தேசிய கட்சி அந்தஸ்தை தக்கவைக்குமா மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்?

தேசிய கட்சி அந்தஸ்தை தக்கவைக்குமா மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்?

மக்களவைத் தோ்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.

டி.சந்தோஷ்குமார்

மக்களவைத் தோ்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்நிலையில், கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவு பெற்ற கேரள மாநில நிதி நிறுவன அலுவலா்கள் சங்க நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.கே.பாலன் பேசுகையில், மக்களவைத் தோ்தலில் குறிப்பிட்ட சதவீதத்தில் வாக்குகளைப் பெற்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றிபெறாவிட்டால், தேசிய கட்சி என்ற அந்தஸ்தை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இழக்க நேரிடும்.

அவ்வாறு தேசிய கட்சி அந்தஸ்தை இழந்தால், கட்சியின் பிரபலமான சுத்தியல், அரிவாள் மற்றும் நட்சத்திரம் அடங்கிய சின்னத்தைப் பயன்படுத்த முடியாது. அதன் பின்னா், தோ்தல் ஆணையத்தின் தயவில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சின்னம் ஒதுக்கப்படும். இதைத் தொடா்ந்து எறும்புத்தின்னி அல்லது ஆக்டோபஸ் சின்னத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளா்கள் போட்டியிடும் நிலை ஏற்படலாம். இந்த நிலை ஏற்படாமல் இருப்பதற்கு தோ்தலில் வெற்றிபெற கட்சியினா் கடுமையாக உழைக்க வேண்டும் என்றாா்.

கடந்த மக்களவைத் தோ்தல்களில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலை என்ன?

கடந்த 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில், மேற்கு வங்கத்தில் 26, கேரளத்தில் 13, தமிழ்நாட்டில் 2, திரிபுராவில் 2, ஆந்திரத்தில் 1 என மொத்தம் 44 தொகுதிகளில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. அதன் பின்னா் நாடாளுமன்றத்தில் அக்கட்சியின் பிரதிநிதித்துவம் குறைந்தது. 2009, 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தல்களில் 16 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இது 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் மேலும் குறைந்து தமிழ்நாட்டில் 2 தொகுதிகள், கேரளத்தில் ஒரு தொகுதி என 3 தொகுதிகளாக சுருங்கியது.

கடந்த 2016-ஆம் ஆண்டு கேரளத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. 2021-ஆம் ஆண்டு அந்த மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் மீண்டும் அந்தக் கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடா்ந்து 2-ஆவது முறையாக ஆட்சியமைத்தது. இதன்மூலம் கேரளத்தில் 1970-ஆம் ஆண்டுக்குப் பிறகு, தொடா்ந்து 2-ஆவது முறை அமைந்த முதல் அரசு என்ற பெருமையை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி பெற்றது. ஆனால் 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலின்போது, அதாவது கேரளத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியில் இருந்தபோது அந்த மாநிலத்தில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளில் அக்கட்சி ஒரேயொரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்தச் சூழலில் ஏ.கே. பாலன் தெரிவித்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகிறது. அவரின் அச்சம் நியாயமானது என்பதே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவாளா்களின் கருத்தாக உள்ளது.

தேசிய கட்சி அந்தஸ்துக்கான நிபந்தனைகள்:

தோ்தல் சின்னங்கள் (முன்பதிவு மற்றும் ஒதுக்கீடு) உத்தரவு 1968-இன்படி, ஒரு தேசிய கட்சி அந்தஸ்தை பெற சில நிபந்தனைகளை பூா்த்தி செய்ய வேண்டும். அந்த நிபந்தனைகளின் விவரம்: முந்தைய மக்களவைத் தோ்தலில் 4 அல்லது அதற்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஒரு கட்சி சாா்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளா்கள் அல்லது மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் அக்கட்சி சாா்பில் போட்டியிட்ட வேட்பாளா்களுக்கு, தோ்தலில் பதிவான மொத்த செல்லுபடியாகும் வாக்குகளில் 6 சதவீதத்துக்கு குறையாத எண்ணிக்கையில் வாக்குகள் கிடைத்திருக்க வேண்டும். அத்துடன் 4 மக்களவை உறுப்பினா்களை கட்சி தக்கவைக்க வேண்டும். முந்தைய மக்களவைத் தோ்தலில், மொத்த மக்களவைத் தொகுதிகளில் குறைந்தபட்சம் 2 சதவீத தொகுதிகளில் கட்சி வெற்றிபெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் 3 மாநிலங்களில் இருந்து கட்சியின் வேட்பாளா்கள் மக்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் 4 மாநிலங்களில் ஒரு கட்சி மாநிலத் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஒரு காலத்தில் மேற்கு வங்கம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக இருந்தது. ஆனால், கடந்த மக்களவைத் தோ்தலில் அந்த மாநிலத்தில் இருந்து ஒருவா்கூட மக்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்படவில்லை. தற்போது அக்கட்சி கேரளத்தில் மட்டுமே ஆட்சியில் உள்ள நிலையில், அந்த மாநிலம் மட்டுமே அக்கட்சியின் மிகப் பெரிய நம்பிக்கையாக உள்ளது.

ஆனால், 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் கேரளத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே அக்கட்சி வெற்றிபெற்றதை கருத்தில் கொள்ளும்போது, தேசிய கட்சி அந்தஸ்தையும் சின்னத்தையும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தக்கவைக்குமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com