மருமகள்களை அச்சுறுத்துகிறதா சீரியல்கள்?

நம் நாட்டில் அனைத்து பெண்களுமே ஆண்கள் சந்திக்காத இரு பெரும் சவால்களை தங்கள் வாழ்க்கையில் சந்திக்கிறார்கள். ஒன்று உடல்ரீதியான சவால். மற்றொன்று மன ரீதியான, உணர்வு ரீதியான சவால்.
மருமகள்களை அச்சுறுத்துகிறதா சீரியல்கள்?

நம் நாட்டில் அனைத்து பெண்களுமே ஆண்கள் சந்திக்காத இரு பெரும் சவால்களை தங்கள் வாழ்க்கையில் சந்திக்கிறார்கள். ஒன்று உடல்ரீதியான சவால். அதுதான் மகப்பேறு. மற்றொன்று மன ரீதியான, உணர்வு ரீதியான சவால். அது மாமியார் என்கிற உறவு. ஆம் இந்த உறவு சரியாக அமையாவிட்டால் பல பெண்களின் வாழ்க்கை ஒரு கேள்விக்குறியாகிவிடும். அதனால்தான் அதை ஒரு சவால் என்று சொல்கிறேன்.

ஒரு ஆண் திருமணத்துக்குப் பெண் தேடும்பொழுது வரும் பெண்ணைப் பற்றிய கனவும் எதிர்பார்ப்பும் மட்டுமே இருக்கும். ஆனால் ஒரு பெண்ணுக்கு அப்படியல்ல.. கணவருடன் சேர்ந்து தனக்கு வரப்போகும் மாமியார் பற்றிய சிறு எதிர்பார்ப்பும், ஒரு படபடப்பும் இருக்கும். திருமணம் வரை அம்மாவை செல்லமாக அதிகாரம் செய்து வளர்ந்த ஒரு பெண் திருமணத்திற்கு பின் தன் மாமியாருக்கு மரியாதை கொடுத்து அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பது ஒரு எழுதப்படாத விதி. அதை இன்று வரை அனைத்து பெண்களுமே (ஒரு சில விதி விலக்கைத்தவிர) தங்களால் இயன்றவரை காப்பாற்றித்தான் வருகிறார்கள.

ஆனாலும் நம் முந்தைய தலைமுறை பெண்கள் அதிகமான படிப்பறிவு இல்லையென்றாலும் கூட கூட்டுக் குடும்பத்தில் இருந்து இத்தனை சவாலை சமாளித்த நமக்கு முன் உதாரணமாக வாழ்ந்தார்கள். ஆனால் இன்றைய தலைமுறை பெண்கள் அதிகம்படித்தும், வெளி உலகின் மிகப்பெரிய சவால்களை எல்லாம் சமாளிக்கும் திறமை இருந்தும் வீட்டில் உள்ள இந்த சிறு உறவுச் சவாலை சந்திக்கத் தயங்குகிறார்கள். தடுமாடுகிறார்கள்.

ஆம், திருமணத்துக்கு முன்பே சில பெண்கள் மாமியார் இருக்கக் கூடாது என்றும், ஒருவேளை இருந்தால் தனிக்குடித்தனம் வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கிறார்கள். அம்மாக்களோ தன் பையனின் திருமணம் நிச்சயமானவுடன் புது உறவு வரப்போகிறது என்ற சந்தோஷத்தையும் தாண்டி அவள் வந்தால் நமது வாழ்க்கை முறையில் என்னென்ன மாற்றங்கள் நிகழுமோ என்ற அச்சத்தையும் உணருகிறார்கள்.

ஒருபடி மேலேச் சென்று இந்த அச்சத்தின் காரணமாக, தனது மகனுக்கு திருமணம் முடிப்பதையே தள்ளிப்போடும் தாய்மார்களும் உண்டுதான். மறுப்பதற்கில்லை.

ஏன் இந்த முரண்பாடான எண்ணம் ஏற்படுகிறது. இதற்கு யார் காரணம்? ஒரே மகன், ஒரே மகள் என்ற அச்சமா? மகன் அல்லது மகள் மீது வைத்த பாசமா? இவையெல்லாம் காரணங்களாக இருந்தாலும், வீட்டுக்குள் அரசாட்சி செய்து கொண்டிருக்கும் தொலைக்காட்சி தொடர்களும் இவற்றுக்குக் காரணங்களாக அமைகின்றன என்பதை முற்றிலும் மறுத்துவிட முடியாத உண்மை.

ஆம்.. பெரும்பாலான தொலைக்காட்சித் தொடர்களில் மாமியாரை மகனிடம் இருந்து மருமகளைப் பிரித்து வீட்டை விட்டு வெளியேற்றும் கொடுமைக்காரியாகவும், (இதில் மாமியாருக்கு உதவ அவரது தாயோ, சகோதரியோ கூட்டுச் சதி வேறு செய்வார்கள்) மருமகளை, அம்மாவிடமிருந்து மகனைப் பிரித்து மாமியாரை முதியோர் இல்லத்துக்கு அனுப்பும் ஒரு வில்லியாகவும் சித்தரித்து இந்த அழகான உறவை அச்சுறுத்தும் உறவாகப் பார்ப்பவர்களின் மனதில் ஒரு பீதியையும் சஞ்சலத்தையும் ஏற்படுத்திவிடுகிறார்கள். தங்கள் கதை விறுவிறுப்பாகவும், பல வாரங்களுக்கு தொடரை இழுக்கவும், வார இறுதி நாள்களில் எதிர்பார்ப்பைக் கூட்டவும் தொடர்கதைகளில் இவ்விரண்டு உறவுகளையும் வில்லிகளாகச் சித்தரிப்பது வேதனை. அவர்களைக் கேட்டால், உண்மையில் பல வீடுகளில் நடப்பதைத்தான் நாங்கள் காட்டுகிறோம் என்பார்கள். தொடர்ந்து தொலைக்காட்சித் தொடர்களைப் பார்க்கும் பெண்களும் வீடுகளில் நடப்பதை அப்படியே காட்டுகிறார்கள் என்று புலங்காகிதம் அடைகிறார்கள்.

இருக்கலாம், இந்த தொடர்களில் வரும் கதாப்பாத்திரங்களைப் போல 25 சதவீத வீடுகளில் இருக்கலாம். நடக்கலாம். அதுவே முழு சமுதாயத்துக்குமான அடையாளமாகிவிடாது. அடையாளமாக்கிவிடவும் முடியாது.

நான் பணிபுரிந்த இடத்தில் வேலைக்குச் செல்லும் மருமகளுக்காக வீட்டிலிருந்து பேரக் குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் மாமியார்களும், மருமகளுக்கு பிரசவம் பார்க்க தன் கணவனையும், நாட்டையும் விட்டு வெளிநாடு செல்லும் மாமியார்களையும், அதே வேளையில் வயதான மாமியாருக்காக 4 மணிக்கே எழுந்து சமைத்து மேசையில் வைத்துவிட்டு வேலைக்குச் செல்லும் மருமகளும், உடல்நிலை சரியில்லாத மாமியாருக்காக தன் வேலையை தியாகம் செய்த மருமகளையும் பார்த்திருக்கிறேன்.

மற்ற எல்லா உறவுகளையும் போல அல்லது அதையும் விட சற்று அதிகமாகவே மனக்கசப்புகள், கருத்து வேறுபாடுகள் மாமியார் - மருமகள் உறவுக்குள் வரலாம். அது அம்மா  - மகள் உறவுக்கிடையே கூட வரும். அதை யாரும் பெரிதுப்படுத்தமாட்டார்கள்.

எனவே நல்ல புரிதல் ஏற்பட்டால் மாமியார், மருமகள் என்கின்ற இந்த உறவு மிகவும் சிறந்த ஒரு உன்னதமான உறவு என்பதை நான் ஒரு மருமகளாகவும் மாமியாராகவும், பெருமையுடன் சொல்லி முடிக்கிறேன்.

[கட்டுரையாளர்-சராசரி தமிழ் குடும்பத் தலைவிகளில் ஒருவர்]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.