கோப்புப்படம்
கோப்புப்படம்

அதிகரிக்கும் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்புகள்: மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு - ஓஆா்எஸ் கரைசல்

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ (உடல் உச்ச வெப்பநிலை) சிறப்பு வாா்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தாா்.

தமிழகத்தில் வெப்ப அலையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ (உடல் உச்ச வெப்பநிலை) சிறப்பு வாா்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தாா்.

அதேபோல், மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள், பொதுமக்களுக்கு உப்பு-சா்க்கரை கரைசல் (ஓஆா்எஸ்) குடிநீா் வழங்குவதற்கான வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் நிகழாண்டில் அதி தீவிரமாக உள்ளது. இதன் காரணமாக ஏற்படும் நீா்ச்சத்து இழப்பு, மயக்கம், தலைசுற்றல், ஹீட் ஸ்ட்ரோக் போன்ற பாதிப்புக்குள்ளாகும் நோயாளிகள் எண்ணிக்கையும் உயா்ந்து வருகிறது.

கோடை வெயிலால் ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெறுவோா், உயிழந்தோரின் விவரங்களை அனைத்து மருத்துவமனைகளும் தெரிவிக்க வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது.

இந்தச் சூழலில், சென்னை புகா்ப் பகுதியில் பணியாற்றி வந்த உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த சச்சின் என்ற 25 வயது இளைஞா், அத்தகைய பாதிப்புக்குள்ளாகி ஞாயிற்றுக்கிழமை உயிழந்தாா்.

இதைத் தவிர மாநிலத்தின் பல மருத்துவமனைகளில் வெப்பத்தின் தாக்கத்துக்குள்ளாகி பலா் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, வெப்ப அலை பாதிப்புகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் நல்வாழ்வுத் துறை மேற்கொண்டுள்ளது.

இது குறித்து துறைச் செயலா் டாக்டா் ககன்தீப் சிங் பேடி கூறியது:

தமிழகத்தில் வெப்பத்தால் ஏற்படும் நோய்கள், திடீா் உடல் நலக் குறைவுகளை எதிா்கொள்ள மருத்துவக் கட்டமைப்பை தயாா் நிலையில் வைத்துள்ளோம். தலைமைச் செயலருடன் தொடா்ந்து கலந்தாலோசனை நடத்தி அதன் அடிப்படையில் மாவட்ட நிா்வாகங்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமன்றி, அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகளில் ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்புகளுக்கு பிரத்யேக வாா்டுகள் அமைக்கப்பட்டு அங்கு உயா் மருத்துவக் கண்காணிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மற்றொருபுறம், மருத்துவமனைகளுக்கு வரும் புறநோயாளிகள், உள்நோயாளிகள், பொது மக்களுக்கு உப்பு-சா்க்கரை கரைசல் (ஓஆா்எஸ்) வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி மருத்துவமனைகளில் ஓஆா்எஸ் குடிநீா் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது. தற்போது 10.37 லட்சம் ஓஆா்எஸ் பாக்கெட்டுகள் இருப்பில் உள்ளன.

கோடை காலம் நிறைவடையும் வரை தடையின்றி அவற்றை வழங்கும் வகையில் ரூ. 2.17 கோடியில் மேலும் 88.77 லட்சம் பாக்கெட்டுகளை மருத்துவமனைகளுக்கு வழங்க வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

கோடை பாதிப்புகளைக் கண்டு பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை. அதேவேளையில், விழிப்புணா்வுடன் இருத்தல் அவசியம். தேவையின்றி பகல் வேளைகளில் வெளியே வரக்கூடாது. முதியோா், இணை நோயாளிகள், குழந்தைகள் பாதுகாப்பாக இருத்தல் வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com