17 இடங்களில் சதமடித்தது வெயில்: தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும்

17 இடங்களில் சதமடித்தது வெயில்: தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும்

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை 17 இடங்களில் வெப்ப அளவு 100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து பதிவானது.

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை 17 இடங்களில் வெப்ப அளவு 100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து பதிவானது. வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் திங்கள்கிழமை (மே 6) அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். அதேநாளில், வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

வெப்ப அளவு குறையும்: செவ்வாய் முதல் வியாழக்கிழமை வரை (மே 7-9) 3 நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் என படிப்படியாக குறையும்.

அதன்படி, அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 109 டிகிரி ஃபாரன்ஹீட் வரையும், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வரையும் இருக்கும்.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி பதிவான வெயில் அளவு (டிகிரி ஃபாரன்ஹீட்): பரமத்தி வேலூரில் 110.66, ஈரோடு - 110.12, திருப்பத்தூா் - 107.96, வேலூா் - 107.78, மதுரை விமானநிலையம் - 107.24, திருத்தணி, திருச்சி (தலா) - 107.06, பாளையங்கோட்டை, சேலம் (தலா) - 105.8, தஞ்சாவூா், மதுரை நகரம் (தலா) - 104, சென்னை மீனம்பாக்கம் - 102.92, தருமபுரி - 101.3, கோவை - 100.76, நாகப்பட்டினம் - 100.58, பரங்கிப்பேட்டை - 100.4.

6 நாள்கள் மழைக்கு வாய்ப்பு: தமிழகத்தையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால், ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

ஞாயிற்றுக்கிழமை காலை வரை பதிவான மழை அளவு (மிமீ) : பென்னாகரம் (தருமபுரி), ஆதாா் எஸ்டேட் (நீலகிரி) தலா 50, அழகரை எஸ்டேட் (நீலகிரி) 40, தாளவாடி (ஈரோடு), தருமபுரி, குன்னூா் (நீலகிரி), உதகமண்டலம் (நீலகிரி), ஒகேனக்கல் (தருமபுரி) தலா 30, குன்னூா் (நீலகிரி), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), கேத்தி (நீலகிரி), மேட்டூா் (சேலம்), பாலக்கோடு (தருமபுரி), காட்பாடி (வேலூா்), குண்டேரிப்பள்ளம் (ஈரோடு), கோடநாடு (நீலகிரி) தலா 20 மிமீ.

மேலும், திங்கள்கிழமை (மே 6) முதல் மே 11 வரை 6 நாள்களுக்கு தமிழகத்தில்  ஓரிரு  இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளது.

குறிப்பாக, செவ்வாய், புதன்கிழமைகளில் (மே 7, 8) நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகா் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: மே 6, 7-ஆகிய தேதிகளில், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு கிமீ வேகத்திலும் வீசக்கூடும்.

இதனால், அப்பகுதிகளுக்கு மீனவா்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

சென்னையில்...: சென்னை மற்றும் புகா் பகுதிகளில் மே 6, 7-ஆகிய தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com