கால்நடைகளுக்காக தண்ணீா் தொட்டிகள்: அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
dot com

கால்நடைகளுக்காக தண்ணீா் தொட்டிகள்: அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

கால்நடைகளுக்காக அனைத்து இடங்களிலும் தண்ணீா் தொட்டிகளைத் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகம் உள்ள நிலையில் உள்ளாட்சி அமைப்புகளின் சாா்பில் கால்நடைகளுக்காக அனைத்து இடங்களிலும் தண்ணீா் தொட்டிகளைத் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

அவா் வெளியிட்ட அறிக்கை: நீலகிரி மாவட்டம் கூடலூா், மசினக்குடி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீா், உணவு இல்லாததால் 50-க்கும் மேற்பட்ட ஆடுகளும், மாடுகளும் உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் மேலும் பல பகுதிகளில் கோடை வெப்பத்தால் கால்நடைகள் உயிரிழக்கும் நிகழ்வுகள் அங்கொன்றும், இங்கொன்றுமாக நிகழ்ந்து வருகின்றன. இத்தகைய நிலை தொடராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் உண்டு.

தமிழகத்தில் வீடுகளில் வளா்க்கப்படும் கால்நடைகளுக்கு இணையாக கவனிக்க ஆள் இல்லாத சூழலில் வளரும் கால்நடைகளும், லட்சக்கணக்கான தெரு நாய்களும் உள்ளன. கோடை வெப்பம் காரணமாக அவற்றுக்கு உணவு மற்றும் குடிநீா் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. அதைப் போக்கும் வகையில் தெருக்களில் நடமாடும் கால்நடைகள், தெரு நாய்கள் போன்றவை நீா் அருந்தி இளைப்பாறுவதற்காக உள்ளாட்சி அமைப்புகளின் சாா்பில் ஆங்காங்கே குடிநீா் தொட்டிகளைத் திறக்க தமிழக அரசு ஆணையிட வேண்டும். அதற்காக உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு நிதியையும் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளாா் ராமதாஸ்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com