அச்சு வெல்லம் தயாரிப்பு தொழில் காக்கப்படுமா?

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் பகுதியில் அழியும் நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் அச்சு வெல்லம் தயாரிப்புத் தொழிலை தமிழக அரசு காக்க வேண்டும் என்று
அச்சு வெல்லம் தயாரிப்பு தொழில் காக்கப்படுமா?

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் பகுதியில் அழியும் நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் அச்சு வெல்லம் தயாரிப்புத் தொழிலை தமிழக அரசு காக்க வேண்டும் என்று இத்தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
 இனிப்பு வகைகளில் சேர்க்கப்படும் முக்கியப் பொருள்களில் பிரதான இடத்தில் உள்ளது ஆலைக் கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் அச்சு வெல்லம், நாட்டு சர்க்கரை, ஜீனி (வெள்ளை சர்க்கரை)தான். இவற்றில் அச்சு வெல்லமானது இனிப்புப் பண்டங்களில் சேர்க்கப்படுவதோடு, மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது.
 பாபநாசம் வட்டாரத்தில் பல்லாண்டுகளாக அச்சு வெல்லம் தயாரிப்பது முக்கிய குடிசைத் தொழிலாக நடைபெற்று வருகிறது. ஆனால், இன்று இத்தொழில் அழியும் நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
 இத்தொழில் குறித்து பாபநாசம் வட்டம், மாகாளிபுரம் முன்னோடி கரும்பு விவசாயி எம். பழனிசாமி கூறியது:
 பாபநாசம் வட்டாரத்தில் ஈச்சங்குடி, சோமேசுவரபுரம், மணலூர், வீரமாங்குடி, கணபதியக்ரஹாரம், பட்டுக்குடி, உள்ளிக்கடை, மாகாளிபுரம், கருப்பூர், கபிஸ்தலம், உம்பளப்பாடி, திருமண்டங்குடி உள்ளிட்ட 30- க்கும் மேற்பட்ட கிராமங்களில் நூற்றுக்கு மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் அச்சு வெல்லம் தயாரிக்கும் பணி பல்லாண்டுகளாக நடைபெறுகிறது.
 நாங்கள் சாகுபடி செய்யும் கரும்புகளை ஆலைகளுக்கு அனுப்புவதில்லை. எங்கள் பகுதியில் அச்சு வெல்லம் தயாரிக்கும் பட்டறைகளில் அச்சு வெல்லம் தயாரிக்கப் பயன்படுத்தி வருகிறோம். அச்சு வெல்லம் தயாரிக்க தற்போது சி.ஓ.32 என்ற கரும்பு ரகம் சிறப்பாக உள்ளதால் அந்த ரகத்தைச் சாகுபடி செய்கிறோம்.
 சாகுபடி செய்யப்பட்டு நன்றாக வளர்ந்துள்ள கரும்புகளை டிசம்பர் தொடங்கி மார்ச் மாதம் இறுதி வரை அறுவடை செய்கிறோம்.
 அறுவடை செய்யப்பட்ட கரும்பு வாகனங்கள் மூலம் அச்சு வெல்லம் தயாரிக்கும் பட்டறைகளுக்கு கொண்டு செல்லப்படும். அங்கு கிரஷர் இயந்திரத்தின் மூலம் கரும்புகள் பிழியப்படுகின்றன. அந்தச் சாறு பெரிய இரும்பு கொப்பரைகளில் சேமிக்கப்பட்டு பெரிய அடுப்புகளில் வைத்து சூடாகக் காய்ச்சப்படும். அப்போது சாறில் உள்ள கசடுகள் நீக்கப்பட்டு, சாறு பாகு பதத்தில் வரும் வரை நன்கு காய்ச்சப்படுகிறது.
 பாகு பதத்துக்கு வந்தவுடன் பெரிய மரத் தட்டுகளில் ஊற்றப்பட்டு, பதம் வரும் வரை கிளறி விடப்படும். தேவையான பதம் வந்தவுடன் பாகுவானது பெரிய மர அச்சுகளில் ஊற்றப்பட்டு அச்சு வெல்லங்களாக வார்த்தெடுக்கப்படுகின்றன. பல ஆண்டுகளுக்கு முன் மாடுகளைப் பயன்படுத்தி மரச் செக்குகள் மூலம் கரும்புச் சாறு பிழியப்பட்டது.
 தற்போது இயந்திரங்களைக் கொண்டு கரும்புச் சாறு பிழிகிறோம். ஒரு ஏக்கர் கரும்பில் சுமார் 160 சிப்பம் (ஒரு சிப்பம் 30 கிலோ)அச்சு வெல்லம் தயாரிக்கலாம். ஒரு நாளில் சுமார் 500 முதல் 1500 கிலோ வரை அச்சு வெல்லம் தயாரிக்கலாம். அச்சு வெல்லத்தின் நிறம்,தரம் உள்ளிட்ட தன்மைகளைக் கொண்டு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
 தற்போது ஒரு சிப்பம் அச்சு வெல்லம் சுமார் ரூ. 950-க்கு விலைபோகிறது. உரம், டீசல், மூலப்பொருள்களின் விலை உயர்வு, கூலியாள் சம்பள உயர்வு உள்ளிட்ட காரணங்களால் வியாபாரிகளால் நிர்ணயிக்கப்படும் அச்சு வெல்ல கொள்முதல் விலை எங்களுக்குக் கட்டுப்படியாகவில்லை.
 கரும்புச் சாகுபடி வேலைகளுக்கு, கரும்பு வெட்டுவது, வெல்லம் காய்ச்சுவது உள்ளிட்ட பணிகளுக்கு போதுமான ஆள்கள் கிடைக்காத நிலையில் வெளிமாவட்டங்களிலிருந்து அதிக சம்பளத்திற்கு ஆட்களை அமர்த்தி இந்தப் பணிகளை தொய்வின்றிச் செய்து வருகிறோம்.
 அதிக லாப நோக்கம் இல்லாமல் இந்தப் பணியை பல்லாண்டு காலமாக எங்கள் குலத் தொழிலாக, குடிசைத் தொழிலாகச் செய்து வருகிறோம். அரசு எங்களின் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, அச்சு வெல்லம் தயாரிக்கும் விவசாயிகளுக்கு தேவையான சலுகைகளை வழங்க வேண்டும். அச்சு வெல்லத்தை அரசு கொள்முதல் செய்து அங்காடிகளில் ஜீனிக்கு மாற்றாக பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். அழிவு நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் இந்த அச்சு வெல்ல தயாரிக்கும் குடிசைத்தொழிலை காக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் பழனிசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com