வடஇந்திய உணவுகளை அள்ளித் தரும் வேலூர்!

பரபரப்பு மிகுந்த நவீன வாழ்க்கைச் சூழலில் அடித்தட்டு மக்கள் முதல் அனைத்துத் தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக விளங்குவது சுற்றுலா. அவ்வாறு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும்
வடஇந்திய உணவுகளை அள்ளித் தரும் வேலூர்!

பரபரப்பு மிகுந்த நவீன வாழ்க்கைச் சூழலில் அடித்தட்டு மக்கள் முதல் அனைத்துத் தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக விளங்குவது சுற்றுலா. அவ்வாறு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், பிற மாநிலங்களுக்கும், பிற நாடுகளுக்கும் சுற்றுலா செல்வோர் அங்குள்ள முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பார்த்து ரசிப்பதற்காக மட்டும் செல்வதில்லை. அத்துடன், அப்பகுதிகளில் கிடைக்கும் பாரம்பரிய உணவு வகைகளை ருசிப்பதையும் அதிகம் விரும்புகின்றன்ர். மேலும், நீண்ட நாள்கள் கெட்டுப்போகாத உணவு வகைகளாக இருந்தால் அவற்றை தனது குடும்பத்தாருக்கும் வாங்கி வருவதும் உண்டு.

 ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான ரூபாய்கள் செலவிட்டு பல மாவட்டங்கள், பல மாநிலங்கள், பல நாடுகளுக்கும் சென்றுதான் அப்பகுதியின் பாரம்பரிய உணவுகளை ருசிக்க வேண்டும் என்பது எல்லாத் தரப்பு மக்களாலும் இயலாததாகும். அத்தகைய கவலையைப்போக்கும் விதமாக வேலூரில் அதிகரித்து வரும் வடஇந்திய உணவகங்கள் பல்வேறு மாநிலங்களின் உணவுகளை மட்டுமின்றி, பல நாடுகளின் பாரம்பரிய உணவு வகைகளையும் அள்ளித் தருகின்றன.


 குறிப்பாக, காட்பாடி அருகே விஐடி பல்கலைக்கழகப் பகுதியில் பெருகிக்கிடக்கும் நூற்றுக்கணக்கான உணவுக் கூடாரங்களில், தென்னிந்திய, வடஇந்திய உணவு வகைகளான ரொட்டி, நான், பிரைடு ரைஸ், புலாவ், சூப் வகைகள், புட்டு, ஆலு பரோட்டா, கச்சோரி, தாபேலி, பீட்சா, பர்கர் உள்ளிட்ட பலதரப்பட்ட உணவுகள் மட்டுமன்றி, பல நாடுகளின் உணவுகளும் சைவ, அசைவ வகைகளில் கிடைக்கின்றன. இதேபோல், வேலூர் மாநகரிலும் ஏராளமான வடஇந்திய உணவகங்கள் அதிகரித்து மக்கள் விரும்பும் புதுமையான உணவு வகைகளைத் தயாரித்து அளிக்கின்றன.

 குறைந்த விலையில், நிறைந்த தரத்துடன் உணவு வகைகள் அளிக்கப்படுவதால் இந்த உணவகங்களை நாடி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இதையொட்டி, தேநீர், பழக்கடைகள், ஆடையகங்கள், புத்தகக் கடைகள், குழந்தைகளுக்கான பொம்மைகள் விற்பனை என பல சிறு தொழில்களும் வளர்ச்சி பெற்று வருகின்றன.

 இதுகுறித்து காட்பாடியில் வடஇந்திய உணவகம் நடத்தி வரும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் கூறியது:

 வேலூர் என்பது சுற்றுலாப் பகுதிகளின் மையமாகத் திகழ்கிறது. குறிப்பாக, வேலூர் கோட்டை, தங்கக் கோயில், ஏலகிரிமலை ஆகியவற்றை சுற்றிப்பார்க்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். மேலும், திருப்பதிக்கு வேலூர் வழியாகவே நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர். இதனால், வேலூரில் நாள்தோறும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும், வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனைக்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும், வெளி நாடுகளில் இருந்தும் மக்கள் அதிக அளவில் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

 இதுதவிர, விஐடியில் பல்வேறு மாநில, வெளி நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களுக்காக வேலூர், காட்பாடி பகுதிகளில் வடஇந்திய உணவகங்கள் தொடங்கப்பட்டன. நாடு முழுவதும், பிற நாடுகளுக்கும் சென்று சாப்பிட வேண்டிய உணவு வகைகள் இந்த உணவகங்களிலேயே தயாரித்து அளிக்கப்படுகின்றன. இந்த உணவு வகைகளுக்கு மக்கள் மத்தியில் அதிக அளவில் வரவேற்பு உள்ளதால் தற்போது வேலூர், காட்பாடி பகுதிகளில் வடஇந்திய உணவகங்கள் பெருகிவிட்டன. இந்த உணவகங்களில் படித்த, படிக்காத இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பும் கிடைத்து வருவதுடன், இவற்றின் மூலம் சிறு தொழில்களும் வளர்ச்சி பெற்று வருகின்றன என்றார் அவர்.

 வேலைப்பளுவால் சுற்றுலா செல்ல முடியாதவர்கள் சற்று நேரம் ஒதுக்கி இந்த உணவகங்களுக்கு வந்தால் சுவை மிகுந்த தென்னிந்திய, வடஇந்திய, பிற நாடுகளின் உணவகங்களை ருசித்து மகிழலாம் என்று இருகரம் கூப்பி வரவேற்கிறது வேலூர்.
 - என்.தமிழ்செல்வன்
 வேலூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com