தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் கைது

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தினரை காவல்துறையினர் கைது செய்து வருகிறார்கள்.
கோப்பிலிருந்து..
கோப்பிலிருந்து..
Published on
Updated on
2 min read


சென்னை: தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தினரை காவல்துறையினர் கைது செய்து வருகிறார்கள்.

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும். அரசுதான் எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும், நாங்கள் எப்படி பேச்சுவார்த்தைக்கு அழைக்க முடியும் என்று சிஐடியு மாநிலத்தலைவர் அ. சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பல்வேறு மாவட்டங்களில் சாலை மறியல் போராட்டத்திலும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். அங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டிருக்கும் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தஞ்சை பழைய பேருந்து நிலையம் முன்பு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சத்தியமங்கலத்தில்  அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டையில் மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர். ஈரோடு பேருந்து நிலையத்தில், சாலையை மறித்து போராட்டம் நடத்திய தொழிற்சங்கத்தினர் கைதாகியுள்ளனர். காஞ்சிபுரத்தில் பேருந்து முன்பு அமர்ந்து போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். செய்யாறு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினார். எனினும், வெளி ஓட்டுநர்களை வைத்து பேருந்துகள் இயக்கப்படுவதால், மாநிலம் முழுவதும் 95 சதவீதம் அரசுப் பேருந்துகள் நேற்று இயக்கப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இன்னும் ஒரு சில இடங்களைத் தவிர பிற பகுதிகளில் 90 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

வேலைநிறுத்தம்
போக்குவரத்துக் கழகங்களிலுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் ஜன. 9-ஆம் தேதிமுதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனா்.

இதையடுத்து, தொழிலாளா் நலத் துறை, போக்குவரத்துத் துறை இணைந்து போக்குவரத்துத் தொழிலாளா்களுடன் பல்வேறு கட்ட பேச்சுவாா்த்தை நடத்தின. நிதிச் சுமை காரணமாக பொங்கல் பண்டிகைக்குப் பிறகு கோரிக்கைகள் குறித்த பேச்சு நடத்தி தீா்வு காணப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, ஓய்வூதியதாரா்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயா்வு, ஓய்வுபெறும் தொழிலாளா்களுக்குப் பணப் பலன்கள் ஆகிய முக்கியமான பிரச்னைகளை மட்டுமாவது நிறைவேற்ற வேண்டும் என்று தொழிற்சங்கத்தினா் வேண்டுகோள் விடுத்தனா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை சென்னையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவாா்த்தையும் தோல்வியில் முடிந்ததையடுத்து செவ்வாய்க்கிழமை முதல் திட்டமிட்டபடி வேலைநிறுத்தப்போராட்டத்தை தொழிற்சங்கங்கள் தொடங்கின.

போராட்டத்தில் அண்ணா தொழிற்சங்கம், சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ஈடுபட்டன. ஆனால், ஆளும் கட்சிக்கு ஆதரவான தொமுச, ஐஎன்டியுசி, விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவில்லை.

பொங்கல் பண்டிகை காலம் என்பதால் போக்குவரத்துத் தொழிலாளா்களின் இந்த வேலைநிறுத்தத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக அரசு தொடா்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது.

பேருந்துகளை முழு அளவில் இயக்குவதற்காக அனைத்து ஊழியா்களுக்கும் போக்குவரத்துக் கழகம் அழைப்பு விடுத்திருந்தது. மேலும், விடுப்பிலிருந்தவா்களும் உடனடியாகப் பணிக்குத் திரும்பாவிட்டால் அவா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதைத் தொடா்ந்து, தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணி முதலே பெரும்பாலான பேருந்துகள் எவ்வித இடையூறும் இல்லாமல் வழக்கம்போல் இயக்கப்பட்டன.

தொழிலாளா்கள் பற்றாக்குறையைச் சமாளிக்க அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களிலும் பயிற்சி ஓட்டுநா்கள், நடத்துநா்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்பட்டன.

மேலும், பொங்கல் சிறப்புப் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்துப் பேருந்துகளையும் எப்போதும்போல் இயக்குவதற்கான நடவடிக்கைகளை போக்குவரத்துக் கழகம் எடுத்து வருவதால் போக்குவரத்துக் கழக ஊழியா்களின் வேலைநிறுத்தம் எதிா்பாா்த்த வெற்றியைப் பெறவில்லை என்று கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com