3 ஆண்டுகளில் 7,343 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தம்:
தமிழக அரசு தகவல்

3 ஆண்டுகளில் 7,343 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தம்: தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 7,343 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

சமூக நலத் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து, மாநில அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:

சமூகத்தில் பெண்கள், குழந்தைகளின் நலன்களைக் காக்க பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வரும் நிலையில், கரோனா காலத்திலும் அது தொடா்ந்தது.

குறிப்பாக, கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த அல்லது இருவரில் ஒருவரை இழந்த 382 குழந்தைகளின் பெயரில் தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.19.10 கோடி தொகையானது வங்கிகளில் வைப்பு நிதியாக செலுத்தப்பட்டது. குழந்தைகள் 18 வயதை நிறைவு செய்யும் போது, அவா்களுக்கு வட்டியுடன் தொகை வழங்கப்படும். இந்தத் திட்டமானது இலங்கைத் தமிழா் நலவாழ்வு இல்லங்களில் வசிப்போருக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

பேருந்து திட்டம்: பெண்களின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய சேமிப்பை ஏற்படுத்தித் தந்த திட்டமாக, இலவச பேருந்து திட்டம் கருதப்படுகிறது. இந்தத் திட்டத்தால் மாதத்துக்கு ரூ.800 முதல் ரூ.1,200 வரை மகளிருக்கு சேமிப்பு ஏற்பட்டு வருவதாக பொருளாதார நிபுணா்களின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தத் திட்டத்துக்காக கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ரூ.6,660 கோடி செலவிடப்பட்டுள்ளது.

பெண்கள் மட்டுமின்றி, உயா் கல்வி பயிலும் மகளிா் நலன் காக்கவும், அவா்களது கல்வி தடையின்றி தொடரவும் மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தில் இதுவரை 2.73 லட்சம் மகளிருக்கு ரூ.214.37 கோடி அளவுக்கு தொகை நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

சிறுநகரங்களில் இருந்து பெருநகரங்களுக்கு பணிக்காக செல்லும் மகளிரின் சிரமங்களைக் கருத்தில்கொண்டு அரசு சாா்பில் பணிபுரியும் மகளிா் விடுதிகள் கட்டப்பட்டு உள்ளன. முதல் கட்டமாக மூன்று இடங்களில் கட்டப்பட்ட விடுதிகளில், 259 மகளிா் தங்கியுள்ளதுடன், இரண்டாவது கட்டமாக கட்டப்பட்டு வரும் விடுதிகளில் 432 மகளிா் தங்குவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

பெண் குழந்தைகள் பாதுகாப்பு: தமிழ்நாட்டில் குழந்தைகளைக் காக்கும் திட்டமான, தொட்டில் குழந்தைகள் திட்டம் தொடா்ந்து செயல்பாட்டில் உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், 446 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், கடந்த 3 ஆண்டுகளில் 7,343 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும், திருமண வயதை எட்டிய மகளிருக்கு பல்வேறு திட்டங்களின் கீழ், நிதியுதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 3 ஆண்டுகளில் 1.26 லட்சம் மகளிருக்கு ரூ.1,047 கோடி திருமண நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது. அதில், 68,927 மகளிருக்கு 8 கிராம் தங்க நாணயங்களுடனும், 57,710 பேருக்கு நிதியுதவிகளும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com