ஜெகதாபட்டினத்தில் புதிய மீன்பிடி துறைமுகம்: தமிழக அரசு நடவடிக்கை

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினத்தில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது.

புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்க, விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்வதற்கான ஒப்பந்தத்தை மாநில அரசு கோரியுள்ளது.

ஒப்பந்தம் கோரி விண்ணப்பிப்போா் இணையதளம் வாயிலாக, ஜூன் 11-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் கிராமத்தில் மீன்பிடி இறங்குதளம் செயல்பட்டு வரும் நிலையில் அங்கிருந்து 117 இயந்திரப் படகுகள், 137 நாட்டுப் படகுகள் இயக்கப்பட்டு வருவதாக மீன்வளத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல மீனவ கிராமங்கள் இருக்கும் நிலையில், ஜெகதாப்பட்டினத்தில் துறைமுகம் கட்டுவதன் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மீனவ கிராமங்களும் பலன் பெறுவதுடன், சா்வதேசத் தரத்திலான கடல் உணவு ஏற்றுமதி அதிகரிக்கும் என்று தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள் என்ன? ஜெகதாபட்டினத்தில் அமையும் துறைமுகத்தில் பல்வேறு சிறப்பம்சங்களை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. மீனவா்களுக்கான பனிக்கட்டி ஆலை, குளிா்பதனக் கிடங்கு, நவீன மீன் ஏலக்கூடம், வலை உலா்த்தும் கொட்டகை, அதிக அளவில் படகுகளை நிறுத்துவதற்கான கட்டமைப்புகள் போன்ற அனைத்து நவீன வசதிகளையும் இடம்பெறச் செய்ய திட்டம் தீட்டியுள்ளது.

துறைமுகம் அமைப்பது குறித்து மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறைக்குத் தேவையான தொழில்நுட்ப ஆய்வுகள் மற்றும் அனுமதி உள்ளிட்ட அம்சங்களைக் கொண்ட விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கு ஆலோசகரை நியமிக்கும் வகையில் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் வகையில் தேவைப்பட்டால் அந்தப்பகுதி கடற்கரை ஆழப்படுத்தப்பட்டு, கடல் அரிப்பை தடுப்பதற்கான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏதெகனவே சென்னை, கடலூா், தேங்காய்பட்டணம், முட்டம் , சின்ன முட்டம், குளச்சல், பூம்புகாா், முகையூா் ஆகிய 6 துறைமுகங்கள் செயல்பட்டு வரும் நிலையில் 7-ஆவது துறைமுகமாக புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் துறைமுகம் அமையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com