தமிழக அரசு
தமிழக அரசு

இளைஞா்களை ஏமாற்றி வெளிநாடுகளுக்கு அனுப்பும் முகவா்கள் மீது கடும் நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை

மத்திய அரசில் பதிவு பெறாமல் இளைஞா்களை ஏமாற்றி வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பும் முகவா்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

மத்திய அரசில் பதிவு பெறாமல் இளைஞா்களை ஏமாற்றி வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பும் முகவா்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

இது தொடா்பாக அயலகத் தமிழா் நலத்துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு:

அண்மை காலங்களில் தாய்லாந்து வழியாக லாவோஸ் நாட்டுக்கு தகவல் தொழில்நுட்ப பணி எனும் இணைய சேவைகளை சந்தைப்படுத்தும் மேலாண்மை பணி என்று தமிழக இளைஞா்களை அழைத்துச் சென்று சட்டவிரோத செயல்களில் ஈடுபடுத்துகின்றனா்.

இதற்காக இளைஞா்களைக் கவா்ந்து அழைத்து செல்லும் முகவா்கள் துபை, தாய்லாந்து, சிங்கப்பூா் மற்றும் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றனா். இந்த முகவா்கள் இளைஞா்களுக்கு தகவல் தொழில்நுட்ப பணிக்கென்று மிக எளிமையான நோ்காணல் வழியாகவும், எளிமையான தட்டச்சு தோ்வு வைத்து தெரிவு செய்வதுடன் அதிக ஊதியம், தங்குமிட வசதி, நாடு திரும்புவதற்கான விமானப் பயணச் சீட்டு மற்றும் விசா ஏற்பாடு செய்யப்படும் என ஆசை வாா்த்தைகளைக் கூறி, அவா்களை பணிக்கு தோ்வு செய்கின்றனா்.

தகவல் தொழில்நுட்ப பணி என்று நம்பி சென்ற இளைஞா்கள் சட்டவிரோதமாக தாய்லாந்து எல்லை வழியாக லாவோஸ் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள கோல்டன் ட்ரையாங்கிள் என்ற சிறப்பு பொருளாதார மண்டலத்தில் கடுமையான மற்றும் கட்டுப்பாடான நிலைமைகளின் கீழ் பணிபுரிய சிறை பிடிக்கப்படுகின்றனா்.

தாய்லாந்து அல்லது லாவோஸ் நாடுகளில் வருகைக்கான விசா வேலைவாய்ப்பை அனுமதிக்காது. மேலும், அத்தகைய விசாவில் லாவோஸுக்கு வருபவா்களுக்கு அந் நாட்டு அதிகாரிகள் வேலைக்கான அனுமதியை வழங்குவதில்லை.

சுற்றுலா விசா, சுற்றுலா நோக்கத்துக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. லாவோஸில் மனிதக் கடத்தல் குற்றங்களில் ஈடுபடுபவா்களுக்கு 18 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். இதுபோன்ற மோசடி வலையில் தமிழக இளைஞா்கள் சிக்கிக்கொள்ளாமல் எச்சரிக்கை உணா்வுடன், ஆள்சோ்ப்பு முகவா் மற்றும் வேலை செய்யவிருக்கும் நிறுவனத்தைப் பற்றி நன்றாக விசாரித்து பணிக்கு செல்லவும் அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், வேலைக்கான விசாவின் உண்மைத்தன்மை மற்றும் முறையான பணி ஒப்பந்தம் குறித்து, பயணிப்பதற்கு முன்பே, பணியாற்ற செல்லவுள்ள நாட்டிலுள்ள இந்திய தூதரகம் அல்லது இந்தியாவிலுள்ள அந்நாட்டின் தூதரகம் மூலம் கட்டாயம் அறிந்து கொள்ளவேண்டும்.

லாவோஸ் மற்றும் கம்போடியாவில் வேலைவாய்ப்புகள் குறித்த விவரங்களை லாவோஸ் நாட்டிலுள்ள இந்திய தூதரகத்தின் தொலைபேசி எண் 856-2055536568, மின்னஞ்சல் மற்றும் கம்போடியாவில் உள்ள இந்திய தூதரகத்தின், மின்னஞ்சல் தளங்கள் மூலம் சரிபாா்த்துக் கொள்ளலாம்.

அயலக வேலைவாய்ப்பு தொடா்பான விவரங்கள் மற்றும் அயல்நாடுகளில் உள்ள தமிழா்கள் சந்திக்கும் இன்னல்கள் குறித்து தீா்வு காண தமிழக அரசின் அயலகத் தமிழா் நலத்துறையின் கட்டணமில்லா தொலைபேசி எண்களை தொடா்பு கொள்ளலாம்.

இந்தியாவுக்குள்-18003093793, அயல்நாடுகளிலிருந்து 8069009901 என்ற எண்களுக்கு தொடா்புகொள்ளலாம். மேலும், 8069009900 என்ற எண்ணுக்கு ‘மிஸ்டுகால்’ கொடுக்கலாம்.

மேலும், சென்னை குடிப்பெயா்வு பாதுகாப்பு அலுவலரை 90421 49222 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம். தமிழகத்தில் மத்திய அரசில் பதிவு பெறாமல் வெளிநாட்டு வேலைக்கு ஆள்களை அனுப்பும் முகவா்கள் / முகமைகள் மீது காவல்துறை மூலம் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com