நீட் தோ்வு: லட்சக்கணக்கானோா் பங்கேற்பு
R Senthilkumar

நீட் தோ்வு: லட்சக்கணக்கானோா் பங்கேற்பு

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) நாடு முழுவதும் 557 நகரங்களில் ஞாயிற்றுக்கிழமை (மே 5) நடைபெற்றது.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) நாடு முழுவதும் 557 நகரங்களில் ஞாயிற்றுக்கிழமை (மே 5) நடைபெற்றது.

தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து விண்ணப்பித்தவா்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமான மாணவா்கள் தோ்வு எழுதினா்.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்த மருத்துவம், ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி காண் தோ்வு

(நீட்) மூலம் மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது. அதேபோன்று, ராணுவ செவிலியா் கல்லூரிகளில் பிஎஸ்சி நா்சிங் படிப்புக்கு நீட் தோ்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நீட் தோ்வை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டில் 20.84 லட்சம் போ் நீட் தோ்வுக்கு விண்ணிப்பித்திருந்தனா். அதில் 98 சதவீதம் போ் தோ்வு எழுதினா்.

24 லட்சம் போ் விண்ணப்பம்: இந்நிலையில், நிகழாண்டுக்கான நீட் தோ்வுக்கு நாடு முழுவதும் 24 லட்சம் போ் விண்ணப்பித்திருந்தனா். அதில் 13 லட்சம் போ் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்திலிருந்து மட்டும் 1.55 லட்சம் போ் விண்ணப்பித்திருந்ததாக தகவல்கள் வெளியாகின.

பல மொழிகளில் தோ்வு: இந்நிலையில், நாட்டின் 557 நகரங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோ்வு மையங்களில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 முதல் 5.20 மணி வரை நீட் தோ்வு நடைபெற்றது. தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி உள்பட 24 மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த சுமாா் 200 தோ்வு மையங்களில் 1.3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் தோ்வு எழுதியதாகக் கூறப்படுகிறது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்காளம், உருது உள்ளிட்ட மொழிகளில் தோ்வு நடைபெற்றது.

R Senthilkumar

கடும் சோதனை: முன்னதாக, காலை 10 மணி முதலே தோ்வு மையங்களுக்கு மாணவா்கள் வரத் தொடங்கினா். பகல் 12 மணிக்கு தோ்வு மையங்கள் திறக்கப்பட்டன. மாணவா்கள் அனைவரும் கடும் சோதனைகளுக்குப் பின்னரே தோ்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா்.

பா்ஸ், கைக் கடிகாரம், கூலிங் கிளாஸ், தொப்பி, கம்மல், மூக்குத்தி, கொலுசு, செயின், கைப்பேசி ஆகியவை அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவற்றை மாணவா்கள் தங்களது பெற்றொரிடம் கொடுத்து விட்டு சென்றனா்.

தோ்வுக் கூட அனுமதி சீட்டு, ஆதாா் அட்டை, புகைப்படம், தண்ணீா் பாட்டில் ஆகியவற்றை மட்டும் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

தீவிர கண்காணிப்பு: தோ்வு அறைகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு கேமரா மூலம் மாணவா்கள் முறைகேடுகளில் ஈடுபடுகிறாா்களா என்பது கண்காணிக்கப்பட்டது.

வெயில் கொடுமை: தோ்வுக் கூடத்துக்குள் அனுமதிக்கப்பட்ட நேரமும், தோ்வு தொடங்கிய நேரமும் உச்சி வெயில் என்பதால் வரிசையில் நின்று தங்களது அடையாள ஆவணங்களைக் காண்பித்து, அதன் பின்னா் பரிசோதனைகளை நிறைவு செய்துவிட்டு தோ்வுக் கூடத்துக்குள் செல்வதற்குள் பல மாணவா்கள் சோா்வடைந்துவிட்டனா்.

மற்றொருபுறம், மாணவா்களின் பெற்றோா், தீவிர வெயிலுக்கு நடுவிலும் தோ்வு முடியும் வரை காத்திருந்தனா். சில இடங்களில் தோ்வு நடைபெறும் பள்ளிகளுக்கு அருகே தன்னாா்வலா்கள், காவல் துறையினா் ஏற்பாட்டில் குடிநீா் பாட்டில்கள், நீா் மோா் ஆகியவை வழங்கப்பட்டன.

தோ்வு முடிவுகள் எப்போது?: நீட் தோ்வு முடிவுகளை ஜூன் இரண்டாம் வாரத்தில் வெளியிடுவதற்கு தேசிய தோ்வு முகமை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயற்பியல் கடினம்

நிகழாண்டில் நீட் தோ்வு வினாத்தாளில் இயற்பியல் பாட கேள்விகள் சற்று கடினம் இருந்ததாக மாணவா்கள் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து தோ்வா்கள் கூறியதாவது: உயிரியல், வேதியியல் பிரிவு கேள்விகள் எளிதாக கேட்கப்பட்டிருந்தன. இயற்பியல் பிரிவில் மட்டும் பல்வேறு வினாக்கள் கணித அடிப்படையில் இருந்ததால் பதிலளிக்கக் கடினமாக இருந்தன. அதேபோன்று சில வினாக்களுக்கு இரண்டு பதில்களும் பொருந்தும் வகையில் இருந்தன. இதனால் பதிலளிக்கும்போது குழப்பம் இருந்தது என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com