அகழாய்வுகள் காட்டும் பெருங் கற்காலத் தடயங்கள்

பெருங் கற்காலப் பண்பாட்டில், முதன்மையான இடத்தைப் பெறும் தொல்பொருள், விலை உயர்ந்த கல்மணிகளே ஆகும். தமிழகத்தில் பெருங் கற்படைக் காலத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த தொழிலாகவும், அயல்நாட்டாரைக் கவரும் வண்ணம
அகழாய்வுகள் காட்டும் பெருங் கற்காலத் தடயங்கள்

கடந்த சில வருடங்களாக தமிழகத்தில் பல அகழாய்வுகள் நடத்தப்பட்டு அதன் அறிக்கைகள் வெளிவந்துள்ளன. குறிப்பாக கொடுமணல், மாங்குடி, ஆண்டிப்பட்டி, மோதூர், செம்பியன் கண்டியூர், நெடுங்கூர், மயிலாடும்பாறை, தாண்டிக்குடி, தலைச்சங்காடு, பொருந்தல் போன்ற அகழாய்வுகளுடன், மைய அரசு மேற்கொண்ட ஆதிச்சநல்லூர், சானூர், அமிர்தமங்கலம் என தமிழகத்தின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் செய்திகளும், அறிக்கைகளும் தற்பொழுது வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவை பெருங் கற்படைக் காலத்துக்குக் கிடைத்துள்ள கூடுதல் சான்றுகளாகும்.

தொல்லியல் தடயங்களின் அடிப்படையில், இப்பண்பாடு தமிழகத்தில் ஒரே காலகட்டத்தில் காணப்பட்டதாகக் கருதினாலும், வட தமிழகத்தில் காணப்படும் நினைவுச் சின்னங்களை மட்டும் ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது, இப்பகுதியில் இப்பண்பாடு நன்கு வளர்ச்சியடைந்து முழுமையான நிலையை அடைந்துள்ளதைக் காணமுடிகிறது. வட தமிழகத்தில் பெருங் கற்படைக் காலத்தைச் சார்ந்த அனைத்து வகையான புதைக்குழி வடிவங்களும் காணப்படுகின்றன.*1 தென் தமிழகத்தில் காணப்படும் பெருங் கற்படைக் காலச் சான்றுகளில், தாழி வகைச் புதைச்சின்னங்களே அதிகமாகும்.

ஆதிச்சநல்லூரில் மட்டும், அதிகப்படியாக சுமார் 9000 தொல்பொருட்கள் கண்டெடுத்துள்ளனர். அவற்றில் தாழிகள், வெண்கலப் பொருட்கள், காதணி, மோதிரம், இரும்புப் பொருட்களான அம்புகள், வாள்கள், ஈட்டிகள், எறிவேல், கோடரி, தங்கத்தினால் ஆன 19 மகுடங்கள் ஆகியவற்றுடன், நல்ல நிலையில் சேகரிக்கப்பட்ட மட்கலன்களும் அடங்கும்*2. ஆதிச்சநல்லூரில் கிடைத்த இரும்புப் பொருட்களைப் போன்று பெரும்பையார், சானூர், குன்னத்தூர், அமிர்தமங்கலம் போன்ற பல இடங்களிலும் பெருங் கற்படைக் காலப் பண்பாட்டுக் காலத்தைச் சார்ந்த ஏராளமான இரும்புக் கருவிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இவ்விடங்களில் மேற்கொண்ட அகழாய்வுகளில் ஈட்டிமுனை, குதிரை லாடம், உளி போன்ற கருவிகளும் கிடைத்துள்ளன என்று ‘தொல்லியல் அகழாய்வுகள்’ என்ற நூலில் கே.வி.ராமன் குறிப்பிடுகிறார்.

(கோவலன் பொட்டல் அகழாய்வில் வெளிக்கொணரப்பட்ட தாழி, ஈடுபொருட்களுடன்)

(அமிர்தமங்கலம் அகழாய்வில் வெளிக்கொணரப்பட்ட தாழி, ஈடுபொருட்களுடன்)

(ஆதிச்சநல்லூர் அகழாய்வில் வெளிக்கொணரப்பட்ட தாழி)

(ஆதிச்சநல்லூர் அகழாய்வில் வெளிக்கொணரப்பட்ட வீட்டு விலங்கு உருவம் மூடிகொண்ட மட்கலன்கள்)

தென் தமிழகத்தில் மாங்குடி, தேரிருவேலி, தே.கல்லுப்பட்டி போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில், நுண் கற்கருவிப் பண்பாட்டினை அடுத்து வளர்ச்சி அடைந்த பண்பாடாகப் பெருங் கற்காலப் பண்பாட்டு எச்சங்களையே காணமுடிகிறது. இங்கு ஒரு சில புதிய கற்காலக் கைக்கோடரிகள் மட்டுமே அறியப்பட்டுள்ளன.

இது, தமிழகத்தின் பிற பகுதிகளைப் போன்று நுண் கற்காலப் பண்பாட்டைத் தொடர்ந்து புதிய கற்காலத்தின் தொடர்ச்சி உள்ளதைக் காட்டுகிறது. ஆனால், பரவலாகப் பின்பற்றியதற்குச் சான்றுகள் இல்லை. ஆங்காங்கே ஒருசில இடங்களில் மட்டும் கள ஆய்வில் புதிய கற்காலக் கைக்கோடரிகள் கிடைத்துவருகின்றன. அகழாய்வுகளில் ஒரே ஒரு கைக்கோடரி மட்டும் முதுமக்கள் தாழிக்குள்ளேயே இருந்ததை அறியமுடிகிறது. குறிப்பாக, மங்குடி*3 கோவலன் பொட்டல்*4 ஆகிய அகழாய்வுகளில் தாழிக்குள்ளேயே புதிய கற்காலக் கருவிகள் காணப்படுவதைக் கொண்டு, தென் தமிழகத்தில் முறையான ஆய்வு மேற்கொண்டால் பல புதிய கற்காலத் தடயங்களைக் கண்டறிய வாய்ப்புள்ளது.

செம்பியன் கண்டியூரில், மேல்பரப்பிலும் அகழ்வாய்வுக் குழிகளிலும் பல கைக்கோடரிகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், கொடுமணல், மாங்குடி போன்ற அகழாய்வுகளில் மட்கலன்களில் குறியீடுகளும், அதனைத் தொடர்ந்து எழுத்துகளும் காணப்படுகின்றன. மட்கலன்களுடன் சங்கு வளையல்களும், காதணிகளும், கல்வெட்டுகளும், விளையாட்டுப் பொருட்களும் கிடைத்துள்ளன. இவையனைத்தும் பெருங் கற்படைக் காலத்து மக்களின் குறிப்பிடத்தக்க வளர்ச்சி நிலையைக் காட்டுவதாகும்.

(கரூர் அகழாய்வில் கிடைத்த கீறல் குறியீடு கொண்ட மட்கல ஓடுகள்)

(மாங்குடி அகழாய்வில் கிடைத்த கீறல் குறுயீடு கொண்ட மட்கலன்)

(மாங்குடி அகழாய்வில் கிடைத்த எழுத்துப் பொறித்த மட்கலன்)

கொங்கு நாட்டுப் பகுதியை விடுத்து தருமபுரி, கடலூர், விழுப்புரம், பெரம்பலூர் மாவட்டங்களில் பானை ஓடுகளில் குறியீடுகளுக்கு அடுத்துக் காணப்படும் எழுத்துகளைக் காண முடியவில்லை. ஆனால், ஒரு தொடர்ச்சியான வரலாற்றுச் சான்றுகள் இப்பகுதியில் நிறைந்து காணப்படுவதைக் கள ஆய்வுகள் நிரூபித்துள்ளன*5. அகழாய்வுச் சான்றுகளின் அடிப்படையில் மாங்குடி, கொடுமணல், நெடுங்கூர் போன்ற பல அகழாய்வுகளை ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது, அகழ்வுக்குழிகளின் கீழ்மண்ணடுக்கில் கீறல் குறியீடுகளும், அதனை அடுத்துக் காணப்படும் மண்ணடுக்குகளில் எழுத்துப் பொறிப்புகளும் காணப்படுகின்றன. இவை மண்ணடுக்குகளிலேயே காணப்படுவதால் இவ்வளர்ச்சியை ஏற்றுக்கொள்வதைத் தவிர்க்க முடியாது.

மண்ணடுக்குகளில் சான்று கிடைப்பதை மயிலாடும்பாறை (கிருஷ்ணகிரி மாவட்டம்) ஆண்டிப்பட்டி (திருவண்ணாமலை மாவட்டம்), மாங்குடி (திருநெல்வேலி மாவட்டம்), கொடுமணல் (ஈரோடு மாவட்டம்), பொருந்தல் (திண்டுக்கல் மாவட்டம்) போன்ற அகழாய்வுகளிலும் காணமுடிகிறது. அகழாய்வில் குறியிடுகளுக்கு அருகிலேயே ‘வயிர’ என தமிழி எழுத்துப் பொறிப்புகளுக்கு அருகிலேயே நெல் கீறல் வடிவமும் கீறப்பட்டுள்ளது. இதுவே சித்திரக் குறியீடு (Pictography) எனப்படும் எழுத்தின் வரிவடிவம் ஆகும். இதுபோன்ற சித்திரக் குறியீடும் எழுத்துகளும் பானை ஓடுகளில் காணப்படுவது, எழுத்தின் வளர்ச்சி நிலையைக் காட்டுவதாகும். முதன்முதலாகப் பொருந்தல் அகழாய்வில் இது போன்ற சித்திரக் குறியீடும் எழுத்துகளும் இணைந்து ஒரு மட்கலனில் கிடைத்துள்ளது. பொருந்தல் அகழாய்வில் கிடைத்த எழுத்தும், கீறல் குறியீடும் பொறித்த மட்கலன், காலத்தால் பொ.ஆ.மு. 500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என கரிமக் காலக்கணிப்பு (Carban 14) ஆய்வு உறுதி செய்துள்ளது*6.

(பொருந்தல் மட்கலம் - ‘வயிர’ தமிழி எழுத்துகளும் அருகில் நெல் மணியின் உருவமும்)

சங்க இலக்கியங்களின் அடிப்படையில் பெருங் கற்படைக் காலப் பண்பாட்டை ஆய்வு செய்வதைத் தவிர்த்து, அகழாய்வுத் தரவுகள், மேற்பரப்பு ஆய்வில் காணப்பட்ட பெருங் கற்படைகளின் அமைப்பு ஆகியவை கொண்டு, தென்பகுதி பெருங் கற்படைக் காலப் பண்பாட்டின் வளர்ச்சி நிலை எத்தகையது, வட தமிழகத்தில் நிலவிய பெருங் கற்காலப் பண்பாடு வளர்ச்சி நிலை எத்தகையது என்பதையும் தெளிவுபடுத்திக்கொண்டால், தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் காணலாம். பெரும்பாலும், தொழில்நுட்பங்கள் ஓர் இடத்தில் இருந்து வேறொரு இடத்துக்கு இடம்பெயர்தல் என்பது ஏற்புடையது. ஆனால், மக்கள் இடம் பெயர்ந்தனரா என்றால் அது ஐயப்பாட்டுக்கு உரியதாகும்.

தமிழக அகழாய்வுகள் காட்டும் பெருங் கற்படைப் பண்பாடு (தொகுப்பு)

தென் தமிழகத்தில் பெருங் கற்படைக் காலத்தில் கல்மணிகள் தயாரிக்கும் தொழிற்பட்டறைகள் வளர்ச்சி அடைந்தன என்பதை முந்தைய அத்தியாயத்தில் கண்டோம். பல புதைகுழிகளில் அகேட் (Agate), பவளம் (Coral), சூதுபவளம் (Canelian), சிவப்பு பசைமணிகள் (Paste Bead) போன்றவை காணப்படுகின்றன. (கல்மணிகள் தயாரிக்கும் தொழில்நுட்ப விவரம் அடுத்து கூறப்பட்டுள்ளது).

(தாண்டிக்குடி - சூதுபவள மணிகள்)

வட தமிழகத்தில் கட்டடக் கலையின் முதல் கட்டுமானத்தின் அமைப்பை அறிமுகப்படுத்தினர்*7. தமிழகத்தின் தென் பகுதியில் மேற்கொண்ட அகழாய்வுகளிலும், வட பகுதியில் மேற்கொண்ட அகழாய்வுகளிலும் இரும்புப் பொருட்கள் அதிக அளவில் காணப்பட்டுள்ளன. இரும்புப் பொருட்களை அவர்கள் வாழ்ந்த இடங்களைக் கொண்டு, அதன் பயன்பாட்டைப் பகுத்துக்கொள்ளலாம். குறிஞ்சியும் முல்லையும் அமைந்த இடங்களில் காணப்படும் இரும்புப் பொருட்கள், வேட்டுவத் தொழிலுக்கும்; மருதமும் நெய்தலும் அமைந்த இடங்களில் வேளாண் தொழிலுக்கும் ஏற்ப கருவிகள் தயாரித்துப் பயன்படுத்தியுள்ளனர் எனலாம். தென் தமிழகத்தில் காணப்படும் புதைக்குழிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட இரும்புப் பொருட்கள் சிறிய கத்தி, குறுவாள், வளையல், ஈட்டிமுனை போன்றவை ஆகும்*8.

(பெருங் கற்கால இரும்புக் கருவிகள்)

குறிஞ்சி, முல்லை நிலப்பகுதிகளில் காணப்பட்ட புதைக்குழிகளில் வாள், அறுவாள், குத்தீட்டி, குறுவாள், கோடரி, வளையம், மண்வெட்டி போன்றவை ஆகும்*9.

தென் தமிழகம், நீர்வளம் நிறைந்த மருதமும் நெய்தலும் சார்ந்த இடங்களாகும். அதனால், இங்கு வனவிலங்குகளின் தாக்குதல் குறைவே. எனவேதான், இங்கு தென் தமிழகத்தில் பெரிய அளவிலான சேமிக்கும் மட்கலன்கள் காணப்படுகின்றன*10. இதுபோன்றே, சுடுமண்ணால் ஆன குதிர்கள், தானியங்களைச் சேமிக்கும் கலன்களாகப் பயன்படுத்தப்பட்டன. இவற்றை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி, தேவையானபொழுது ஒவ்வொரு குதிர்களாக இறக்கிவைத்து, சேமித்து வைத்துள்ள தானியங்களை எடுத்துப் பயன்படுத்துவர். இவர்கள் அறிவாற்றலும், வேலையை சுலபமாக்கும் திறனையும் படைத்தவர்கள் என்பதை இம்மட்கலன் குதிர்களைக் கையாளும் முறையிலிருந்தே அறிந்துகொள்ளலாம்.

மாங்குடி அகழாய்வில், பெரிய அளவிலான ஒரு மட்கலக் குதிர் கிடைத்துள்ளது. இது, இரண்டு பக்கமும் நன்கு வனைந்த ஒன்று. அடிப்பகுதியிலும் மேல்பகுதியிலும் தடிப்பான வளையங்கள் போன்ற அமைப்பு உள்ளது. மேல்பகுதியில் உள்ளவை கைப்பிடியாகவும், அதே சமயத்தில் அதற்கு மேல் வைக்கப்படும் அடுக்கை நன்கு தாங்கியிருக்கவும் கூடிய அமைப்பாக உள்ளது. கீழ்ப்பக்க வளையம், குதிர் தரையில் கவிழாமல் நேராக இருக்க அமைக்கப்பட்டதாக இருக்கிறது. இந்த அமைப்பால், அடுக்குகள் ஒன்றன் மீது ஒன்று சரியாகப் பொருந்தி வைக்கவும், தனித்தனியாக வைக்கவும் என இருவகையில் பயன்படுத்தும் வகையில் சிறப்புற அமைத்துள்ளனர். மட்கலன்களில் இது ஒரு குறிப்பிடத்தக்க தொல்பொருள் சான்றாக விளங்குகிறது.

(சுடுமண் குதிர் - மாங்குடி) 

இங்கு பெரிய அளவிலான முதுமக்கள் தாழிகளும் நிறைந்து காணப்படுகின்றன*11. அழகிய கல்மணிகள் பல வடிவங்களில் தயாரித்துப் பயன்படுத்தினர் என்பதை பொருந்தல், கொடுமணல், தாண்டிக்குடி போன்ற அகழாய்வுகள் தெரிவிக்கின்றன*12. தொழில் பட்டறைகளில் இரும்பால் ஆன கருவிகளையே பயன்படுத்தியுள்ளனர் என்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

கல்மணிகள்

பெருங் கற்காலப் பண்பாட்டில், முதன்மையான இடத்தைப் பெறும் தொல்பொருள், விலை உயர்ந்த கல்மணிகளே ஆகும். தமிழகத்தில் பெருங் கற்படைக் காலத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த தொழிலாகவும், அயல்நாட்டாரைக் கவரும் வண்ணமும் மேற்கொண்ட தொழில்நுட்பத் திறனும் வியக்கச் செய்யும்படி உள்ளது. தமிழகப் பெருங் கற்கால மக்கள் வாழ்விடப் பகுதிகளில் மேற்கொண்ட அகழாய்வுகளிலும், பெருங் கற்படைச் சின்னங்களிலும், சங்க கால மக்கள் வாழ்விடங்களிலும் மேற்கொண்ட அகழாய்வுகளில் ஏராளமான கல்மணிகள் கிடைத்துள்ளதையே சான்றாகக் கொள்ளலாம்.

இதற்கு முத்தாய்ப்பாக கொடுமணல், பொருந்தல், தாண்டிக்குடி போன்ற பெருங் கற்கால நினைவிடச் சின்னங்களில் மேற்கொண்ட அகழாய்வுகளையும், மாங்குடி, அழகன்குளம், போளுவான்பட்டி, பேரூர் போன்ற வாழ்விடப் பகுதிகளில் மேற்கொண்ட அகழாய்வுகளையும் குறிப்பிடலாம். எனவே, பெருங் கற்காலத்தில் துவங்கி தொடர்ந்து வரலாற்றுக் காலம் வரை இத்தொழில் பல வளர்ச்சி நிலையைப் பெற்றுத் திகழ்ந்துள்ளது என்பதற்கு, அகழாய்வுகளில் கிடைத்த கல்மணிகளே சான்று எனலாம்.

கல்மணிகள் தயாரிப்புத் தொழில்நுட்பம்

பாறைகளையும், கற்களின் தன்மைகளைப் பற்றியும் ஆழ்ந்த அறிவு பெற்றிருந்தால் மட்டுமே இதுபோன்ற மணிகள் தயாரிக்கும் தொழிலில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள முடியும். முதலில் மணிகள் செய்யப் பயன்படும் மூலக்கற்களைத் தெரிவு செய்தல் வேண்டும். பின்னர் அதனை சிறிய சிறிய கற்துண்டுகளாக அறுத்தெடுத்தல் வேண்டும். பிறகு அதனை மக்கள் விரும்பி அணியும் நிலையிலான வடிவத்தில் அமைத்தல் வேண்டும். இத்தகைய சிந்தனை கலந்த கலைத்திறன் கொண்ட மக்கள், தமிழகத்தில் புதிய கற்காலம் முதலே உருவாகத் தொடங்கிவிட்டனர் எனலாம். மட்கலன்கள் தயாரிக்கும் தொழிலில் பல புதிய யுத்திகளைக் கையாண்ட மக்கள், தொடர்ந்து மணிகள் செய்வதிலும் நன்கு தேர்ச்சி பெற்றவர்களாகத் திகழ்ந்ததில் அதிசயம் இல்லை என்றே கூறலாம்.

இரும்பின் பயனைக் கற்றவுடன், பாறைகளை வெட்டி பெருங் கற்சின்னங்களை அமைத்த மக்கள், அவற்றில் வயது முதிர்ந்த பாறைகள், இயற்கையாக அமைந்த தேர்ச்சி பெற்ற பளிங்குக் கற்களையும் கண்டறிந்தனர். அத்தகு பளிங்குப் பாறைகளை சிறுசிறு கட்டிகளாக வெட்டி, அவற்றிலிருந்து வட்டம் (Round), உருண்டை (Gloub), முட்டை வடிவம் (Oval), நீள் உருண்டை வடிவம் (Elangated Bead) எனப் பல்வேறு வடிவங்களில் மணிகளைச் செய்து குவித்தனர்.

(பளிங்குக் கல்மணிகள் – Crystal Beads)

கொடுமணல் கல்மணிகள்

கொடுமணல் அகழாய்வில் கிடைத்த சூதுபவளம் (Carnelian Beads) குறிப்பிடத்தக்க ஒன்றாகும். சுமார் 7000 சூதுபவள மணிகள், முதுமக்கள் புதைக்குழிகளிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்டன. இந்த சூதுபவளம் மணிகள் வடமாநிலங்களிலிருந்து வந்திருத்தல் வேண்டும். ஏனெனில், இவற்றின் மூலப்பொருள் தமிழகத்தில் காணப்படாத ஒன்று. மேலும், இதனை அடியொற்றியே சங்க இலக்கியங்களில் பட்டினப்பாலை எனும் நூலில் ‘வடமலைப் பிறந்த மணி’ என்ற குறிப்பு வருவது கவனிக்கத்தக்கது. இதனைக் காணும்பொழுது, இந்த சூதுபவளம் (Carrnelian Bead), அகேட் (Agate) போன்ற கல்மணிகள் வடமாநிலங்களான குஜராத் மற்றும் மகாராஷ்டிரத்தில் கிடைக்கும் பொருட்களாகும். இவை, இலங்கியங்களின் கூற்றுப்படி அங்கிருந்து வந்தவையாக இருக்கலாம். வைடூரியம் (Lapislauzli) போன்ற விலையுயர்ந்த கல்மணிகள், ஆப்கனிஸ்தானில் மட்டும் காணப்படுபவையாகும்.

இவ்வாறு வடமாநிலங்களில் இருந்தும், அயல்நாடுகளில் இருந்தும் மூலப்பொருட்களை வரவழைத்து, இங்கு தங்களுக்கு ஏற்ற ஆபரணப் பொருளாக, நல்ல கலைநயம்மிக்க மணிகளாக மாற்றியுள்ளனர். இவ்வாறு மணிகள் செய்யும் தொழில்நுட்பமும் திறமையும் பெருங் கற்கால மக்களிடையேயும், அதனைத் தொடர்ந்து சங்ககால மக்களிடமும் இருந்துள்ளது என்பதை அகழாய்வுகளில் கிடைத்த கல்மணிகள் நமக்குத் தெரிவிக்கின்றன. கல்மணிகளையும் சங்கு, வளையல்களையும் அணிவது தமிழக மக்களிடையே பெருங் கற்காலம் முதலே அதிகரித்துவிட்டது. எனவே, தானியங்களை உற்பத்தி செய்ததைப் போலவே தங்களுக்குத் தேவையான அணிகலன்களையும் தாங்களே தயாரித்துள்ளனர். பின்னர் அதனை வணிகமும் செய்துள்ளனர்.

(சூதுபவளம் – (Carnelian Beads) – Barrrel and Round shape)

தமிழக அகழாய்வுகளில், கொடுமணல் ஒரு குறிப்பிடத்தகுந்த சிறப்பு வாய்ந்த வணிகத்தலமாகவும் திகழ்ந்துள்ளதைக் காட்டுகிறது. இங்கு கல்மணிகள் செய்யத் தேவையான மூலக்கற்களும் அறுத்த கல்மணிகளின் பகுதிகளும், மெருகேற்றப்படாத கல்மணிகளும், மெருகேற்றப்பட்டு துளையிடப்படாத நிலையில் உள்ள மணிகளும் கிடைத்துள்ளன. இவை இங்கு கல்மணிகள் தயாரிக்கும் தொழிற்பட்டறை இருந்துள்ளதை உறுதிசெய்வதாக உள்ளது. இதனைப் போன்றே சங்க கால வாழ்விடமான அழகன்குளம், ஒரு சங்க கால பாண்டிநாட்டுத் துறைமுகப்பட்டினமாகவும் திகழ்ந்துள்ளது. வைகை நதி இங்குதான் வங்கக் கடலில் சங்கமிக்கிறது.

(அழகன்குளம் கல்மணிகள்)

அழகன்குளத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளிலும் ஏராளமான மணிகளும் அவை தயாரிக்கும்பொழுது ஏற்படும் சில்லுகளும் கிடைத்துள்ளதை இங்கு ஒப்புநோக்கலாம். சிறப்புபெற்ற இவ்வகையான கல்மணிகளைத் தயாரிப்பதன் மூலம் வருவாய் ஈட்டித் தந்ததோடு மட்டுமின்றி, கிழக்காசிய நாடுகளையும் தமிழகம் வெகுவாகக் கவர்ந்தது எனலாம். ஏனெனில், தூரதேசத்து ஆசிய நாடுகளிலிருந்து பலர் இங்கு வந்து தங்கி வணிகம் புரிந்துள்ளார்கள் என்பதை அடுத்து வரும் இயலில் காணப்போகிறோம். இவ்வகையில் சிறப்புபெற்ற பல வணிக நகரங்கள், தமிழகத்தை ஒட்டி அமைந்துள்ள வங்கக் கடற்கரைப் பகுதியில் உள்ளன என்பதை அகழாய்வுகள் நிரூபிக்கின்றன. சான்றாக அரிக்கமேடு, கொற்கை, பல்லவமேடு, அழகன்குளம் ஆகிய துறைமுக நகரங்களைக் குறிப்பிடலாம்.

சங்கு வளையல்கள், மட்கலன்களின் காலக்கணிப்பு

கடற்கரையில் கிடைக்கும் சங்குகளை அறுத்து சங்கு மணிகளும், சங்கு வளையல்களும் தயாரித்துள்ளனர். பெருங் கற்கால மக்களைத் தொடர்ந்து வாழ்ந்த சங்க கால மக்கள், சங்கு வளையல்களில் அதிக வேலைப்பாடுகள் கொண்டவற்றை தயாரித்துள்ளனர்*13. முழுமையான சங்குகளும், அறுத்த சங்குகளும் அகழாய்வுகளில் ஏராளமாகக் கிடைத்துள்ளன. சங்கு வளையல்களும் பல வடிவங்களில் கிடைத்துள்ளன. இவை பெருங் கற்படைக் காலம் முதல் தொடர்ச்சியாக வரலாற்றின் துவக்கக் காலமான சங்க காலத்திலும் கிடைத்து வந்துள்ளன என்பதை பல அகழாய்வுச் சான்றுகள் எடுத்தியம்புகின்றன.

ங்குகள் (கொடுமணல்)

சங்குவளையல் (பேரூர்)

கடற்கரையை ஒட்டி வாழ்ந்த மக்கள், கிழக்கு ஆசிய நாடுகளுடன் எளிதில் வணிகத் தொடர்பைப் பெற முடிந்தது. அதனால், நாகரிக மாற்றங்களும், தொழில் வளர்ச்சியும் இப்பகுதி மக்களிடையே எளிதில் சென்றடைய வழிவகுத்தது. வட தமிழகத்தில் காணப்படும் மட்கலன்களில் காணப்படும் கீறல் குறியீடுகள் கொண்டு, தென் தமிழகத்தில் எழுத்து வடிவத்தை விரைவில் அடையமுடிந்தது எனலாம். கடற்கரையை ஒட்டிக் காணப்படும் சங்க கால துறைமுகப்பட்டினங்களில் எழுத்துகள் பொறித்த மட்கலன்கள் ஏரளமாகக் காணப்படுவதற்கு இதுவே காரணமாகும்*14. பெருங் கற்காலத்தை அடுத்து வந்த சங்க கால மக்கள், தென் பகுதில்தான் அதிக முன்னேற்றங்களைப் பெற்றிருந்தனர் என்பது அகழாய்வுகள் மூலம் அறியப்பட்ட உண்மையாகும்.

கொற்கை அகழாய்வு குறிக்கும் காலம்

கொற்கை அகழாய்வுத் தரவுகள் காலத்தால் மிகவும் முற்பட்டவை. பொ.ஆ.மு. 800 ஆண்டுகளுக்கு, அதாவது இன்றைக்கு 2800 ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனக் கரிமக் காலக்கணிப்பு (Carbon 14) வழியாக அறியப்பட்டுள்ளது*15. இங்கு கீறல் குறியீடுகளைத் தொடர்ந்து எழுத்துப் பொறிப்புகள் கிடைக்கின்றன. காலத்தால் மூத்த எழுத்துப் பொறிப்புகளைக் கொண்டும், தொல்லியல் சான்றுகளின் அடிப்படையிலும், கரிமக் காலக்கணிப்பு மூலமாகவும் உறுதிப்படுத்தும் நிலைகொண்டு, தமிழக சங்க காலத்தின் துவக்கக் காலத்தை பொ.ஆ.மு. 786 என குறிக்கலாம்.

(கொற்கை அகழாய்வில் காணப்பட்ட எழுத்துப் பொறிப்புள்ள மட்கலன்)

பொருந்தல் அகழாய்வில் கிடைத்த எழுத்தும், கீறல் குறியீடு பொறித்த மட்கலன்களும், காலத்தால் பொ.அ.மு. 500 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கரிமக் காலக்கணிப்பு ஆய்வுகள் மூலம் உறுதி செய்துள்ளனர்*16.

பெருங் கற்படைக் காலத்தைப் பற்றி ஆய்வு மேற்கொண்டு அதன் காலத்தை துல்லியமாகக் கணித்தல் வேண்டும் என ஹேமன்டார்ப் (Haimendorf) அவர்கள் பல கருத்துகளை முன்வைக்கின்றார்.

விருத்தாசலம் வட்டம் செங்கமேட்டில் மேற்கொண்ட அகழாய்வில், ரெளலட்டட் மட்கலன் ஓடுகளுக்குக் கீழே காணப்பட்ட மண்ணடுக்கில், அதிக அளவில் சுமார் 2 மீட்டர் ஆழம் வரை கருப்பு - சிவப்பு மட்கலன்கள் குவிந்து காணப்பட்டதைக்கொண்டு, பெருங் கற்படைக் கால மக்கள் இங்கு அதிக காலத்தில் வாழ்ந்திருத்தல் கூடும் என்பதையும், அதன் அடிப்படையில் தென்னிந்திய பெருங் கற்படை மக்களின் காலத்தை பொ.ஆ.மு. 700 - 400 வரை எனப் பரிந்துரைத்துள்ளார்.

செங்கமேடு, எறுமானூர், மங்கலம்பேட்டை போன்ற இடங்களில் மேற்பரப்பு ஆய்வில் பல பெருங் கற்படைச் சின்னங்களைக் கண்டறிந்தார். செங்கமேட்டில் கிடைத்த நன்கு பளபளப்பான புதிய கற்காலக் கைக்கோடரி போன்றவையும் இதன் காலத்தைக் கணிப்பதற்கு உறுதுணையாக நிற்கின்றன என அவர் குறிப்பிடுகின்றார்.

அழகன்குளம் அகழாய்வு - ஒரு ஒப்பாய்வு

அழகன்குளம் அகழாய்வில், தொடர்ச்சியாக அயல் நாட்டு வணிகத் தொடர்பு பற்றி அறியமுடிகிறது. இங்கு நிலவிய தொழிற்பட்டறைகளில் மணிகள் தயாரித்தல், மட்கலன் தயாரிக்கும் உலைகலன் (Kiln), இவை கொண்டு சிவப்பு வண்ண ரெளலட் வகை மட்கலன் தயாரித்தல், சங்கு வளையல் தயாரித்தல் போன்றவை இருந்தன என்பதை அங்கு கிடைத்த ஏராளமான அறுத்த சங்குகளும், முழுமை பெறாத அறுத்த கல்மணிகளின் பகுதிகளும், மணிகள் செய்ததினால் ஏற்படும் சில்லுகளும் ஏராளமாகக் காணப்படுவதே சான்றுகளாகின்றன.

ரோமானிய நாட்டுக் காசுகள், ரோமானிய மட்கலன்கள், எழுத்துப் பொறிப்புள்ள மட்கலன்கள் இவை அனைத்தும் அயல்நாட்டார் வருகையை உறுதிப்படுத்துகின்றன. இவற்றுடன், கருப்பு - சிவப்பு மட்கலன்கள், சிவப்பு வண்ணக் கலவைப் பூச்சு கொண்ட மட்கலன்கள் (Resset Coated Painted Ware), வட இந்திய பளபளப்பான கருப்பு வண்ண மட்கல ஓடுகள் (NBPW - Northern Block Polished Ware) பலவும் கிடைத்துள்ளன.

இவ்வாறு, பல்வேறு விதமான தரவுகள் இங்கு சேகரிக்கப்பட்டுள்ளன. இங்கு, கரிமப் பகுப்பாய்வின்படி பெறப்பட்ட அறிக்கை, இதன் காலத்தை பொ.ஆ.மு. 465 எனத் தெரிவிக்கின்றது*17. இவற்றை பெருங் கற்காலத்தின் தொடர்ச்சி எனவும், சங்க காலத்தின் வளர்ச்சி எனவும், மேலும் இவ்விடமும் ஒரு சிறந்த துறைமுகப்பட்டினமாகவும், வணிகத்தலமாகவும் செயல்பட்ட பகுதியாக இருந்துள்ளது என்பதை உறுதியாகக் கூறலாம்.

ஆதிச்சநல்லூர் அகழாய்வும் பிற அகழாய்வுகளும்

இதனைத் தொடர்ந்து கோவலன்பொட்டல் அகழப்பட்டது. இங்கு முதுமக்கள் தாழி, நீண்ட கழுத்துடைய மட்கலன்கள், நுண் கற்காலக் கருவிகள், புதிய கற்காலக் கைக்கோடரிக் கருவிகள், இரும்புப் பொருட்களான அம்புமுனைக் கருவிகளும், இரும்பு ஆணிகளும், கழுத்தணி, கண்ணாடி மணிகள், செம்பு மோதிரம், செப்புக்காசு, சங்கு வளையல்கள் போன்றவையும்*18 தாண்டிக்குடியில் எழுத்து பொறித்த மட்கலன்களும்*19, மாங்குளத்தில் சுடுமண் மணிகள், சங்க காலக் கட்டடப் பகுதிகள், சங்கு வளையல்கள், நுண் கற்காலக் கருவிகள் போன்றவை*20 என, தென் தமிழக அகழாய்வுகள் பல தொடர் வரலாற்றை மெய்ப்பிக்கக்கூடிய தரவுகளை வழங்கியுள்ளன. ஆதிச்சநல்லூர் அகழாய்வு, தென் தமிழக அகழாய்வில் குறிப்பிட வேண்டிய ஒன்று. இங்கிருந்து ஏராளமான தொல்லியல் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இங்கு, முதுமக்கள் தாழிகளே நிறைந்து காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

(ஆதிச்சநல்லூர் – 1. தாழி மற்றும் 2. பிறவகை மட்கலன்கள்)

இந்த முதுமக்கள் தாழிகள் ஒவ்வொன்றும், பெருங் கற்படைப் பண்பாட்டின் வளர்ச்சியைக் குறிப்பிடுபவையாகவே உள்ளன. மேலும், சுடுமண் உருவங்களைத் தாழிகளின் வெளிப்புறத்தில் புடைப்புச் சிற்பம்போல மேல் பகுதியில் பதித்துவைத்துள்ளனர். தாழிகளில் இவ்வாறு புடைப்புச் சிற்பம்போல் உருவங்கள் ஒட்டப்பட்டிருப்பதை பூம்புகார், மணிக்கிராமம், கிழார் பகுதிகளில் கிடைத்த தாழிகளிலும் காணமுடிகிறது. மேலும், ஆதிச்சநல்லூரில் கிடைத்த மட்கலன்களில் காணப்பட்ட மேல் மூடிகளில் விலங்குகளின் உருவங்களை வடிவமைத்துள்ளனர். இவை, இம்மக்களின் வளமைச் சடங்கை காட்டுவதுபோல் அமைந்துள்ளது. இங்கு மணிகள், ஏராளமான மட்கலன்கள், கருப்பு - சிவப்பு, சிவப்பு, கருப்பு, கருஞ்சிவப்பு ஆகிய வண்ணங்களில் குடுவை, தட்டு, கோப்பை, குவளை, செப்பு, தாங்கி, மூடி என பலவகை மட்கலன்களும் கிடைத்துள்ளன.

(பெருங் கற்கால கருப்பு - சிவப்பு மட்கலன்கள், தட்டுகள்)

தென் தமிழக தே.கல்லுப்பட்டி, கோவலன்பொட்டல், தேரிருவேலி, மாங்குடி ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில், தென் தமிழக மக்கள் நுண் கற்காலப் பண்பாட்டில் இருந்து நேரடியாக முதுமக்கள் தாழிப் பண்பாட்டுக்கு மாறியுள்ளதைத் தெளிவுபடுத்துகின்றன*21. இப்பண்பாட்டின் தொடர்ச்சியாக, கேரள மாநிலத்தில் உள்ள கொல்லங்கோடு பகுதியிலும், நுண் கற்காலப் பண்பட்டைத் தொடர்ந்து பெருங் கற்காலப் பண்பாடு தொடர்ந்துள்ளது என ஆணைக்கரை அகழாய்வில் இருந்தும் அறியமுடிகிறது*22. இருப்பினும் மாங்குடி, கோவலன்பொட்டல், செம்பியன் கண்டியூர் ஆகிய அகழாய்வில், முதுமக்கள் தாழியின் உள்ளே புதிய கற்காலக் கைக்கோடரிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இது, புதிய கற்காலப் பண்பாட்டு மக்களை தங்களது முன்னோர்களாகக் கருதியே, அவர்கள் பயன்படுத்திய கைக்கோடரியை நினைவுப் பொருளாக வைத்து வழிபட்டிருத்தல் வேண்டும் என்பர்*23. இக்காலத்தைச் சேர்ந்த மக்கள் நுண் கற்காலம், அடுத்து புதிய கற்காலம், அதனைத் தொடர்ந்து பெருங் கற்படைக் காலம் எனவும் பண்பாட்டு வளர்ச்சி நிலைகளை தொடர்ந்து அடைந்துள்ளதையே காட்டுகிறது.

இருப்பினும், தென் தமிழகத்தில் நுண் கற்கருவிகள் சாயர்புரம், திருநெல்வேலி போன்ற பகுதிகளில் ஏராளமாகக் காணப்படுகின்றன. ஆனால், புதிய கற்கால வாழ்விடங்களுக்கான தடயங்கள் சற்று குறைவே எனலாம். இதனைக் கருத்தில் கொண்டு, இப் பகுதியில் புதிய கற்காலப் பண்பாடு இன்றி நேரடியாக பெருங் கற்படைக் காலம் வந்துள்ளது என்பதை கூடுதலாக ஆராயாமல் ஏற்க இயலாது. இதனைத் தெளிவுபடுத்த, மேலும் பல அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். புதிய கற்காலத்தைப் பற்றிய ஆய்வுகள் மிகவும் குறைவாகவே தமிழகத்தில் நடைபெற்றுள்ளன.

வட தமிழகத்தில் காணப்படும் புதிய கற்காலக் கருவிகளை தென் தமிழகத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். வட தமிழகத்தில் காணப்படும் அளவுக்கு ஒரு தொடர்ச்சியான அமைப்பும், புதிய கற்கால மக்களால் பயன்படுத்தப்பட்ட பல்வேறு வகையான பொருள்களும் தென் தமிழகத்தில் காணப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், முதுமக்கள் தாழிகளில் அன்றி பெருங் கற்கால வாழ்விடங்களில் ஓரிரு புதிய கற்காலக் கருவிகள் மட்டுமே கிடைக்கின்றன. இவை தம் முன்னோர்களின் நினைவாக பிற இடங்களில் இருந்து கொண்டுவந்து வழிபாட்டின் அடிப்படையில் பயன்படுத்தியிருக்க வேண்டும்.

இருப்பினும், தமிழகம் தனது இயற்கைச் சூழலின் காரணமாகவும், கனிமவளத்தின் அடிப்படையிலும், இரும்பின் பயன்பாடு அறிமுகமாகும் வரையிலும், பல்வேறுபட்ட பண்பாட்டு வளர்ச்சி நிலைகளில் இருந்துள்ளது என்பது தெளிவு. ஒட்டுமொத்த தமிழகமும் ஒரே பண்பாட்டுக்கூறினைப் பெற்றிருக்காவிடினும், தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில், ஆங்காங்கே காணப்பட்ட இரும்புக் கனிமத்தின் பயன்பாடு, தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது*24.

எனவே, இரும்புக் கனிமத்தின் பயன்பாட்டின் காரணமாக, தமிழகம் முழுவதும், ஒரே பண்பாட்டினை ஒட்டிய வளர்ச்சியை நோக்கியே சென்றுகொண்டுள்ளது என்பதை தெளிவாக உணரவைக்கிறது.

சான்றெண் விளக்கம்

  1.  K. Rajan, Archaeological Gazetteer of Tamil Nadu, Mano Pathippagan, Thanjavur, 1977, pp.182-185.

  2. சு. ராசவேலு & திருமூர்த்தி, தமிழ்நாட்டுத் தொல்லியல் அகழாய்வுகள், பண்பாட்டு வெளியீடு, சென்னை, 1995, பக். 73-74 

  3. A.V. Shettym Exacavation at Mangudi, Department of Archaeology, Government of Tamil Nadu, Chennai.  

  4. T.S. Sridharan, Archaeological Exacavation of Tamil Nadu, Department of Archaeology, Government of Tamil Nadu, Chennai.

  5. A. Gosh, opp. cit., p. 120.

  6. கா. ராஜன், தொல்லியல் நோக்கில் சங்ககாலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, ப.124.

  7. K. Rajan, Archaeological Gazetteer of Tamil Nadu, Mano Pathippagam, Thanjavur, 1999, p.147. 

  8. T.S. Sridhar, Excavations of Tamil Nadu, Department of Archaeology, Government of Tamil Nadu.

  9. கொங்கண்பாளையம் கள ஆய்வில் சேகரிக்கப்பட்ட தகவல்.

  10. K. Ashok Varadhan Shetty, Excavation at Mangudi, Department of Archaeology, Government of Tamil Nadu, Chennai.

  11. தமிழக வரலாறு, தொல்பழங்காலம், தமிழ்நாடு அரசு வெளியீடு, சென்னை, 1975, ப. 220.

  12. கா. ராஜன், பொருந்தல் அகழாய்வு செய்திக்குறிப்பு, ஆவணம் இதழ் எண்: 20, 2009, ப.110.

  13. Sridhar.S, A Roman Port City of Tamil Nadu, Allangankulam, Government of Tamil Nadu, Chennai.

  14. Ibid., p. 27. 

  15. A. Abdul Majeed, Tamil Civilization, Tamil University, Thanjavur, 1987, p.73.

  16. கா. ராஜன், பொருந்தல் அகழாய்வு, ஆவணம், எண்: 20, 2010, ப. 110.

  17. Sridhar.T.S, A Roman Port City of Tamil Nadu, Department of Archaeolohy, Government of Tamil Nadu, Chennai.

  18. Sridhar.T.S, Archaeological Excavations of Tamil Nadu, Department of Archaeology, Government of Tamil Nadu, Chennai,

  19. கா. ராஜன், தாண்டிக்குடி அகழாய்வு, ஆவணம், எண்: 17, 2007.

  20. கா. ராஜன், பொருந்தல் அகழாய்வு, ஆவணம், எண்: 20, 2010, ப.110.

  21. Sridhar.T.S, Archaeological Excavations of Tamil Nadu, Department of Archaeolohy, Government of Tamil Nadu, Chennai.

  22. வி.செல்வராஜ், ஆணைக்கரை (கேரளா) அகழாய்வு, ஆவணம் இதழ் 19, 2008, ப. 143.

  23. Ashokvarthan Shetty, Excavation at Mangudi, Department of Archaeolohy, Government of Tamil Nadu, Chennai – 8. (கோவலன்பொட்டல், செம்பியன் கண்டியூர் போன்ற இடங்களில் மெற்கொண்ட அகழாய்வுகளிலும் புதிய கற்காலக் கைக்கோடரி ஒன்று கிடைத்துள்ளதும் குறிப்பிடத்தகுந்தது).

  24. கா.ராஜன், தொல்லியல் நோக்கில் சங்க காலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். சென்னை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com