உதகை, கொடைக்கானல்: வாகனங்கள் இன்றுமுதல் இ-பாஸ் பெறலாம்

இணையதளத்தில் இ-பாஸ் பெற்றுக்கொண்டு உதகை, கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வரலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது
உதகை, கொடைக்கானல்: வாகனங்கள் இன்றுமுதல் இ-பாஸ் பெறலாம்

இணையதளத்தில் இ-பாஸ் பெற்றுக்கொண்டு உதகை, கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வரலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. வேறு எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

உதகை மற்றும் கொடைக்கானலுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இணையதளத்தின் வழியே இ-பாஸ் வழங்கும் முறையைச் செயல்படுத்த வேண்டுமென உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே, கோடை விடுமுறையை கழிக்கவும், சுற்றிப் பாா்க்கவும் செல்லும் பயணிகள் இ-பாஸ் பெற விண்ணப்பிக்க வேண்டும்.

வேறு தடையில்லை: சுற்றுலாப் பயணிகள், வணிக ரீதியாக வருபவா்களுக்கு வேறு எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. ஆனால், இ-பாஸ் பதிவு செய்து பயணிக்க வேண்டும். இதற்கு இணையதளத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். திங்கள்கிழமை காலை 6 மணி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது.

எப்படி விண்ணப்பிக்கலாம்? வெளிநாட்டுப் பயணிகள் தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். உள்நாட்டுப் பயணிகள் தங்களுடைய கைப்பேசி எண்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பிக்கும்போது தானாகவே இ-பாஸ் கிடைத்து விடும். ஜூன் 30-ஆம் தேதி வரை இ-பாஸ் நடைமுறை அமலில் இருக்கும்.

இ-பாஸ் அனுமதி காரணமாக பொதுமக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com