கலை நுணுக்கத்துடன் தஞ்சையில் மட்டுமே தயாராகும் நெல்மணி மாலை

கலைகளின் பிறப்பிடமாகத் திகழும் தஞ்சாவூரில், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, ஓவியம், கலைத்தட்டு, வீணை, நெட்டி வேலை, மரக்குதிரை, கண்ணாடி வேலைப்பாடு உள்ளிட்டவற்றின்
கலை நுணுக்கத்துடன் தஞ்சையில் மட்டுமே தயாராகும் நெல்மணி மாலை

கலைகளின் பிறப்பிடமாகத் திகழும் தஞ்சாவூரில், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, ஓவியம், கலைத்தட்டு, வீணை, நெட்டி வேலை, மரக்குதிரை, கண்ணாடி வேலைப்பாடு உள்ளிட்டவற்றின் வரிசையில் தஞ்சாவூர் நெல் மணி மாலையும் புகழ்பெற்றது.
 இந்த நெல் மணிமாலை வேறும் எங்கும் செய்யப்படுவதில்லை. எனவே, இது மிகவும் அரிய வகை மாலையாகக் கருதப்படுகிறது. தஞ்சாவூர் ரயிலடி அருகே பூ மாலைகள் விற்கப்படும் கடைகளின் வரிசையில் விளார் கிராமத்தைச் சேர்ந்த எஸ். தனபால் (68) இந்தக் கலையில் ஈடுபட்டுள்ளார்.
 சந்தன மாலை போன்ற வடிவமைப்பில் நெல் மணி மாலை, ஏலக்காய் மாலை, கிராம்பு மாலை, ஜவ்வாது மாலை போன்றவையும் செய்து வருகிறார். இவை பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சிகரமாக இருப்பது மட்டுமல்லாமல், அதில், செய்யப்படும் கலை வேலைப்பாட்டை உன்னிப்பாக பார்த்தால் ஆச்சரியமாகவும் இருக்கும். மிகுந்த கலை நுணுக்கத்துடன் கூடிய இத்தொழிலில் இவர் மட்டுமே ஈடுபட்டுள்ளார்.
 இதில், நெல் மணி மாலை மிக உயரிய மாலையாகக் கருதப்படுகிறது. வி.வி.ஐ.பி.களுக்கு அணிவிக்கப்படும் மாலையாக இருப்பதால், இதனுடைய மதிப்பும் அதிகம். இதைச் செய்வதற்குப் பொறுமையும், ஆர்வமும் அவசியம்.
 நெல் மணி மாலை தயாரிப்பில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் தனபால் கூறியது: முதல் முதலில் என் தந்தை வி. சுப்பையா இக்கலையைத் தொடங்கினார். பின்னர், எனது அண்ணன் எஸ். கோதண்டபாணி செய்து வந்தார். அவர் 35 ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். அப்போது, நான் வேளாண் துறையில் பணியில் இருந்தேன். இக்கலையைத் தொடர்வதற்கு ஆள் இல்லை. எனவே, எனது பணியை ராஜிநாமா செய்துவிட்டு, இக்கலையைத் தொடர்கிறேன்.
 நெல் மணி மாலைக்கு நெல் மணிகள் பெரிய அளவில் இருக்க வேண்டும். இதை நெருக்கமாக நாரில் பின்னி, இரு முனைகளிலும் சிம்பு வைத்து இறுக்கமாகக் கட்ட வேண்டும். இதுபோல, தேவைப்படும் அளவுக்கு நெல் மணிகள் கட்டப்படும். இவற்றை அட்டையில் 3 வட்ட வடிவத்திலும், 6 நீள் வட்ட வடிவத்திலும் வைத்து தைக்கப்படும். மேலும், சூரத்திலிருந்து வரவழைக்கப்பட்ட ஜரிகையை கம்பியில் கோர்த்து, பல்வேறு பூ வடிவங்களில் செய்யப்படும். இதுபோல செய்து மாலையாக உருவாக்கப்படுகிறது. நெல் மணியுடன் இந்த ஜரிகை வேலைப்பாடுகளையும் சேர்க்கும்போது மாலையின் அழகுக்கு மேலும் மெருகூட்டும். இந்த வேலையில் 3 அல்லது 4 பேர் ஈடுபடுவோம்.
 இதற்கு மிகுந்த பொறுமையும், ஆர்வமும், கலைத் திறனும் இருந்தால்தான் செய்ய முடியும். இதைச் செய்வதற்குக் குறைந்தது 7 முதல் 10 நாள்களாகும். ஆர்டர் கொடுத்தால் செய்து கொடுப்போம்.
 நெல் மணிகள் கட்டுவது போல, ஏலக்காய், கிராம்பு போன்றவையும் கட்டி, பூ வேலைப்பாடுகளும் செய்யப்படும். இது எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும், கெட்டுப் போகாமல் இருக்கும். சந்தன மாலையை விட இது மிகவும் சிறப்பாக இருக்கும். இதை அதிகமாக யாரும் வாங்க மாட்டார்கள். பிரதமர், முதல்வர், அமைச்சர்கள், ஆட்சியர்கள் போன்று உயர் பதவியில் இருப்பவர்களுக்கு அணிவிப்பதற்காக ஆர்டர் கொடுத்து வாங்கிச் செல்வர். நெல் மணி மாலையில் முன்புறம் மட்டும் தைப்பதற்கு ரூ. 8,000-ம், முன், பின் இருபுறங்களிலும் தைப்பதற்கு ரூ. 12,000-ம் ஆகும்.
 இதேபோல, கிராம்பு மாலையின் விலை ரூ. 8,000 முதல் ரூ. 15,000 வரை விற்போம். ஏலக்காய் மாலை ரூ. 15,000 வரை விலை போகும். ஏலக்காய் விலை அதிகமாக இருப்பதால் இதன் விலை அதிகம். இதைச் செய்து வைத்து விற்பது சிரமம். எனவே, ஆர்டர் கொடுப்பவர்களுக்குக் குறித்த நாளில் செய்து கொடுக்கிறேன்.
 இதேபோன்று சோயா பீன்ஸ் மாலை, வேர்க்கடலை மாலை, ரூபாய் நோட்டு மாலை, நாணயங்கள் மாலை முன்பு எம்.ஜி.ஆர்., ராஜீவ் காந்தி இருந்தபோது, அவர்களுக்கு அணிவிப்பதற்காக அடிக்கடி வாங்கிச் செல்வர். எனவே, அப்போது ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் அளவுக்கு வருவாய் கிடைத்தது. இப்போது, அந்த அளவுக்கு ஆர்டர் கிடைப்பதில்லை. சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருக்கு அணிவிப்பதற்காக வேளாண் துறையினர் ஆர்டர் கொடுத்து வாங்கிச் சென்றனர். இரு ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் மோடிக்கு அணிவிப்பதற்காக ஆர்டர் கிடைத்து செய்து கொடுத்தோம். தற்போது, வேளாண் துறையினர்தான் ஓரளவுக்கு ஆர்டர் கொடுக்கின்றனர். என்றாலும், முன்பு போல இப்போது ஆர்டர் கிடைக்காததால் வருவாயும் குறைவாகவே இருக்கிறது. எவ்வளவோ சிரமங்கள் இருந்தாலும், இந்தக் கலையைத் தொடர்ந்து செய்து வருகிறேன். இதற்கான ஆர்டர்கள் கிடைக்காத காலத்தில் சந்தன மாலை செய்து பூம்புகார் விற்பனை நிலையத்திடம் விற்று வருகிறேன். இதன் மூலம், ஓரளவுக்கு வருவாய் கிடைக்கிறது என்றார் தனபால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com