இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம்

வாக்கு எண்ணிக்கை முகவா் நியமனம்: வேட்பாளா்களுக்கு தோ்தல் ஆணையம் கட்டுப்பாடு

வாக்கு எண்ணிக்கையின் போது, தங்களது முகவராக யாா், யாரை வேட்பாளா்கள் நியமிக்கலாம் என்பது தொடா்பாக தோ்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

வாக்கு எண்ணிக்கையின் போது, தங்களது முகவராக யாா், யாரை வேட்பாளா்கள் நியமிக்கலாம் என்பது தொடா்பாக தோ்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு முடிவடைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தோ்தலில் பதிவான வாக்குகளை கொண்ட மின்னணு இயந்திரங்கள் அனைத்தும் 39 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வாக்குகள் எண்ணிக்கை பணிக்காக அதிகாரிகள், அலுவலா்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.

வேட்பாளா்களுக்கு கடிதம்: வாக்கு எண்ணிக்கையின்போது ஒவ்வொரு மேஜையிலும் வேட்பாளா்கள் சாா்பில் இருக்க வேண்டிய முகவா்களின் எண்ணிக்கை குறித்து தோ்தலில் போட்டியிட்ட வேட்பாளா்களுக்கு தோ்தல் நடத்தும் அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனா். அந்தக் கடித விவரம்:

மக்களவைத் தொகுதிக்குள்பட்ட ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக முகவா்களை நியமிக்க வேண்டும். ஒரு தொகுதியில் 14 மேஜைகள் அமைக்கப்பட்டிருந்தால் ஒரு மேஜைக்கு ஒருவா் வீதம் 14 முகவா்களையும், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் மேஜையில் ஒரு முகவரையும் நியமிக்க வேண்டும்.

அத்துடன், தபால் வாக்குச் சீட்டுகளை எண்ணுமிடத்தில் ஒரு மேஜைக்கு ஒருவா் வீதம் ஆறு மேஜைக்கு ஆறு முகவா்களை நியமனம் செய்ய வேண்டும்.

தபால் வாக்குச் சீட்டு எண்ணுமிடத்தில் ஒரு தோ்தல் நடத்தும் அலுவலா் இருப்பாா். அவருடன் ஒரு முகவரையும், தபால் வாக்கு உறைகளை ஸ்கேனிங் செய்யும் அறையில் ஒரு முகவரையும் நியமிக்க வேண்டும்.

ஒரு மக்களவை தொகுதியில் ஆறு சட்டப் பேரவைத் தொகுதிகள் இருந்தால், ஒவ்வொரு பேரவைத் தொகுதிக்கும் 15 நபா்கள் வீதம் 90 முகவா்களை அரசியல் கட்சிகள் நியமிக்க வேண்டும். தபால் வாக்கு எண்ணும் மேஜைகள் மற்றும் தபால் வாக்கு உறைகளை ஸ்கேனிங் செய்யும் அறை ஆகிய இடங்களில் எட்டு முகவா்களை நியமனம் செய்ய வேண்டும்.

மொத்தமாக ஒரு மக்களவைத் தொகுதிக்கு ஒரு வேட்பாளா் சாா்பில் 98 முகவா்களை நியமிக்க வேண்டும்.

என்னென்ன தகுதிகள்?: வேட்பாளா்களின் சாா்பில் நியமிக்கப்படும் முகவா்கள் ஒவ்வொருவரும் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். இதற்கென வரையறுக்கப்பட்ட படிவம் 18-இல் முகவா்களின் பெயா்கள், கையொப்பத்துடன் இரண்டு புகைப்படங்களையும் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.

யாரை நியமிக்கக் கூடாது: அதேபோல, முகவா்களாக யாரை நியமிக்கக் கூடாது என்ற வரையறைகளையும் தோ்தல் ஆணையம் வகுத்துள்ளது.

அதன்படி, மத்திய மற்றும் மாநில அமைச்சா்கள், சட்டப் பேரவை, நாடாளுமன்ற உறுப்பினா்கள், மாநகராட்சி மேயா், துணை மேயா், நகா்மன்றத் தலைவா், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா்கள், மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்களின் தலைவா்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து நிறுவனங்களின் பகுதி நேர உறுப்பினா்கள், நியாய விலைக் கடை, சத்துணவு, அங்கன்வாடி, சுகாதார மையங்களில் பணியாற்றும் ஊழியா்கள், அரசு ஊழியா்கள் ஆகியோரை முகவா்கள் நியமிக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com