பட்டுச் சேலை உற்பத்தியில் 3 ஆம் இடம் வகிக்கும் சிறுமுகை

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதன் ஆடை உடுத்த ஆரம்பித்த காலத்தில் இருந்தே கைத்தறி நெசவுத் தொழில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது
பட்டுச் சேலை உற்பத்தியில் 3 ஆம் இடம் வகிக்கும் சிறுமுகை

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதன் ஆடை உடுத்த ஆரம்பித்த காலத்தில் இருந்தே கைத்தறி நெசவுத் தொழில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் இத்தொழில் பல்வேறு பரிணாமங்களில் தற்போது வளர்ச்சி அடைந்துள்ளது.
 அன்றைய மன்னராட்சிகளில் கைத் தொழிலுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. இந்தியாவில் விவசாயத்துக்கு அடுத்த பெரிய தொழிலாக ஜவுளித் துறை உள்ளது. இத்தொழில் குறித்து மற்றவர்களிடம் அதிக அளவில் விழிப்புணர்வு இல்லை. ஆனால் இத்தொழில் அதிக லாபம் தரக்கூடியது. மற்ற துறைகளைக் காட்டிலும் இந்த துறையில் வேலைவாய்ப்பு அதிக அளவில் உள்ளது. ஆனால் ஆள்கள் பற்றாக்குறையாக உள்ளது. இத்தொழிலில் கடினமானது ஜமுக்காளம், பெட்ஷீட், காட்டன் நெசவுதான். சுலபமான தொழில் பட்டு நெசவு. அதிக லாபம் தரக்கூடியதும் இதுதான். ஆனால் கைத்தறி நெசவாளர்கள் குறைவாக உள்ளதால் இந்திய அளவில் சாப்ட் சில்க் உற்பத்தி செய்வதில் தமிழகம் 3 ஆவது இடத்தில் உள்ளது.
 இதில் தமிழகத்தில் காஞ்சிபுரம் முதலிடத்திலும், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி 2 ஆவது இடத்திலும், சிறுமுகை பகுதி 3 ஆவது இடத்திலும் உள்ளன. எனவே, அரசு சார்பில் நெசவாளர்களுக்குப் பயிற்சி அளித்து தொழில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கைத்தறி நெசவாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
 இதுகுறித்து தேசிய கைத்தறி பயிற்சியாளர் வி.காரப்பன் கூறியதாவது:
 மேட்டுப்பாளையம் தாலுகாவுக்கு உள்பட்ட சிறுமுகை உள்பட 50-க்கு மேற்பட்ட கிராமங்களில் 15 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கை, கால்கள் சேர்ந்தால்தான் கைத்தறி. ஒரு சேலை நெய்ய 18 ஆயிரம் முறை கை, கால்கள் தனித்தனியாக அசைக்க வேண்டும். இதற்காக 10 வருட ஆராய்ச்சிக்குப் பின்னர் காலால் நெசவு செய்யும் கருவியைக் கண்டுபிடித்துள்ளேன். இதில் பணியாற்ற மின்சாரம் தேவையில்லை. அடுத்த தலைமுறைக்கு இது ஒரு வரமாக அமையும். இதற்கு மத்திய அரசின் பெங்களூரு பட்டு வளர்ச்சித் துறை, சேலம் கைத்தறி சேவை மையம் ஆகியவை அங்கீகாரம் வழங்கி உள்ளன. இதற்கான காப்புரிமை வந்தவுடன் மத்திய அரசே இதனை மானியத்தில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உலகத்தில் மனிதன் சுலபமாகக் கற்று கொள்ளும் தொழில் நெசவு. இதற்கு வயதோ படிப்பறிவோ தேவையில்லை. பெண்களுக்கு 90 சதவீதமும், ஆண்களுக்கு 10 சதவீதமும் வேலைவாய்ப்பு உள்ளது. 10 மணி நேரத்தில் ஒரு புடவை உற்பத்தி செய்ய ஆள் ஒன்றுக்கு ரூ.1,000 வரை கூலியாக உள்ளது. 70 ஆண்டுகளுக்கு முன் சந்தைகளில் கைத்தறி சேலைகள் விற்பனை செய்யப்பட்டன. ஆனால் இன்று இதற்கு மதிப்பு கூட்டப்பட்டு பெரிய அளவிலான கடைகளில் வைத்து விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் 70 ஆண்டுகளுக்கு முன் 1 லடி நூல் ரூ.2 முதல் ரூ.3 வரை விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஒரு சேலை நெய்ய ரூ. 2 கூலியாக நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் 450 முதல் 550 கிராம் வரை எடையுள்ள சேலை நெய்ய நூல் மற்றும் ஜரிகை ரூ. 300 செலவாகிறது. ஒரு ஆளுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை கூலி வழங்கப்படுகிறது.
 இதன்மூலம் இத்துறையில் முதலை காட்டிலும் கூலி 4 மடங்கு அதிகமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கைத்தறி சேலையின் விலை ரூ. 2500 இல் இருந்து ரூ. 50 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. தற்போது இத்துறையில் நெசவு பணி மேற்கொள்ள ஆள்கள் பற்றாக்குறையாக உள்ளது. கணினித் துறை மூலம் நெசவுத் தொழில் பல்வேறு வகையில் வளர்ச்சி அடைந்துள்ளது. இதன்மூலம் வடிவமைப்புகள் சுலபமாக உள்ளது. ஆரம்ப காலத்தில் ஒரு சேலை வடிவமைப்பு மேற்கொள்ள ஒரு மாதம் ஆகும். கணினி வளர்ச்சிக்குப் பின் இன்று ஒரே நாளில் முடிகிறது. கோவை மாவட்டத்தில் கைத்தறி வடிவமைப்பாளர் 4 பேர் மட்டுமே உள்ளனர். இத்தொழில் மேற்கொள்ள 10 அடி நீளம், 10 அடி அகலம் அறை இருந்தால் போதும். ரூ.50 ஆயிரம் மதிப்பில் நவீன கைத்தறி இயந்திரம் பொருத்த முடியும். இதன் மூலம் வாரம் ரூ.15 ஆயிரம் வரை வருமானம் ஈட்ட முடியும் என்றார்.
 இதுகுறித்து ஜவுளிக் கடை உரிமையாளர் தண்டபாணி கூறியதாவது:
 விசைத்தறி, கைத்தறி என இருவகை உள்ளது. கைத்தறியில் தாங்கள் நினைத்த இடத்தில் தறியை நிறுத்தி வடிவமைப்பை உருவாக்க முடியும். ஆனால் விசைத்தறியில் முடியாது. விசைத்தறியில் சேலைகள் ரூ. 150 முதல் விற்பனை துவங்குகிறது. ஆனால் கைத்தறி சேலை ரூ.2,500 முதல் விற்பனை துவங்குகிறது. கைத்தறி சேலைகள் இந்தியாவை காட்டிலும் வெளிநாடுகளுக்குதான் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சந்தையில் கைத்தறி சேலைகளுக்கு அதிக கிராக்கி உள்ளது. இதனால் பெரிய துணிக் கடை உரிமையாளர்கள் கைத்தறி நெசவாளர்களின் வீடுதேடி வந்து ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை முன்பணம் வழங்கத் தயாராக உள்ளனர் என்றார்.
 கே.பாபு
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com