இயற்கை எழில் கொஞ்சும் ஏலகிரி மலை

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா மையமாக ஏலகிரி விளங்குகிறது
இயற்கை எழில் கொஞ்சும் ஏலகிரி மலை

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா மையமாக ஏலகிரி விளங்குகிறது.
 ஜோலார்பேட்டையில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள பொன்னேரி ஊராட்சியை அடுத்து உள்ளது ஏலகிரி மலை.
 இயற்கை எழில் கொஞ்சும் ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்றும், மலைகளின் இளவரசி என்றும் வர்ணிக்கப்படுகிறது. 14 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து ஏலகிரி மலை உச்சிக்கு செல்லலாம்.
 தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள், வள்ளல்கள் என 14 அழகிய தமிழ் பெயர்களை ஒவ்வொரு வளைவுக்கும் சூட்டியுள்ளனர்.
 ஏலகிரி மலையில் ஆண்டு முழுவதும் ஒரே சீரான தட்பவெப்ப நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அறிந்த ஆங்கிலேயர்கள் சேலம் சேர்வராயன் மலைக்கு அடுத்தபடியாக ஏலகிரி மலையை விரும்பி அங்கு குடியேறினர்.
 இங்கு ஏலக்காய் அதிகம் விளைந்ததால் இம்மலையை ஏலமலை என அழைத்தனர். நாளடைவில் ஏலமலை, ஏலகிரி என பெயர் மாற்றமானது. இந்த மலையில் நெல், கரும்பு, சாமை, கேழ்வரகு போன்ற பயிர்களும் வாழை, பலா, மாதுளை போன்ற பழ வகைகளும், ரோஜா மலர் போன்றவையும் ஏராளமாகப் பயிரிடப்படுகின்றன.
 ஏலகிரியில் வீசும் காற்று பலவித நோய்களை போக்கும் குணமுடையதாகும்.
 இப்பகுதி மக்கள் தங்கள் காவல் தெய்வமாக மலைநாச்சியம்மனை வழிபட்டு வருகின்றனர். அத்தனாவூரில் உள்ள கோயிலிலும், நிலாவூரில் உள்ள கோயிலிலும் ஆண்டுக்கு ஒரு முறை 15 நாள்களுக்கு தொடர் விழாக்கள் நடைபெறும்.
 தற்போது ஏலகிரியில் ரசிப்பதற்கென்று படகுத் துறை மற்றும் இயற்கை பூங்கா, செயற்கை நீருற்று, பட்டுப்பூச்சி ஆராய்ச்சி நிலையம் ஆகியவை உள்ளன. இம்மலையில் தற்போது ஆசிரமங்கள் குருபீடங்கள் ஆகியவையும் உள்ளன. இங்கு தமிழக அரசின் யாத்ரி நிவாஸ் எனும் தங்கும் விடுதியும் உள்ளது.
 - து.ரமேஷ், திருப்பத்தூர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com