முதலீடுகளை ஈர்க்கத் தேவை விமான நிலைய விரிவாக்கம்

மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரான கோவை, மிகப் பெரிய தொழில் நகரமாகவும், கல்வி, சுற்றுலா, மருத்துவ வசதிகள் கொண்ட நகரமாகவும் உள்ளது. கோவையில் இருந்தும் அண்டை மாவட்டங்களான
முதலீடுகளை ஈர்க்கத் தேவை விமான நிலைய விரிவாக்கம்

மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரான கோவை, மிகப் பெரிய தொழில் நகரமாகவும், கல்வி, சுற்றுலா, மருத்துவ வசதிகள் கொண்ட நகரமாகவும் உள்ளது. கோவையில் இருந்தும் அண்டை மாவட்டங்களான திருப்பூர், ஈரோடு, சேலம் பகுதிகளில் இருந்தும் உற்பத்தியாகும் பொருள்களை வெளிநாடுகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும் விரைவாக எடுத்துச் செல்லவும், தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள், அரசு அதிகாரிகள், வெளிநாட்டு வர்த்தகர்கள் உடனடியாக வந்து செல்லவும் விமானப் போக்குவரத்து வசதி அவசியம்.
 கோவையில் தற்போது சுமார் 600 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச விமான நிலையத்தில் தற்போது வாரத்துக்கு 9 சர்வதேச விமானங்களும், சுமார் 390 உள்நாட்டு விமானங்களுமே வந்து செல்கின்றன. ஆண்டுக்கு சுமார் 16 லட்சம் பயணிகள் வந்து செல்லும் இந்த விமான நிலையம் மூலம் சுமார் 6,500 டன் சரக்குகள் ஏற்றி, இறக்கப்படுகின்றன.
 இந்த விமான நிலையத்தின் ஓடுபாதை சுமார் 9 ஆயிரம் அடியாக உள்ளது. ஆனால், சர்வதேச அளவில் இயக்கப்படும் பெரிய அளவிலான விமானங்கள் வந்து செல்ல வேண்டுமானால் ஓடுபாதை சுமார் 12 ஆயிரம் அடியாக இருக்க வேண்டும். சர்வதேச தரத்திலான விமான நிலையம் அமைக்க வேண்டுமானால் கூடுதல் விமான நிறுத்துமிடம், கண்காணிப்பு கோபுரம் உள்ளிட்ட பல்வேறு கட்டுமானப் பணிகள் செய்ய வேண்டும். இதற்காக விமான நிலைய விரிவாக்கத்துக்காக சுமார் 850 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்திக் கொடுக்கும்படி விமான நிலைய ஆணையம் கடந்த 2002 முதல் கோரிக்கை விடுத்து வருகிறது.
 இதற்காக விமான நிலையத்தை ஒட்டியுள்ள சின்னியம்பாளையம், இருகூர், நீலிகோணாம்பாளையம் சுற்றுப் பகுதிகளில் இருந்து 627.89 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த கடந்த 2010 ஆம் ஆண்டில் அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் நிலம் கையகப்படுத்தும் பணிக்கு உள்ளூர் பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.
 மக்களிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை அடுத்து கையகப்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்த சில பகுதிகள் நீக்கப்பட்டன. இறுதியாக பட்டா நிலம் 461 ஏக்கர், புறம்போக்கு 28 ஏக்கர், முப்படைகளின் நிலம் 134 ஏக்கர் ஆகியவற்றை கையகப்படுத்தத் திட்டமிடப்பட்டது.
 ஆனால் கையகப்படுத்தும் பணிகள் தொடர்ந்து தாமதமாகி வருவதால் விமான நிலைய விரிவாக்கம் தொடர்ந்து தள்ளிப்போகிறது. இதனால் கோவைக்கு வர வேண்டிய பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் வெளி மாநிலங்களுக்குச் செல்வதாகக் கூறுகிறார் கோவை இந்திய தொழில் வர்த்தக சபையின் முன்னாள் தலைவர் டி.நந்தகுமார்.
 கோவை சர்வதேச விமான நிலையம் என்று கூறினாலும் சிங்கப்பூருக்கும் ஷார்ஜாவுக்கும் மட்டுமே இங்கிருந்து சர்வதேச விமானங்கள் இயக்கப்படுகின்றன. மேலும், தற்போது 8 விமானங்களை நிறுத்தும் அளவுக்கு மட்டுமே இடம் உள்ளது. இதை 20 விமானங்கள் நிறுத்தும் அளவுக்கு மேம்படுத்த வேண்டும். கோவைக்கு சர்வதேச விமான நிலைய அங்கீகாரம் தற்காலிகமாகவே வழங்கப்பட்டுள்ளது.
 விரிவாக்கப்பணி நடைபெறாவிட்டால் அந்த உரிமம் ரத்தாகும் நிலை உருவாகும். ஆண்டுக்கு சுமார் ரூ.10 ஆயிரம் கோடி வரை வர்த்தகம் நடைபெறும் கோவையில், பல்லாயிரக்கணக்கான சிறு, குறு, பெரிய தொழில் நிறுவனங்கள் உள்ளன. மேலும், ஜவுளித் துறை, அதன் சார்பு தொழில்கள், இயந்திர உதிரி பாகங்கள், பம்ப்செட் உற்பத்தி, கிரைண்டர், நகை தயாரிப்பு தொழில்கள் உள்ளன.
 அதேபோல், பல்வேறு தொழில்நுட்பக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், மருத்துவக் கல்லூரிகள், உயர் கல்வி நிறுவனங்கள், உயர்தர மருத்துவ வசதி கொண்ட மருத்துவமனைகள் உள்ளன. அதேபோல் சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கும், மருத்துவ சுற்றுலா விரிவடையவும் விமான நிலைய விரிவாக்கம் அவசியமானது.
 சர்வதேச விமானங்கள் வந்து சென்றால்தான் தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சி அடையும். எனவே கோவையில் இருந்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு துபை, அபுதாபி வழியாக விமான சேவை விரைவில் தொடங்கப்பட வேண்டும். இதன் மூலம் பயணிகள் மட்டுமின்றி சரக்குப் போக்குவரத்துத் துறையும் பயனடையும். இப்போது கொச்சி, திருச்சி, சென்னை, பெங்களூரு விமான நிலையங்கள் மூலமாகவே அதிக அளவிலான சரக்குகள் எடுத்துச் செல்லப்படுகின்றன.
 எனவே விமான நிலைய விரிவாக்கத்துக்கு விரைவில் கூடுதலான நிதியை ஒதுக்கீடு செய்து பணிகளை முடிக்க வேண்டும். அத்துடன் விமான நிலையத்தை எளிதில் அடையும் வகையில் 6 வழிச் சாலை அமைக்க வேண்டும். கோவையில் இருந்து மலைப் பகுதிகளும் சுற்றுலாத் தலங்களுமான உதகை, கொடைக்கானல், ஏற்காடு போன்ற இடங்களுக்குச் செல்ல ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்பட வேண்டும்.
 அவ்வாறு செய்வதால் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் வசதியையும் கொண்டு வர முடியும். அதேபோல் சுற்றுலா நகரமான உதகைக்கு கோவை, சென்னை, பெங்களூரு நகரங்களில் இருந்து எளிதில் வரும் வகையில் சிறிய விமானங்கள் இயக்கப்பட வேண்டும். இதன் மூலம் அன்னிய செலாவணியை ஈட்ட முடியும் என்றார் நந்தகுமார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com