ஜாப் ஆர்டர்களுக்கான ஜி.எஸ்.டி. யை 5 சதவீதமாக குறைக்க வேண்டும்

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை மாவட்டம் இன்று வரை சிறந்த தொழில் நகரமாக செயல்பட்டு வருகிறது.
ஜாப் ஆர்டர்களுக்கான ஜி.எஸ்.டி. யை 5 சதவீதமாக குறைக்க வேண்டும்

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை மாவட்டம் இன்று வரை சிறந்த தொழில் நகரமாக செயல்பட்டு வருகிறது. மேற்கு மண்டலத்தின் முதல் தொழிற்பேட்டையான சிட்கோ (ஒருங்கிணைந்த கூட்டுறவு தொழில் பேட்டை) கோவை, பொள்ளாச்சி சாலையில் 1973 ஆம் ஆண்டு சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் துவங்கப்பட்டது.
 பின்னர் கூடுதலாக 40 ஏக்கர் அளவுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டு, மொத்தம் 80 ஏக்கர் பரப்பளவில் சிட்கோ தொழிற்பேட்டை இயங்கி வருகிறது. இங்கு இரும்பு, பொறியியல் மற்றும் வார்ப்பு என அனைத்து துறை சார்ந்த 240 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
 கோவையில் உள்ள அனைத்து பெரிய நிறுவனங்களின் கிளைத் தொழிற்சாலைகளும் சிட்கோ தொழிற்பேட்டையில் அமைந்துள்ளன. நான்கு சக்கர வாகனங்களுக்கு பயன்படுத்தும் சிலிண்டர்கள் 90% சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படுகின்றன.
 இங்கு தயாரிக்கப்படும் பல்வேறு சாதனங்களின் உதிரி பாகங்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. ஆண்டுக்கு சுமார் நூறு கோடிக்கு மேல் இதன் மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. சிட்கோ தொழிற் பேட்டையில் முதலீடு செய்ய வரும் நிறுவனத்துக்கு 25% தமிழக அரசு மானியம் வழங்கி ஊக்குவித்து வருகிறது. இதன் காரணமாக தொழிற்சாலைகளின் வரவு சமீப காலமாக அதிகரிக்கத் துவங்கி உள்ளது. சிட்கோ தொழில் பேட்டையில் புதிதாக அமைக்கப்படும் தொழிற்சாலைகளுக்கு உடனடி மின் இணைப்பு, சுற்று சூழல் அனுமதி என எளிமையான முறையில் விரைவில் தொழிற்கூடங்கள் அமைக்க ஏதுவான சூழல் உள்ளது.
 மத்திய அரசின் ரயில்வே துறைக்கு இரும்பு பாதைக்கு தேவையான பாகங்கள் சிட்கோவில் உள்ள தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுகின்றன.
 இதுகுறித்து கோயமுத்தூர் சிட்கோ உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தின் முன்னாள் தலைவர் எஸ்.சுருளிவேல் கூறியதாவது:
 சிட்கோ 1973 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. சிட்கோவில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு 25% மானியம், இயந்திரம் வாங்குவதிலும் மானியம், உடனடியாக மின் இணைப்பு என தொழில் துவங்க ஏற்ற சூழல் உள்ளதால் முதலீடுகள் அதிக அளவில் வருகின்றன. தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகில் சிட்கோ தொழிற்பேட்டை அமைந்துள்ளதால் போக்குவரத்துக்கு ஏதுவாக உள்ளது. தமிழகத்தில் தொடர் மின் வெட்டு ஏற்பட்ட காலகட்டத்திலும், கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தின்போது ஏற்பட்ட தாக்கமும் மிக பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தின. முதலீடுகள் வேகமாக குறைந்து, அதன் பின் மெதுவாக சிட்கோ பழைய நிலைக்கு வந்தது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி வரி விதிப்பு ஆகியவற்றால் சிறு நிறுவனங்கள் தற்போது மீண்டும் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஜாப் ஆர்டர்கள் வேலைகளை செய்யும் நிறுவனங்களுக்கு 18 % ஜி.எஸ்.டி.வரி என்பது அவர்களால் தாங்க முடியாத சுமையாக உள்ளது.
 ஜாப் ஆர்டர்களை எடுத்து செய்யும் நிறுவனங்களுக்கு அதற்கான தொகையை 3 மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே வேலை வழங்கும் நிறுவனங்கள் வழங்குகின்றன.
 இதனால் தொழிலாளர்களுக்கு சம்பளம், பராமரிப்பு செலவுடன் ஜி.எஸ்.டி. என்பது சுமையாக உருவெடுத்துள்ளது. ஜாப் ஆர்டர்களுக்கான ஜி.எஸ்.டி யை 5% குறைப்பதன் மூலம் இதனை சரி செய்ய முடியும். ஜி.எஸ்.டி. வரி விதிப்பை இரண்டு பகுதிகளாகப் பிரிக்க வேண்டும். சிட்கோவில் சாலை , குடிநீர் வசதி, தெரு விளக்குகள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 மேலும் கோயம்புத்தூர் சிட்கோ உற்பத்தியாளர்கள் நலச் சங்கம் சார்பாக கூடுதலாக சிட்கோ தொழிற்பேட்டை கோவை, கிணத்துக்கடவு அருகில் சுமார் 42 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. 2020 ஆண்டுக்குள் இதற்கான பணிகள் துவங்க உள்ளன. 56 தொழிற்சாலைகள் முதல் கட்டமாக அமைக்கப்பட உள்ளன. இதற்கான உள்கட்டமைப்பு வசதிகளுக்கு தமிழக அரசு ரூ. 10 கோடி நிதி வழங்க உள்ளது என்றார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com