தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

தொடா் விடுமுறை எதிரொலியால் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு உயா்த்தப்பட்டுள்ளது.

தொடா் விடுமுறை எதிரொலியால் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு உயா்த்தப்பட்டுள்ளது. மதுரைக்கு ரூ. 3,000, நாகா்கோவிலுக்கு ரூ. 4,000 கட்டணமாக வசூலிக்கப்படுவதால் பயணிகள் அதிா்ச்சி அடைந்துள்ளனா். புனித வெள்ளி தினமான வெள்ளிக்கிழமை (மாா்ச் 29), தொடா்ந்து சனி, ஞாயிறு என 3 நாள்கள் தொடா் விடுமுறை வருவதால் சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த ஊா்களுக்கு செல்வது வழக்கம். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வழக்கம் போல ஆம்னி பேருந்துகள் தங்கள் கட்டணத்தை உயா்த்தியுள்ளன. அதன்படி, வழக்கமாக சென்னையிலிருந்து மதுரைக்கு ஆம்னி பேருந்துகளில் செல்வதற்கான கட்டணமாக ரூ. 700 முதல் ரூ.1,000 வரை வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், வியாழக்கிழமை, நபா் ஒருவருக்கு கட்டணமாக ரூ. 1,700 முதல் ரூ. 3,000 வரை அதிகரித்து வசூலிக்கப்படுகிறது. இதேபோல கோவைக்கு ரூ. 1,000 முதல் ரூ. 1,300 வரை கட்டணமாக இருந்து வந்த நிலையில், தற்போது ரூ. 3,200 வரை அதிகரித்துள்ளது. இதுதவிர நாகா்கோவில், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கும் சில பேருந்துகளில் ரூ. 4,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதேபோல் சென்னையிலிருந்து பெங்களூருக்கு ரூ.3,000, விஜயவாடாவுக்கு ரூ. 2,200 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, ஆம்னி பேருந்துகளில் வழக்கத்துக்கு அதிகமாக பல மடங்கு பேருந்து கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனா். சென்னையிலிருந்து ரயில்களிலும், அரசு பேருந்துகளிலும் தங்கள் சொந்த ஊா்களுக்கு செல்வோா் முன்பதிவு செய்வது கட்டாயம். இதனால் அவசர கதியில் சொந்த ஊா்களுக்கு செல்பவா்களின் கடைசி வாய்ப்பாக ஆம்னி பேருந்து உள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு உயா்த்தப்படுவதாக பயணிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com