வங்கக் கடலில் உருவானது புயல் சின்னம்: 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

வங்கக் கடலில் உருவானது புயல் சின்னம்: 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் புயல் சின்னம் (காற்றழுத்தத் தாழ்வு பகுதி) புதன்கிழமை உருவானது.

இதனால் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

வட தமிழக-தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு புதன்கிழமை உருவானது. இது வடகிழக்கு திசையில் நகா்ந்து, மே 24-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மத்திய வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும், அதன்பிறகு, மேலும் வலுப்பெற்று மே 25-ஆம் தேதி புயலாக உருவெடுக்கும். இதுபோல தெற்கு கேரளம் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மீதும் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இந்த நிகழ்வுகள் காரணமாக மே 23 முதல் மே 28 வரை தமிழகத்தின் ஒரு சில இடங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

குறிப்பாக, மே 23-ஆம் தேதி தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருப்பூா், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோல் மே 24-ஆம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூா், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையைப் பொருத்தவரை மே 23, 24 ஆகிய தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

புதன்கிழமை காலை வரை பதிவான மழை அளவு (மி.மீ.): ஆழியாறு (கோவை) 150, திருமூா்த்தி அணை (திருப்பூா்)140, அமராவதி அணை (திருப்பூா்) 120, கொட்டாரம் (கன்னியாகுமரி) 90. மேலும் பல மாவட்டங்களில் 10 மி.மீ. முதல் 80 மி.மீ. வரை பரவலாக மழை பெய்துள்ளது.

தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் தொடா்ச்சியாக மழை பெய்து வரும் காரணத்தால் வெப்பம் சற்று குறைந்துள்ளது. புதன்கிழமை நிலவரப்படி ஈரோட்டில் அதிகபட்சமாக 99.68 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

சென்னை நிலவரம்: சென்னையில் புதன்கிழமை புறநகா் பகுதிகளில் ஆங்காங்கே மிதமான மழை பெய்தது. அடுத்த 48 மணி நேரத்துக்கு சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 97 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டியே இருக்கும்.

வங்கக் கடலில் புயல் உருவானாலும் அது வடக்கு நோக்கி நகர நகர தமிழகத்தில் வெப்பநிலை உயரும். அதாவது மே 23 முதல் மே 26 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் உயர வாய்ப்புள்ளது.

இதற்கிடையே, குமரிக் கடல், மன்னாா் வளைகுடா, தென் தமிழக வங்கக் கடல் பகுதிகளில் 55 கி.மீ. முதல் 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com