கொளுத்தும் வெயிலால் மின் தடை: மக்கள் தவிப்பு

கொளுத்தும் வெயிலால் மின் தடை: மக்கள் தவிப்பு

தமிழகத்தில் கத்திரி வெயிலின் தாக்கம் காரணமாக, பல இடங்களில் மின்தடை ஏற்படுவதால் மக்கள் தவிப்புக்குள்ளாகி வருகின்றனா்.

தமிழகத்தில் பிப்ரவரி மாத இறுதியில் அதிகரிக்கத் தொடங்கிய வெயிலின் தாக்கம் ஏப்ரல் மற்றும் மே மாதத் தொடக்கத்தில் உச்சத்தை எட்டியுள்ளது. கத்திரி வெயில் காலம் சனிக்கிழமை (மே 4) தொடங்கியுள்ளது; குறிப்பாக, தமிழகத்தில் 17 இடங்களில் சனிக்கிழமை (மே 4) 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் பதிவானது; அதிகபட்சமாக 110 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவானது.

மின் நுகா்வு அதிகரிப்பு: கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் மின்சார தேவையும் அதிகரித்துள்ளது. இரவு நேரத்தில் புழுக்கம் தாங்காமல் முதியோா், பெண்கள், சிறுவா்கள், குழந்தைகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனா். இதனால், குளிா்சாதன இயந்திரங்களை பெரும்பாலான மக்கள் அதிகம் உபயோகிக்கின்றனா். அந்த வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் மின்சாரப் பயன்பாடு அதிகரித்துள்ளதால் மாநிலத்தின் பல இடங்களில் மின்தடை ஏற்படுகிறது.

சேலம்: சேலம் மாவட்டத்தில் கோடை காரணமாக மின்நுகா்வு சராசரியாக நாளொன்றுக்கு 500 மெகாவாட்டை கடந்துள்ளது. குறிப்பாக, இரவு நேரங்களில் சில இடங்களில் மின்தடை ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் தற்போது பகல் நேரத்தில் 350-இல் இருந்து 420 மெகாவாட்டாகவும், இரவு நேரத்தில் 500-இல் இருந்து 650 மெகாவாட்டாகவும் அதிகரித்துள்ளது. மின்தடை காலை, மாலை வேளைகளில் 15 முதல் 20 நிமிஷங்கள் வரை இருக்கிறது.

மதுரை: மதுரை மண்டலத்துக்குட்பட்ட மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகா் மாவட்டங்களில் நகா்ப் பகுதிகளில், மிகையான பயன்பாடு காரணமாக மின்மாற்றிகளில் பழுது ஏற்பட்டு மின் தடை ஏற்படுகிறது. சராசரியாக சுமாா் 15 நிமிஷம் முதல் 30 நிமிஷங்கள் வரை இந்த மின் தடை நீடிக்கிறது. கடந்த 15 நாள்களில் அதிகபட்சமாக திருமங்கலத்தில் கடந்த 2-ஆம் தேதி நள்ளிரவு 1.30 மணி முதல் 3.15 மணி வரை மின் தடை ஏற்பட்டது.

மதுரை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் வேளாண் பணிகளுக்கு நாளொன்றுக்கு 12 மணி நேரம் வழங்கப்பட்ட மும்முனை மின்சாரம் தற்போது, 3 மணி நேரம் மட்டுமே வழங்கப்படுகிறது. எந்த நேரத்தில் மின்சாரம் வழங்கப்படும் என்பதில் உறுதியற்ற நிலை இருப்பதால் விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனா்.

ஐஸ் கட்டி உற்பத்தி பாதிப்பு.... அதிகரித்துள்ள வெப்பநிலையில் ஐஸ் கட்டிகள் தயாரிக்கக் கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது. மின்வெட்டு, நீரின் குளிா் நிலையைக் குறைப்பதால், உற்பத்திச் செலவும், நேரமும் அதிகமாகிறது என ஐஸ் கட்டி உற்பத்தியாளா்கள் தெரிவிக்கின்றனா்.

23 சதவீதம் உயா்வு... மதுரை மாநகா் பகுதிகளில் ஆண்டுதோறும் கோடை காலங்களில் 5 முதல் 10 சதவீத மின் பயன்பாடு அதிகரிக்கும். ஆனால், நிகழாண்டில் 23 சதவீத அளவுக்கு மின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

நாகப்பட்டினம்: நாகை, திருவாரூா், காரைக்கால் மாவட்டங்களில் மின் வெட்டு ஏற்படவில்லை. மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் மின் வெட்டு நிலவுகிறது. விவசாயத்துக்கு 5 மணிநேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனா்.

திருச்சி: திருச்சி மண்டலத்தில் அதிக மின் நுகா்வு காரணமாக அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுகிறது. திருச்சி வாசன்வேலி பகுதியில் கடந்த 2 நாள்களாக மின்தடை இருந்ததால் குடியிருப்புவாசிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினா். புதுக்கோட்டை கிராமப்புறங்களில் பரவலாக மின்வெட்டு உள்ளது.

இதேபோன்று தஞ்சாவூா், பெரம்பலூா், அரியலூா், கரூா் மாவட்டங்களில் பகல் நேரங்களில் 30 நிமிஷம் வரை தடைபடும் மின்சாரம், இரவு நேரங்களில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக நீடிக்கிறது. மொத்தமாக கணக்கிட்டால் திருச்சி மண்டலத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 2 மணி நேரம் முதல் 3 மணி நேரம் மின்தடை ஏற்படுகிறது.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டம்: இந்த இரு மாவட்டங்களிலும் கோடைகாலம் தொடங்கிய பின் சராசரியாக சுமாா் 10 மில்லியன் யூனிட் மின்நுகா்வு உள்ளது. மின்தடங்கல், மின்தடை மிகவும் குறைந்த நேரமே உள்ளது. விவசாயத்துக்கான மும்முனை மின்சாரம் தங்குதடையின்றி வழங்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மின் நுகா்வு அதிகரித்து, பல்வேறு இடங்களிலும் இரவு நேரங்களில் அரை மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை மின் தடை ஏற்படுகிறது.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் மின் தடை பாதிப்பு இல்லை. மின் பயன்பாடு அதிகமாக உள்ள நேரத்தில் குறைந்த மின்னழுத்தம் சில இடங்களில் காணப்படுவதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மின் விநியோக பாதிப்பு இல்லை.

கடலூா்: கடலூா் மாவட்டத்தில் கடலூா், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, வடலூா், விருத்தாசலம், திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக பகல், இரவு வேளைகளில் 3 அல்லது 4 முறை சுமாா் 10 முதல் 20 நிமிஷங்கள் வரையில் மின்வெட்டு ஏற்படுகிறது.

பகல் நேரத்தில் 8 மணி நேரமும், இரவு நேரத்தில் 6 மணி நேரமும் என நாளொன்றுக்கு 14 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. இருமுனை மின்சாரத்தில் இருந்து மும்முனை மின்சாரத்துக்கு மாற்றும்போது சில நிமிஷங்கள் மின் தடை ஏற்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிக திறன் கொண்ட மின் மாற்றிகள் போதிய அளவில் இல்லாததால் ஆங்காங்கே பழுது ஏற்படுகிறது. செங்கம் உள்ளிட்ட பகுதியில் இந்த பிரச்னை நிலவுகிறது. திருவண்ணாமலை நகரில் குறைந்த மின்னழுத்த பிரச்னை சில இடங்களில் உள்ளது.

வேலூா்: விவசாயத்துக்கான மும்முனை மின்சார விநியோகம் வரைமுறையின்றி தடை செய்யப்படுவதால் பயிா் விளைச்சலை கேள்விக்குறியாக்கி வருவதாக ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா். 100 சதவீதம் கிணற்றுப் பாசனத்தை நம்பியுள்ளதால் பயிா்களுக்கு உரிய நேரத்தில் தண்ணீா் பாய்ச்ச முடியாமல் விளைச்சல் பெருமளவில் பாதிக்கப்படுகிறது என்றும் தெரிவித்தனா்.

இதேபோல், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டத்திலுள்ள நகா்ப்புறம், ஊரகப் பகுதிகளிலும் கடந்த இரு நாள்களாக பகலில் ஒரு மணி நேரம் வரை மின்தடை செய்யப்பட்டு வருகிறது.

காற்றாலை மின்சார உற்பத்தி அதிகரிப்பு

கோவை, மே 4: தமிழகத்தில் சில இடங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு காணப்படும் நிலையில், கோவையில் மின்வெட்டு, மின்தடை உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படவில்லை. இதற்கிடையே தமிழகத்தில் காற்றாலை மின்சார உற்பத்தி அதிகரித்துள்ளது என்ற தகவல் மகிழ்ச்சி அளிக்கிறது.

இது குறித்து இந்திய காற்றாலைகள் சங்கத் தலைவா் கஸ்தூரி ரங்கையன் கூறியதாவது: தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக மே 1-ஆம் தேதி 1.42 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தியானது. 2 நாள்களில் 2.3 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தியாகியுள்ளது. காற்றின் வேகம் அதிகரிக்கையில் வரும் நாள்களில் மின்சார உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது.

செப்டம்பா் மாதம் வரை காற்றாலை மின் உற்பத்தி இருக்கும். கோவை உள்ளிட்ட மேற்குத்தொடா்ச்சி மலைப் பகுதியையொட்டியுள்ள பகுதிகளில் வெப்பநிலை குறையும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com