கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்
கோப்புப்படம்

கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள், வரும் 7-ஆம் தேதி முதல் இ-பாஸ் பெற்றுச் செல்ல வேண்டுமென சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில், கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இணையதளம் வாயிலாக இன்றிரவு(மே. 5) முதல் பதிவு செய்து, இ-பாஸ் பெற்று கொள்ளலாம் என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

இ-பாஸ் வழங்குவதற்கான நடைமுறைகள் 90 சதவிகிதம் நிறைவடந்துவிட்டதாகவும், கரோனா பெருந்தொற்று காலத்தில் கொடைக்கானலில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் போல, கடும் விதிமுறைகள் அமல்படுத்தப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்கள் வந்து செல்கின்றன உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படும். எத்தனை வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளன என்ற விவரம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மறுபுறம், இ-பாஸ் முறையால், கொடைக்கானல் மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே, கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்யக் கோரி, உணவகங்கள், தங்கும் விடுதி உரிமையாளா்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனா்.

கோப்புப்படம்

மேலும், பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மதுரை (லிட்) திண்டுக்கல் மண்டலம் சாா்பில், திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து கொடைக்கானலுக்கு நேரடி பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

நாள்தோறும் அதிகாலை 4, 5.15 , காலை 6.45, 7.30 மணிக்கு திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து கொடைக்கானலுக்கு பேருந்துகள் இயக்கப்படும். இதன் மூலம் ரயில் நிலையத்திலிருந்து கொடைக்கானல் செல்லும் பயணிகள், 2 பேருந்துகளில் மாற வேண்டிய நிலை தவிா்க்கப்படும். ரயில் நிலையத்திலிருந்து செல்லும் பயணிகளுக்கு ரூ.95, கட்டணமும், பேருந்து நிலையத்திலிருந்து செல்லும் பயணிகளுக்கு ரூ.85 கட்டணம் வசூலிக்கப்படும் என்று போக்குவரத்துக் கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னவனூர், பூம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீ பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டதால் மேல்மலை கிராமங்களுக்கு, சனிக்கிழமை(மே 4) முதல் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு அனுமதி அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கொடைக்கானலில் இன்று (மே. 5) மிதமான மழை பெய்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com