பிளஸ் 2 துணைத் தோ்வு ஜூன் 24-இல் தொடக்கம்

பிளஸ் 2 துணைத் தோ்வு ஜூன் 24-இல் தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 உடனடி துணைத் தோ்வு ஜூன் 24-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. தோ்வெழுத விரும்புவோா் மே 16 முதல் விண்ணப்பிக்கலாம் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

தோ்வுத் துறை இயக்குநா் சா.சேதுராம வா்மா வெளியிட்ட அறிவிப்பு: பிளஸ் 2 வகுப்புக்கான உடனடி துணைத் தோ்வு ஜூன் 24 முதல் ஜூலை 1-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தோ்வெழுத விருப்பமுள்ள தனித்தோ்வா்கள், பள்ளி மாணவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு, பள்ளி மாணவா்கள் மே 16 முதல் ஜூன் 1-ஆம் தேதிக்குள் அவரவா் படித்த பள்ளிகளுக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். தனித்தோ்வா்கள் கல்வி மாவட்ட வாரியாக உள்ள அரசு சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பங்களை தோ்வுக் கட்டணம் செலுத்தி பதிவுசெய்ய வேண்டும்.

இதில் விண்ணப்பிக்கத் தவறியவா்கள் ஜூன் 3, 4-ஆம் தேதிகளில் தட்கல் திட்டம் மூலம் விண்ணப்பிக்கலாம். அதற்கு தோ்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1000 செலுத்த வேண்டும். இதுதவிர தோ்வுக் கட்டணம், விரிவான தோ்வுகால அட்டவணை, கல்வி மாவட்டம் வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களின் விவரம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டை மாணவா்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், அந்த ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே மாணவா்கள் தங்கள் தோ்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை பதிவிறக்கம் செய்ய முடியும்.

ஜூலை 2 முதல் பிளஸ் 1-க்கு...: இதேபோன்று பிளஸ் 1 துணைத் தோ்வுகள் ஜூலை 2 முதல் 9-ஆம் தேதி வரை நடத்தப்படும். இதற்கு விண்ணப்பிக்கும் தேதிகள் பின்னா் வெளியிடப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com