வரலாற்றுக் காலம் - 10. மாங்குடி – மாங்குளம் - மோதூர்

மோதூர் எவ்வளவு பழமையான ஊர் என்பதையும், தகடூரை ஆண்ட அதியமான் நெடுமான் அஞ்சியோடு எத்தகைய தொடர்பு கொண்டிருந்தது என்பதை அறிவதும் அகழாய்வின் முக்கிய நோக்கங்களில் ஒன்று.

மாங்குடி

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோயில் வட்டத்தில் சிவகிரி பஞ்சாயத்தில் உள்ள சிற்றூர்தான் மாங்குடி. ராஜபாளையத்திலிருந்து தெற்கே 20 கி.மீ. தொலைவில் உள்ளது. திருநெல்வேலியிலிருந்து சங்கரன்கோயில் வழியாகவும் மாங்குடியை அடையலாம்.

அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட இடம் - மாங்குடி

மாங்குடியில், நுண் கற்கருவிக் காலத்தில் இருந்து, புதிய கற்காலம், பெருங் கற்காலம், சங்க காலம், வரலாற்றுக் காலம் வரை தொடர்ச்சியான செய்திகள் இருப்பதை அறியமுடிகிறது.

மாங்குடி குறித்து மதுரைக்காஞ்சி, குறுந்தொகை, அகநானூறு போன்ற சங்க இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன. மாங்குடி மருதனார், மாங்குடி கிழார் போன்ற சங்க காலப் புலவர்கள் வாழ்ந்த பகுதியாகவும் விளங்கியுள்ளது. மேலும், சேர நாட்டுக்கும் பாண்டிய நாட்டுக்கும் தொடர்புடைய ஊராகத் திகழ்ந்துள்ளது.

1932-ல், இந்த ஊருக்கு அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூரில் பொ.ஆ. 2 மற்றும் 3-ம் நூற்றாண்டைச் சார்ந்த ரோமானிய காசுகள் கிடைத்தன. அகழாய்வில், கீறல் குறியீடுகளும் அதனைத் தொடர்ந்து எழுத்துகள் பொறித்த மட்கலன்களும் கிடைத்துள்ளன.

அகழாய்வு

அகழ்வுக் குழியில் மண் அடுக்குகளின் தோற்றம்

கல்வெட்டுச் சான்றுகள், இலக்கியச் சான்றுகள் மற்றும் மேற்பரப்பு ஆய்வில் சேகரிக்கப்பட்ட தடயங்களைக் கொண்டு, மாங்குடி என்ற ஊரின் தொன்மையைக் கண்டறியவும் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறையால், 2002-ம் ஆண்டில் அகழாய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

அதன்படி, நாயக்கர்புஞ்சை மற்றும் லிங்கத்திடல் என்ற இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மூன்று மாதிரி அகழ்வுக் குழிகள் தோண்டப்பட்டன. அதைத் தொடர்ந்து, நாயக்கர்புஞ்சையில் 10 அகழ்வுக் குழிகள் தோண்டப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு, வரலாற்று உலகுக்குப் பல அரிய தொல்பொருள்களை வழங்கியுள்ளது.

மட்கலன்கள்

அகழ்வாய்வில் கருப்பு சிவப்பு பானை ஓடுகள், சிவப்பு நிற பானை ஓடுகள், துளையிடப்பட்ட மட்கலன் ஓடுகள், வண்ணம் தீட்டப்பட்ட பானை ஓடுகள், அலங்கரிக்கப்பட்ட பானை ஓடுகள், பானை மூடிகள், சொரசொரப்பான சிவப்பு நிற பானை ஓடுகள் எனப் பல்வேறுவிதமான மட்கலன்களின் ஓடுகள் சேகரிக்கப்பட்டன. இவற்றுடன், ரோமானியர்கள் பயன்படுத்திய ரௌலட்டட் பானை ஓடுகளும் சேகரிக்கப்பட்டுள்ளன.

தொல்பொருட்கள்

சுடுமண் மணிகள், குறியீடுகள் பொறித்த மட்கலன் ஓடுகள், எழுத்து பொறித்த மட்கலன் ஓடுகள், கண்ணாடி மணிகள், தக்களி, சுடுமண் கெண்டி மூக்குப் பகுதிகள், மான்கொம்புகள், தாயக்கட்டை, சுடுமண் விளையாட்டுப் பொருட்கள், உடைந்த செப்பு ஊசிகள், சுடுமண் வட்டுகள், கல்மணிகள், அலங்கரிக்கப்பட்ட சுடுமண் விளக்குகள், இரும்பால் ஆன கத்திமுனை மற்றும் நுண் கற்கருவிகள் சேகரிக்கப்பட்டன. இவற்றுடன், புதிய கற்கால கைக்கோடாரி உடைந்த நிலையில் சேகரிக்கப்பட்டது.

கல்மணிகள் மற்றும் சுடுமண் மணிகள்

சுடுமண் சேமிப்புக் கலன் (மேல்பகுதி)

இங்கு கிடைத்தவற்றுள், தானியங்களைச் சேமித்துவைக்கப் பயன்படுத்திய மட்கலன் ஒன்று குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற மட்கலன்கள், பல அளவுகளில் ஒன்றைவிட ஒன்றை பெரிதாக அமைத்து, அவற்றில் தானியங்களைக் கொட்டி பாதுகாத்து வைப்பர். தேவைப்படும் சமயத்தில், மேலிருந்து ஒவ்வொன்றாக இறக்கி, தேவையான தானியங்களை எடுத்துப் பயன்படுத்திக்கொள்வர். இம்மட்கலன் அமைப்பு, மேல்பகுதி விளிம்பும் அடிப்பகுதி அமைப்பும் ஒன்றோடு ஒன்று பொருந்துவதாகவும், காற்று புகாத வகையிலும் அமைக்கப்பட்டிருக்கும். இந்த அமைப்பே இதன் தனிச்சிறப்பு.

கெண்டி மூக்குப் பகுதிகள், விளையாட்டுப் பொருட்கள். இரும்புக் கத்தி, தக்களி, தாயக்கட்டை, மான்கொம்புகள்

குறியீடுகள் பொறித்த மட்கலன்கள்

இப்பகுதியில், 200-க்கும் மேற்பட்ட குறியீடுகள் பொறித்த பானை ஓடுகள் சேகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், உள் பகுதியில் படகுக் குறியீடு போடப்பட்டு, சுடுவதற்கு முந்தைய நிலையிலான (Pre-Firing) ஒரு பானை ஓடும் சேகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தனித்த குறியீடுகள், பல குறியீடுகள், பல குறியீடுகள் இணைந்த நிலையிலான மூன்று வகை மட்கலன்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இது, குறியீடுகளின் பரிணாம வளர்ச்சி மற்றும் சொற்கள் அமைக்கும் மேற்கொள்ளப்பட்ட முயற்சி என்பதை உணர முடிகிறது.

எழுத்து பொறித்த பானை ஓடுகள்

தமிழி எழுத்துப் பொறிப்புள்ள மட்கலன்

நான்கு பானை ஓடுகளில் மட்டும் எழுத்து பொறிப்புள்ள வாசகம் காணமுடிந்தது. தவிர, தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 14 பானை ஓடுகளும் சேகரிக்கப்பட்டன. ஒன்றில், “குறுமான்கலம் அதன் யியானை பொ” என்ற வாசகம் படிக்கப்பட்டுள்ளது. குறுமான்கலன் என்பது இப்பகுதியின் பெயராக இருக்கலாம். நீண்ட வாக்கியத்துடன் கிடைத்த தமிழி எழுத்து கொண்ட இப்பானை ஓடு, குறிப்பிடும்படியான தொல்பொருள் ஆகும். இதன் காலத்தை, பொ.ஆ. 2-3-ம் நூற்றாண்டு எனக் கணித்துள்ளனர்.

மண் அடுக்குகளும், காலப்பகுப்பும்

அகழ்வுக் குழிகளில் மூன்று மண் அடுக்குகள் மட்டுமே காணப்பட்டன. மண் அடுக்குகளையும், அவற்றில் கிடைத்த தொல்பொருட்களையும், செப்புக் காசுகளையும், சுடுமண் உருவப் பொம்மைகளையும் ஒப்பிட்டு, இதன் பண்பாட்டுக் காலத்தை இரண்டு பெரும் பிரிவாகப் பகுத்தனர்.

காலம் - 1 : நுண் கற்கருவிக் காலம்

காலம் - 2 : சங்க காலம் முதல் வரலாற்றுக் காலம் வரை

செப்புக் காசுகளும், சுடுமண் பாவையும்

மாங்குடி அகழாய்வில் ஈடுபட்ட புதையுண்ட தமிழகம் ஆசிரியர் ச. செல்வராஜ் மற்றும் பிற அகழாய்வாளர்களுடன், முனைவர் கே.வி. ராமன் கிடைத்த தொல்பொருட்களை அகழாய்வு இடத்திலேயே ஆய்வு செய்து கலந்துரையாடுகிறார்

அகழாய்வுச் செய்தித் தொகுப்பு

மட்கலன்கள், கீறல் குறியீடுகள், எழுத்துப் பொறிப்புகள் இவற்றுடன் நுண் கற்கருவிகள் மற்றும் மூலக்கற்கள், புதிய கற்காலக் கற்கருவி, முதுமக்கள் தாழி போன்ற தொடர் வரலாற்றுத் தடயங்களுடன் அகழ்வுக் குழியில் காணப்படுவது மிகவும் சிறப்புக்குரியது. இதன் அடிப்படையில், மாங்குடி மிகவும் பழமையான தொன்மையான எழுத்தறிவு மிகுந்த மக்களைக் கொண்ட பகுதியாக இருந்துள்ளது என்பதும், இப் பகுதி மக்கள் கல்வி அறிவுடன் மிகுந்த புலமையும்  பெற்றவர்களாகவும் இருந்துள்ளனர் என்பதும் தெளிவாகிறது.

மாங்குளம்

மதுரை, சங்கம் வளர்த்த சிறப்பு பெற்ற நகரம். சங்க காலப் பாண்டியர்கள் செழிப்புடன் ஆட்சிபுரிந்த இடம். வணிகத்துக்கும், பண்பாட்டுக்கும் தனிச்சிறப்பான இடத்தைப் பெற்றது. வரலாற்றக்கு முற்பட்ட காலம் முதல் இன்று வரை தொடர்ச்சியான வரலாற்றைப் பெற்ற இடம். இன்றைய கர்நாடகத்தின் சரவணபெலகொலாவிலிருந்து தமிழ்நாட்டை நோக்கி பெருவழியாக வந்த சமணத் துறவிகள், மதுரையைச் சுற்றியுள்ள பகுதியில் பன்நெடுங்காலம் தங்கி, இப்பகுதி மக்களுக்குத் தேவையான கல்வி, மருத்துவம் ஆகியவற்றை வழங்கினர்.

அத்தகைய சிறப்புமிக்க மதுரையில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் இருப்பதுதான் மாங்குளம். சிறிய குன்றுகளும், பசுமையான வயல்களும் சூழ்ந்த அழகிய கிராமம்.

அகழாய்வின் நோக்கம்

மாங்குளம், தமிழக வரலாற்றில் மிகவும் பழமையானதும், காலத்தால் முற்பட்டதுமான தமிழி எழுத்துகள் உள்ள குகைப் பகுதிகளைக் கொண்டது. பொ.ஆ.மு. 3-ம் நூற்றாண்டைச் சார்ந்த ஆறு தமிழி கல்வெட்டுகள், இம்மலைக் குன்றுகளில்தான் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றை, 1882-ல் ராபர்ட் சீவல் என்பவர் தனது களஆய்வில் கண்டறிந்தார். பின்னர், 1906-ல் பிரான்சிஸ் மற்றும் கே.வி. சுப்பிரமணிய அய்யர் அவர்களும் ஆய்வை மேற்கொண்டனர். தற்போது இப்பகுதி, தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. இங்கு உள்ளவை, தமிழகத்தில் கிடைத்த தமிழி எழுத்துகளில் மிகவும் பழமையானது. மேலும், பாறைக் குகைகளில் பண்டைய தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளது என்பதை வெளிஉலகுக்கு அறிமுகப்படுத்திய பகுதியும் இதுவே.

இத்தகைய சிறப்பு வாய்ந்த கல்வெட்டுகள் தாங்கிய குகைப் பகுதிகள், உண்மையில் காலத்தால் எவ்வளவு ஆண்டுகள் முற்பட்டது என்பதையும், இங்கு சமணத் துறவிகள் வாழ்ந்தனரா? அவ்வாறு வாழ்ந்திருந்தால் அவர்களது வாழ்க்கை முறை எவ்வாறு இருந்தது என்பதைக் கண்டறியவும், 2005-06-ம் ஆண்டுகளில் தமிழக அரசு இங்கு அகழாய்வை மேற்கொண்டது. (சமணத் துறவிகள் பெரும்பாலும் மக்கள் வசிக்கும் ஊர்ப்பகுதியில் வசிக்காமல், ஊரின் ஒதுக்குப்புறத்தில் அமைந்த காடு சார்ந்த மலைப்பகுதிகளில்தான் வாழ்ந்துள்ளனர்).

தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட குகைப் பாறைகள் - மாங்குளம்

அகழ்வுக்குழிகள்

மாங்குளம் எனக் குறிப்பிடப்படக்கூடிய பகுதியில் மீனாட்சிபுரம் என்ற கிராமத்தில்தான் பழமையான கல்வெட்டுக்களும் கற்படுக்கைகளும் அமைந்துள்ளன. மீனாட்சிபுரத்தில் இரண்டு குழிகளும், குகைகள் நிறைந்த குன்றுகள் பகுதியில் இரண்டு குழிகளும் போடப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தக் குகைப்பகுதிகளின் மேல்பக்க விளிம்புகளில்தான் கல்வெட்டுகளாக எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன.

இக்கல்வெட்டுகளில் கீழ்க்கண்ட வாசகங்கள் காணப்படுகின்றன.

“கணிய் நந்த அஸிரிய குவ் அன்கே தம்மம்

இத்தாஅ நெடுஞ்சழியன் பணஅன் கடல்அன்

வழத்திய் கொட்டுப் பித்தஅ பளிஇய்”

‘வெள்ளறை நிகம்தார் கோடியூர்”

இதில் காணப்படும் நெடுஞ்சழியன், சங்க காலத்தில் பாண்டிய நாட்டை ஆட்சிபுரிந்த பாண்டியன் நெடுஞ்செழியன் ஆகும். நிகமம் என்பதும் வணிகத்தைக் குறிப்பிடும் சொல்லாகும். நிகமம் என்பது வணிகக் குழுவின் தலைமை என்பதையும் குறிக்கிறது. எனவே, இது வணிகர்கள் நிறைந்த பகுதியாகவும், பல்வேறு வகைப்பட்ட வணிகர்கள் குழுமும் இடமாகவும் திகழ்ந்துள்ளது எனலாம்.

தொல்பொருட்கள்

மீனாட்சிபுரம் குகைப் பகுதிகளில் போடப்பட்ட அகழ்வுக்குழிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இங்கு, சங்க காலத்தைச் சார்ந்த கட்டடப் பகுதிகள் வெளிப்படுத்தப்பட்டன. பிற தொல்பொருட்களாக, சங்க காலக் கூறை ஓடுகளும், மட்கலன் ஓடுகளும், இரும்பு ஆணிகளும் கிடைத்துள்ளன. மலைக்குன்றுகளின் மேல் போடப்பட்ட அகழ்வுக்குழிகளில், 60 செ.மீ. ஆழத்தில் கட்டடப் பகுதிகள் வெளிப்படுத்தப்பட்டன. ஒரே அளவிலான சுட்ட செங்கற்களால் கட்டுமானம் செய்யப்பட்டுள்ளது. இச்செங்கற்கள் 35 X 17 X 6 செ.மீ. அளவுடையவை.

செங்கற்களும், கூறை ஓடுகளும், இரும்பு ஆணிகளும், அம்புமுனைகளும்

காலம்

மாங்குளம் கல்வெட்டுகளின் சான்றுகளின்படியும், அகழாய்வுகளில் காணப்பட்ட கட்டடப் பகுதிகளின் அடிப்படையிலும், இங்கு கிடைத்துள்ள சங்க காலக் கூறை ஓடுகள் மற்றும் இரும்பு ஆணிகளின் அடிப்படையிலும், இவை காலத்தால் பொ.ஆ.மு. 3-ம் நூற்றாண்டைச் சார்ந்தவை என்பது தெளிவாகிறது. இங்கு, சமணத் துறவிகள் ஒரு குழுவாக வாழ்ந்துள்ளனர். கட்டடப் பகுதியில் கீழாகப் பாவப்பட்ட நிலையில் செங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இங்கு, கூறைப் பகுதிகளில் பள்ளம் பதித்த சங்க காலக் கூறை ஓடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இரும்பு ஆணிகள், மணிகள் போன்ற தொல்பொருட்களும் கிடைத்துள்ளன. இவற்றுடன், இங்கு காணப்படும் கல்வெட்டுச் சான்றுகளையும் கூடுதல் சான்றுகளாகக் கருதி, இதன் காலத்தையும் கட்டுமானத்தையும், சங்க காலத்தைச் சார்ந்தவை என்று கணிக்க முடியும்.

கட்டடப் பகுதிகளின் தோற்றம் - மாங்குளம்

அகழாய்வின் பயனாக, இப்பகுதியில் சங்க காலத்தில் இருந்தே சமணத் துறவிகள் ஒரு குழுவாகத் தங்கி வாழ்ந்துள்ளனர் என்பதை உறுதி செய்வதுபோல், இங்கு காணப்படும் கற்படுக்கைகளும் சான்றாக அமைந்துள்ளன. இக்கருத்துக்குத் துணை நிற்பதுபோல், இங்கு கிடைத்த தொல்பொருட்களான இரும்பு ஆணிகள், கூறை ஓடுகள், கட்டடப் பகுதிகள் என அனைத்தும் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மோதூர்

தருமபுரியிலிருந்து வடமேற்காக சுமார் 15 கி.மீ. தொலைவிலும், தருமபுரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை 7-ல் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவிலும் மோதூர் கிராமம் அமைந்துள்ளது.

தமிழகத்தில், சமணர் குகைத் தலங்கள் மதுரைக்கு அருகிலும், மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அதிகமாகவும், பிற இடங்களில் குறைவாகவும் காணப்படுகின்றன. அந்த வகையில், மோதூருக்கு அருகே 2 கி.மீ. தொலைவில், கோயிலூர் என்ற பழமையான கிராமத்தில் உள்ள மலையின் அடிவாரத்தில், சமணர் வாழ்ந்த ஒரு குகைத்தலமும், சமணர் படுக்கைகளும் காணப்படுகின்றன. இதையடுத்து, சமணத் துறவிகள் தங்கி வாழ்ந்த பகுதியாக தருமபுரி மாவட்டம் கருதப்படுகிறது. இது வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். இங்கு ஐந்து கல் படுக்கைகள் காணப்படுகின்றன. இவை, பொது ஆண்டுக் கணக்கில் முதல் இரண்டு நூற்றாண்டு காலத்தைச் சார்ந்தவை என்பதில் ஐயமில்லை.

மோதூரின் தொன்மை

கல்வெட்டுகளில், புறமலை நாடு என்று மோதூர் குறிப்பிடப்படுகிறது. மலைகளால் சூழப்பட்ட பகுதி என்பதுதான் இதன் பொருள். முதல் ஊழிக்காலத்தைச் சார்ந்த பாறைப் படிமங்கள் உருமாற்றத்தால் கடினமான பாறைகளாக மாற்றம் பெற்ற கருப்பு நிறப் பாறைகள், பளிங்குக் கல் வகைப் படிமங்கள் போன்றவை மட்டுமின்றி, உருமாற்றம் பெற்ற சுண்ணாம்புப் பாறைகளும், இரும்புத் தாதும் நிறைந்த மாவட்டமாகத் தருமபுரி திகழ்கிறது.

அகழாய்வின் நோக்கம்

தகடூர் யாத்திரையில், “மல்லன்மூதூர் பல்சான்றீரே” என்றும் (தகடூர் யாத்திரை - 27), “பினிக்கதிர் நெல்லின் செம்மண் மூதூர்” (பாடல் - 97) என்றும், அகநானூற்றுப் பாடலில் “அஞ்சுவரு மூதூர்” என்ற குறிப்பும் காணப்படுகிறது. அத்தகு சிறப்பு வாய்ந்த மூதூர்தான் இந்த மோதூர் என்பதை அறிந்து உறுதிப்படுத்தவே அகழாய்வு தேவைப்பட்டது.

மேலும், மோதூர் எவ்வளவு பழமையான ஊர் என்பதையும், தகடூரை ஆண்ட அதியமான் நெடுமான் அஞ்சியோடு எத்தகைய தொடர்பு கொண்டிருந்தது என்பதை அறிவதும் அகழாய்வின் முக்கிய நோக்கங்களில் ஒன்று.

மேற்பரப்பு ஆய்வுகள் மேற்கொண்டபோது, புதிய கற்காலத் தடயங்களும், பெருங் கற்காலப் பண்பாட்டைச் சார்ந்த சான்றுகளும் ஏராளமாகக் காணப்பட்டன. அத்துடன், வரலாற்றுக் காலத் தடயங்களும் மிகுந்து காணப்பட்டதால், இப்பகுதியில் ஆய்வு மேற்கொள் முடிவெடுக்கப்பட்டது. மோதூரில் பெருங் கற்காலப் பண்பாட்டைச் சார்ந்த முதுமக்கள் தாழிகளும், கல்வட்டங்களும் காணப்பட்டன. இதற்கு அருகாமையில் வாழ்விடங்கள் காணப்படுவதும் மேற்பரப்பு ஆய்வில் குறிக்கப்பட்டது. எனவே, மோதூரை மையமாகக் கொண்டு, 2004-05-ல் அகழாய்வு தொடங்கப்பட்டது.

அகழாய்வுச் செய்தி

அகழாய்வில், மூன்று காலகட்டத்தைச் சார்ந்த பண்பாட்டுக் கூறுகள் தென்பட்டன. அவை - 1. புதிய கற்காலம், 2. பெருங் கற்காலம், 3. வரலாற்றுக் காலம். எனவே, வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து வரலாற்றுக் காலம் வரை தொடர்ச்சியாக மக்கள் இப்பகுதியில் வாழ்ந்துள்ளனர் என்பது, இங்கு கிடைத்த தொல்பொருள் தடயங்கள் மூலம் உறுதியாகிறது. தமிழகத்திலேயே புதிய கற்காலம், பிறகு பெருங் கற்காலம், அதைத் தொடர்ந்து வரலாற்றுக் காலம் வரை சான்றுகள் காணப்படுவது ஒரு சில அகழாய்வுகளில் மட்டுமே. அந்த வகையில், பையம்பள்ளி, மயிலாடும்பாறை ஆகியவற்றை அடுத்து மோதூர் முக்கியமான ஓர் அகழாய்வுப் பகுதி.

மோதூர் பண்பாட்டுக் கால கட்டங்கள்

புதிய கற்காலம் : பொ.ஆ.மு. 3000 முதல் பொஆ.மு 1000 வரை

பெருங் கற்காலம் : பொ.ஆ.மு. 1000 முதல் பொ.ஆ. 500 வரை

வரலாற்றுக் காலம் : பொ.ஆ. 500 முதல் பொ.ஆ. 1400 வரை

இங்கு மொத்தம் 15 அகழ்வுக்குழிகள் போடப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 10 முதல் 14 வரையிலான அகழ்வுக் குழிகளில் இருந்து வரலாற்றுக் காலத்துக்குத் தொடர்புடைய சான்றுகள் சேகரிக்கப்பட்டன.

தொல்பொருட்கள்

அகழாய்வில், புதிய கற்காலத்தைச் சார்ந்த கற் கருவிகள் அதிக அளவில் கிடைத்துள்ளன. தமிழகத்தில் இதுவரை வேறு எந்த மாவட்டத்திலும் புதிய கற்காலத்தைச் சார்ந்த கற் கருவிகள் மண் அடுக்குகளில் இந்த அளவுக்குக் கிடைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், புதிய கற்காலத்தைச் சேர்ந்த தொல்பொருட்களைப் பற்றி  நன்கு தெளிவாக அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். புதையுண்ட தமிழகம் பகுதியில், புதிய கற்காலத்தைப் பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது. அதேபோல், இங்கு பெருங் கற்கால வாழ்விடங்களையும், இடுகாட்டையும் ஆய்வு செய்ததில், பெருங் கற்காலத் தடயங்கள் கிடைத்துள்ளன. அதைப்பற்றியும் முந்தைய அத்தியாயங்களில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. ஆகவே, வரலாற்றுக் காலம் தொடர்பான தொல்பொருட்களை மட்டும் இப்போது நாம் பார்ப்போம்.

சுடுமண் வட்டுகள், மட்கலன் ஓடுகள், சுடுமண் தக்களி, சுடுமண் காதணிகள், சுடுமண் புகைப்பான்கள், கெண்டி மூக்குப்பகுதிகள், சுடுமண் பாவை, சங்கு வளையல்கள், செப்புக் காசுகள், சுடுமண் வார்ப்பு என பல்வேறு விதமான வரலாற்றுக் காலத் தடயங்கள் கிடைத்துள்ளன. கூறை ஓடுகள், ஊது உலைகள், சுடுமண் விளக்கு, சுடுமண் தட்டுவான் போன்றவையும் சேகரிக்கப்பட்டன.

ஊது உலை

சுடுமண் ஆட்டுக்கிடா பொம்மை

கருப்பு சிவப்பு மட்கலன் ஓடுகள், கருப்பு நிற மட்கலன் ஓடுகள், அலங்கரிக்கப்பட்ட மட்கலன் ஓடுகள், குறியீடுகள் பொறித்த ஓடுகள் போன்றவை குறிப்பிடக்கூடியவை. சுடுமண் பாவை மிகவும் சிறப்பான தொல்பொருள் ஆகும். சுடுமண் அச்சு, இங்கு சுடுமண் பொருட்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பதற்குச் சான்றாக உள்ளது. சுடுமண் தட்டுவான் கிடைத்ததன் மூலம், இப்பகுதியில் பானை தயாரிப்பில் பானை வனைபவர்கள் அதிகம் ஈடுபட்டிருக்க வேண்டும் என்ற கருத்துக்கு வலு சேர்ப்பதாக இருக்கிறது.

சுடுமண் புகைப்பான்கள்

கூறை ஓடுகள்

இங்குள்ள வீடுகளில் நீள் செவ்வக வடிவ தட்டையான கூறை ஓடுகளையே பயன்படுத்தியள்ளனர் என்பதை இங்கு காணப்பட்ட கூறை ஓடுகளை வைத்துக் கூறலாம். தமிழகத்தில், பொ.ஆ. 8 மற்றும் 9-ம் நூற்றாண்டில் இருந்தே இதுபோன்ற நீள் செவ்வக வடிவ கூறை ஓடுகள் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது என்பதை, தமிழகத்தில் மேற்கொண்ட பல அகழாய்வுகளில் கிடைத்த தரவுகளைக் கொண்டு உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

சுடுமண் பாவை

இங்கு மூன்று சுடுமண் உருவங்கள் கிடைத்தன. அவற்றில் இரண்டு, பெண் உருவ பொம்மைகள். மூன்றாவது, ஆட்டுக்கிடா உருவம். இப் பகுதியில் வசித்த மக்கள் மேய்த்தல் தொழிலை அடிப்படையாகக் கொண்டு தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்கள். எனவே, இங்கு ஆட்டுக்கிடாவின் உருவம் அவர்கள் தொழிலைப் போற்றும் விதத்தில் அமைந்ததாகக் கருதலாம். அடுத்து, தலைப் பகுதி கூர்மையாகவும், கைகள் இரண்டும் கூர்மையாகவும் இருப்பதுபோல் பெண் உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைப் பார்க்கும்போது, இதை மனித உருவில் அமைந்த குத்துக்கல் போன்ற உருவத்துடன் இணைத்துப் பார்க்க முடிகிறது.

மேலும், பெருங் கற்கால ஓவியங்களில் இதுபோன்ற பெண் உருவங்களைக் காட்டும்போது, தலைப்பகுதியை கூர்மையாகவே வரைந்துள்ளனர். எனவே, இவை காலத்தால் பெருங் கற்காலத்துக்கும் புதிய கற்காலத்துக்கும் இடைப்பட்டதாக இருக்க வேண்டும். இதனுடன், புதிய கற்காலத்தைச் சார்ந்த கற் கருவிகள் மண் அடுக்குகளில் காணப்பட்டதால், இதை புதிய கற்காலத்தைச் சார்ந்ததாகவும் கருதலாம்.

மட்கலன்கள்

சுடுமண் அச்சு வார்ப்பு

அடுத்து, நின்ற நிலையில் உள்ள பெண் உருவபொம்மை. இது, வரலாற்றுக் காலத்தைச் சார்ந்தது. இதன் கழுத்தில் அணிகலன்கள் காட்டப்பட்டுள்ளன. கைகளில் வளையல்களும், தலையலங்காரத்துடன் வடிக்கப்பட்டுள்ள ஓர் அழகிய சுடுமண் பாவையான இது, சடங்குகளில் வைத்து வணங்குவதற்காகச் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். வளமை வழிபாடு என்பது தமிழகத்தில் சங்க காலம் தொட்டு இருந்துவருவதைக் காணமுடிகிறது. இதில், பெண்மையை வணங்குதலும், பெண்மையைப் போற்றுதலும் தொடர்ந்து இருந்த வந்த ஒரு சடங்காகும். எனவேதான், பெரும்பான்மையான அகழாய்வுகளில், சுடுமண் பாவைகள் உருவம் நமக்குக் கிடைத்து வருகின்றன.

சுடுமண் தாய் தெய்வம் (வரலாற்றுக் காலம்)

மட்கலன்கள்

அகழாய்வு வழங்கும் செய்தி

அதியமான் நெடுமான் அஞ்சி என்ற சங்க கால மன்னன் ஆட்சிபுரிந்த பகுதியில், இதுவரை சங்க காலம் தொட்டு தொடர்ச்சியாக மக்கள் வாழ்ந்த பகுதியாக நமக்கு எதுவும் கிடைத்ததில்லை. சங்க காலத்துக்கு முன்னர் இருந்தே புதிய கற்கால மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளையும், அடுத்து தொடர்ச்சியாக பெருங் கற்கால மக்களும், அதனைத் தொடர்ந்து வரலாற்றுக் காலத்தில் மக்கள் வாழ்ந்தமைக்கான தடயங்களும் அதிக அளவில் காணப்படும் இடமாக மோதூர் திகழ்கிறது. மேலும், புறநானூறு பாடல்களில் கூறப்படும் மூதூர்தான் இந்த மோதூர் என்பதும், புறமலை நாட்டில் அமைந்துள்ள இப்பழமை வாய்ந்த ஊர்தான் மோதூர் என்பதும் அகழாய்வில் கிடைத்துள்ள சான்றுகள் தெளிவுபடுத்துகின்றன. அத்துடன், அதியமான் ஆட்சிபுரிந்த பகுதியில் குறிக்கப்படும் புறமலை நாடு என்பதும் இதுவே என்பது உள்ளிட்ட பல அரிய தகவல்களை அறிந்து உறுதி செய்யவும் இவ்வகழாய்வுச் சான்றுகள் துணை நிற்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com