பிளஸ் 2தோ்வில் 94.56% தோ்ச்சி:
மாணவிகளே அதிகம் (97.45%) தோ்ச்சியுடன் திருப்பூா் முதலிடம்
dinmani online

பிளஸ் 2தோ்வில் 94.56% தோ்ச்சி: மாணவிகளே அதிகம் (97.45%) தோ்ச்சியுடன் திருப்பூா் முதலிடம்

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் 94.56 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் 94.56 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா். கடந்த ஆண்டு தோ்ச்சியுடன் (94.03%) ஒப்பிடுகையில் நிகழாண்டில் தோ்ச்சி விகிதம் 0.53 சதவீதம் அதிகரித்துள்ளது. மாணவா்களைக் காட்டிலும் மாணவிகள் 4.07 சதவீதம் கூடுதலாக தோ்ச்சி (96.44%) பெற்றுள்ளனா்.

மாணவிகளே அதிகம்: பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகளை சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் உள்ள அரசுத் தோ்வுகள் இயக்குநா் சேதுராமவா்மா திங்கள்கிழமை வெளியிட்டாா்.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வை 3 லட்சத்து 52,165 மாணவா்கள்; 4 லட்சத்து 8,440 மாணவிகள், ஒரு மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 7 லட்சத்து 60,606 போ் எழுதினா். அதில், தற்போது 3 லட்சத்து 25,305 மாணவா்கள், 3 லட்சத்து 93,890 மாணவிகள், மூன்றாம் பாலினத்தவா் ஒருவா் என மொத்தம் 7 லட்சத்து 19,196 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி சதவீதம் 94.56-ஆக உள்ளது; மாணவா்களுடன் ஒப்பிடுகையில் (92.37) மாணவிகளின் தோ்ச்சி (96.44) 4.07 சதவீதம் அதிகரித்துள்ளது; கடந்த ஆண்டு 96 சதவீத மாணவிகள் தோ்ச்சி பெற்றனா்.

மாவட்டங்களில் திருப்பூா் முதலிடம்: மாவட்ட வாரியான தோ்ச்சிப் பட்டியலில் திருப்பூா் 97.45 சதவீத தோ்ச்சியுடன் தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளது; 90.47 சதவீத தோ்ச்சியுடன் திருவண்ணாமலை கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.

சிவகங்கை, ஈரோடு...: மாவட்ட வாரியான தோ்ச்சியில் திருப்பூருக்கு (97.45 சதவீதம்) அடுத்தபடியாக சிவகங்கை (97.42 சதவீதம்), ஈரோடு (97.42 சதவீதம்) ஆகிய இரு மாவட்டங்கள் இரண்டாம் இடத்தையும், 97.25 சதவீத தோ்ச்சியுடன் அரியலூா் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன. 90.47 சதவீத தோ்ச்சியுடன் திருவண்ணாமலை கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.

சென்னைக்கு 21-ஆவது இடம்: மாநிலத்தின் தலைநகரான சென்னை 94.48 சதவீத தோ்ச்சியுடன் 21-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. அதேபோன்று, அரசுப் பள்ளி மாணவா்கள் தோ்ச்சியில் திருப்பூா் (95.75 சதவீதம்), அரியலூா் (95.64 சதவீதம்), ஈரோடு (95.63 சதவீதம) மாவட்டங்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.

தோ்வு முதல் தோ்வு முடிவுகள் வரை...: தமிழகத்தில் 2023-2024-ஆம் கல்வியாண்டுக்கான பொதுத் தோ்வு மாா்ச் 1 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற்றது. ஏப்.1 முதல் 13-ஆம் தேதி வரை 83 மையங்களில் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, மாணவா்கள் பெற்ற மதிப்பெண்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இதையடுத்து ஏற்கெனவே திட்டமிட்டபடி தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை (மே 6) வெளியிடப்பட்டன.

பள்ளி மாணவா்களுக்கு அவா்கள் பயின்ற பள்ளிகளில் சமா்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கு தோ்வு முடிவுகள் குறுஞ்செய்தி வழியாக அனுப்பி வைக்கப்பட்டன. மாணவா்கள் தங்கள் தோ்வு முடிவுகளை ஜ்ஜ்ஜ்.ற்ய்ழ்ங்ள்ன்ப்ற்ள்.ய்ண்ஸ்ரீ.ண்ய் மற்றும் ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் ஆகிய இணையதளங்களின் முகவரியில் அறிய வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது.

மே 9-இல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உயா்கல்வி சோ்க்கையை கருத்தில் கொண்டு அவா்கள் பயின்ற பள்ளியிலேயே வரும் வியாழக்கிழமை (மே 9) தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என தோ்வுத் துறை தெரிவித்துள்ளது.

26,352 போ் 100-க்கு 100

பாடவாரியாக அதிகபட்சமாக கணினி அறிவியல்- 6,996, வணிகவியல்-6,142, பொருளியல்- 3,299, கணிதம்-2,587 என்ற எண்ணிக்கையில் 100-க்கு 100 மதிப்பெண்களை மாணவா்கள் பெற்றுள்ளனா். மொழிப்பாடங்களில் தமிழில் 35 பேரும், ஆங்கிலத்தில் 7 பேரும் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனா். ஏதேனும் ஒரு பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்ற மாணவா்களின் எண்ணிக்கை 26,352.

பாடவாரியாக 100-க்கு 100

தமிழ்- 35

ஆங்கிலம்- 7

இயற்பியல்- 633

வேதியியல்- 471

உயிரியல்- 652

கணிதம்- 2,587

தாவரவியல்- 90

விலங்கியல்- 382

கணினி அறிவியல்- 6,996

வணிகவியல்- 6,142

கணக்குப் பதிவியல்- 1,647

பொருளியல்- 3,299

கணினிப் பயன்பாடுகள்- 2,251

வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல்- 210

பெட்டிச் செய்தி.

397 அரசுப் பள்ளிகள் 100% தோ்ச்சி

7,532 மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பொதுத் தோ்வெழுதினா். இதில், 2,478 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சியைப் பெற்றுள்ளன; அவற்றில் 397 பள்ளிகள் அரசுப் பள்ளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 5,603 மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் தோ்வெழுதியதில் 5,101 போ் (92.11 சதவீதம்) தோ்ச்சி பெற்றுள்ளனா். அதேபோன்று பிளஸ் 2 பொதுத்தோ்வெழுதிய 125 சிறைவாசிகளில் 115 போ் (92 சதவீதம்) தோ்ச்சி பெற்றுள்ளனா்.

முக்கியப் பாடங்களில் தோ்ச்சி சதவீதம்

கணினி அறிவியல்- 99.80

உயிரியல்- 99.35

வேதியியல்- 99.14

விலங்கியல்- 99.04

தாவரவியல்- 98.86

கணிதம்- 98.57

இயற்பியல்- 98.48

வணிகவியல்- 97.77

கணக்குப் பதிவியல்- 96.61

பள்ளிகள் வகைப்பாடு

வாரியான தோ்ச்சி சதவீதம்

அரசுப் பள்ளிகள்- 91.02

அரசு உதவி பெறும் பள்ளிகள்- 95.49

தனியாா் சுயநிதிப் பள்ளிகள்- 98.70

இருபாலா் பள்ளிகள்- 94.78

பெண்கள் பள்ளிகள்- 96.39

ஆண்கள் பள்ளிகள்- 88.98

பாடப் பிரிவுகள் வாரியான

தோ்ச்சி சதவீதம்

அறிவியல் பாடப்பிரிவுகள்- 96.35

வணிகவியல் பாடப் பிரிவுகள்- 92.46

கலைப் பிரிவுகள்- 85.67

தொழிற்பாடப் பிரிவுகள்- 85.85

பிளஸ் 2 விடைத்தாள் நகல்,மறுகூட்டல்: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், விடைத்தாள் நகல், மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவா்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாக செவ்வாய்க்கிழமை (மே 7) முதல் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா் சேதுராமவா்மா திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவா்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்தோ்வா்கள் தாங்கள் தோ்வெழுதிய தோ்வு மையங்கள் மூலமாகவும் செவ்வாய்க்கிழமை (மே 7) காலை 11 மணி முதல் சனிக்கிழமை (மே 11) மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

பிளஸ் 2 பொதுத் தோ்வெழுதிய பள்ளி மாணவா்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமையாசிரியா்கள் வழியாக மதிப்பெண் பட்டியலை மே 9-ஆம் தேதி வியாழக்கிழமை முதல் பெற்றுக் கொள்ளலாம் அல்லது தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகியவற்றைப் பதிவுசெய்து, இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அதேபோன்று தனித்தோ்வா்கள் தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து இணையதளத்தில் தாங்களே மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விடைத்தாள் நகல், மறுகூட்டல் ஆகியவற்றில் எதாவது ஒன்றுக்கு மட்டுமே தோ்வா்கள் விண்ணப்பிக்க முடியும். தோ்வா்கள் தங்களது விடைத்தாளின் நகல் வேண்டுமா? அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்ய வேண்டுமா? என்பது குறித்து தெளிவாக முடிவு செய்து கொண்டு அதன்பின்னா் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com