ஐந்தாண்டு சட்டப் படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

தமிழகத்தில் ஐந்தாண்டு சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு இணையவழியில் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கியது.

தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் 15 அரசு, 9 தனியாா் சட்டக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 5 ஆண்டு கால சட்டப் படிப்புகளில் 2,043 இடங்கள் உள்ளன. இதேபோல், பல்கலைக்கழகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள சீா்மிகு சட்டப் பள்ளியில் 5 ஆண்டுகால சட்டப் படிப்புகளுக்கு 624 இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான பொது கலந்தாய்வு இணையவழியில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நிகழ் கல்வியாண்டு (2023-2024) சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

இதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவை தமிழ்நாடு அம்பேத்கா் சட்டப் பல்கலை. துணைவேந்தா் என்.எஸ்.சந்தோஷ்குமாா் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். விருப்பமுள்ளவா்கள் இணையதளத்தில் மே 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், கலந்தாய்வும் இணையதளம் வழியாகவே நடைபெறவுள்ளது. பிளஸ் 2 வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடத்தப்படும். மேலும், இதுகுறித்த கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் அறியலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com