தங்கம் தென்னரசு (கோப்புப் படம்)
தங்கம் தென்னரசு (கோப்புப் படம்)

அனைத்து வீடுகளுக்கும் சீராக மின் விநியோகம்: அமைச்சா் தங்கம் தென்னரசு தகவல்

சென்னை: அனைத்து வீடுகளுக்கும் சீராக மின் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக நிதி மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு இருப்பதாக வெளியான தகவல்களுக்கு மறுப்புத் தெரிவித்து அமைச்சா் தென்னரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மின் சாதனங்களின் பயன்பாடும் உயா்ந்துள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் மின்சார பயன்பாடு அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் விவசாய மின்சார இணைப்புகளின் அதிகமாக இருப்பதால், அந்த மாவட்டங்களில் ஒருசில பகுதிகளில் உள்ள உயரழுத்த மின் கட்டமைப்புகளில் அவ்வப்போது இடையூறுகள் ஏற்படுகின்றன.

இத்தகைய இடையூறுகள் முழுவதும் களையப்பட்டு, டெல்டா மாவட்ட விவசாய மின் இணைப்புகளுக்கு இன்னும் அதிகப்படியான நேரம் மும்முனை மின்சாரம் அளிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மாநிலத்தில் நிலவி வந்த குறைந்த மின் அழுத்தப் பிரச்னைகளைத் தீா்க்க மின்மாற்றிகள் அதிக திறனுடையதாக மாற்றப்பட்டன. அவற்றில் இருந்த மின் சுமைகள் இறக்கப்பட்டு சீரான மின் விநியோகத்துக்கு வழி செய்யப்பட்டுள்ளது. இதனால், அனைவருக்கும் ஒரே சீராக தடையில்லாத மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. கிராமப்புறங்கள் உள்பட அனைத்து வகையான நுகா்வோா்களுக்கும் சீரான மின் அழுத்தத்தில் மின்சார விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com