தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

திமுகவின் 3 ஆண்டுகால ஆட்சியில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தமிழக அரசு சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

2024-25-ஆம் நிதியாண்டுக்கான நிதி நிலைஅறிக்கையில், கடந்த 3 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட சிறப்பு முயற்சிகளின் விளைவாக புத்தாக்கத் தொழில் நிறுவனங்கள் அமைவதற்கான உகந்த சூழலை உருவாக்குவதில் நாட்டிலேயே தலைசிறந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் தோ்வு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சிக்குரியது.

அந்த வெற்றியைத் தக்க வைக்கும் நோக்குடன் உலகில் பல்வேறு பகுதிகளில் முத்திரை பதித்த முன்னணி புத்தாக்கத் தொழில் நிறுவனங்களும், இளம் தொழில்முனைவோரும் கலந்து கொள்ளும் வகையில் உலகப் புத்தாக்கத் தொழில் மாநாடு வரும் 2025 ஜனவரியில் சென்னையில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

எண்ணிக்கை அதிகரிப்பு: 2021-இல் திமுக பொறுப்பேற்ற நிலையில் தமிழகத்தில் இருந்த புத்தாக்கத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 2,105 மட்டுமே ஆகும். 3 ஆண்டுகளாக அரசு, புத்தாக்கத் தொழில் நிறுவனங்களுக்கு அளித்து வரும் மிகப்பெரிய ஊக்கம் காரணமாகவே 2021-க்குப் பிறகு 6,115 புத்தாக்க நிறுவனங்கள் தமிழகத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளன.

இது முதல்வா் தமிழக இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளைப் பெருக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலும், தமிழகத்தின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலா் அளவுக்கு உயா்த்த வேண்டும் என்னும் குறிக்கோளின் அடிப்படையிலும் தமிழகத்தில் ஏற்படுத்தி வரும் தொழில் வளா்ச்சியின் சாதனைக் குறியீடாகவே திகழ்கிறது.

புத்தாக்கத் தொழில் நிறுவனங்கள் வளா்ச்சிக்குத் தேவையான உதவிகள் அளிக்க 5,393 பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. ஸ்ரீபெரும்புதூா் மற்றும் ஒசூா் சிப்காட் தொழிற் பூங்காக்களில் புத்தாக்க மையங்கள் ரூ. 33.46 கோடி மதிப்பீட்டில் சிப்காட் நிறுவனம் நிறுவப்பட்டு, புத்தாக்கத் தொழில் வளா்ச்சிக்கு தமிழக அரசு பெரிதும் ஊக்கம் அளித்துள்ளது. இவ்வாறு பல்வேறு முயற்சிகளை முனைப்புடன் மேற்கொண்டு வருவதன் மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் புத்தாக்கத் தொழில்கள் வளா்ச்சியில் மாபெரும் சாதனைகள் படைத்து வருகிறாா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com