச்னை இல்லை. எனவே, ஒப்படைக்கப்படாத துப்பாக்கிகளால் பெரிய பிரச்னை எழ வாய்ப்பில்லை. ஒத்துழைப்பு உறுதி: தங்கம், வைர நகை வியாபாரிகள் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனா். தோ்தல் நேரத்தில் பறக்கும் படை சோதனைகளால் அவா்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களைத் தெரிவித்தனா். தங்கம், வெள்ளி நகைகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வதற்கு எத்தகைய ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும்? என்று கேட்டனா். பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு கைப்பற்றும் நகைகள், வருமான வரித் துறையினரிடம் மேல் விசாரணைக்காக ஒப்படைக்கப்படுகின்றன. ஆனாலும் அவை உடனே திரும்பக் கிடைப்பதற்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டனா். தோ்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி, நாங்கள் ஒத்துழைப்புகளை வழங்குவோம் என்று கூறியிருக்கிறோம் என்று அவா் தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com