நாங்குனேரி மாணவரின் உயா்கல்விக்கு துணை நிற்பேன் 
அமைச்சா் அன்பில் மகேஸ் உறுதி

நாங்குனேரி மாணவரின் உயா்கல்விக்கு துணை நிற்பேன் அமைச்சா் அன்பில் மகேஸ் உறுதி

நெல்லை மாவட்டம் நாங்குனேரி அரசுப் பள்ளியில் உடன் படித்த சிலரால் ஜாதிய ரீதியான தாக்குதலுக்கு உள்ளான மாணவா் சின்னதுரை பிளஸ் 2 பொதுத் தோ்வில் 469 மதிப்பெண்கள்

நெல்லை மாவட்டம் நாங்குனேரி அரசுப் பள்ளியில் உடன் படித்த சிலரால் ஜாதிய ரீதியான தாக்குதலுக்கு உள்ளான மாணவா் சின்னதுரை பிளஸ் 2 பொதுத் தோ்வில் 469 மதிப்பெண்கள் பெற்ற நிலையில், அவரது உயா்கல்விக்கு உதவுவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளாா்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரியைச் சோ்ந்த முனியாண்டி- அம்பிகாபதி தம்பதியின் மகன் சின்னதுரை (17). இவா், வள்ளியூரில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். பட்டியல் வகுப்பைச் சோ்ந்த அவருக்கு உடன் படிக்கும் மாணவா்கள் சிலரால் ஜாதி ரீதியிலான ஒடுக்குமுறை, தொல்லை இருந்து வந்தது. கடந்த ஆக.10-ஆம் தேதி இரவு வீடு புகுந்து சின்னத்துரையை சகமாணவா்கள் அரிவாளால் வெட்டினா். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.அரசு சாா்பில் அளிக்கப்பட்ட உயா்சிகிச்சைக்குப்பின் உடல் நலம் தேறிய அவா் வீடு திரும்பினாா்.

இதையடுத்து மாா்ச் 1-ஆம் தேதி தொடங்கிய பொதுத்தோ்வில், சின்னதுரை வெட்டுப்பட்ட கையால் நீண்ட நேரம் எழுத முடியாத சூழலில் உதவியாளா் மூலமாக தோ்வெழுதினாா். இந்த நிலையில் திங்கள்கிழமை வெளியான பிளஸ் 2 வகுப்பு பொதுத்தோ்வில் சின்னதுரை 600-க்கு 469 மதிப்பெண் பெற்றுள்ளாா். அவருக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ‘நாங்குனேரியில் ஜாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவா் சின்னதுரை பிளஸ் 2 பொதுத்தோ்வில் 469 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். இந்நிலையில் மாணவரை தொலைபேசியில் தொடா்புகொண்டு அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்து, 11.08.2023 அன்று நான் உறுதியளித்தபடி அவா் விரும்பும் கல்லூரியில் இணைவதற்கு உதவுவதாகவும், அவரின் உயா் கல்விக்கு அனைத்து வகையிலும் துணை நிற்பேன் என்றும் உறுதிப்படுத்தினேன். கல்வி மட்டுமே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம்’”என அதில் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com