சாதனை சிகரத்தில் சென்னை ஐ.சி.எஃப்.

சாதனை சிகரத்தில் சென்னை ஐ.சி.எஃப்.

ரயில் பெட்டித் தயாரிப்பில் அன்று தொட்டு இன்றுவரை உலகப் புகழ்பெற்று விளங்கும் இணைப்புப் பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எஃப்), சென்னை பெரம்பூரில் அமைந்துள்ளது.

ரயில் பெட்டித் தயாரிப்பில் அன்று தொட்டு இன்றுவரை உலகப் புகழ்பெற்று விளங்கும் இணைப்புப் பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எஃப்), சென்னை பெரம்பூரில் அமைந்துள்ளது.
 சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்த இந்த தொழிற்சாலை அப்போதைய முதல்வரான பெருந்தலைவர் காமராஜர், லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோர் முன்னிலையில், கடந்த 1955-ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் ஜவாஹர்லால் நேருவால் தொடங்கி வைக்கப்பட்டது.
 பயணிகளுக்கான ரயில் பெட்டிகளைத் தயாரிக்க சுவிஸ் தொழில்நுட்பத்துடன் ஏற்படுத்தப்பட்ட இந்திய ரயில்வேயின் முதன்மை தொழிற்சாலை இதுவாகும்.
 இந்திய ரயில்வே-க்கு பயணிகள் ரயில் பெட்டிகளை உலகத் தரத்துடன் தயாரித்தளிக்கும் முதன்மையான உற்பத்தி பிரிவாக ஐ.சி.எஃப். தொழிற்சாலை விளங்குகிறது. இங்கு தயாரிக்கப்படும் பெட்டிகள் பெரும்பாலும் இந்திய ரயில்வேக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
 இது, ஆரம்ப காலத்தில் மூன்றாம் வகுப்புப் பெட்டிகளின் கூடுகளை மட்டுமே தயாரிக்கும் திறனுடையதாக இருந்தது. ரயில் பெட்டியின் உட்புற கலன்களை ரயில்வே பணிமனையில் தயார் செய்து கொள்வதாக இருந்தது. அதன்பிறகு, 1962-ஆம் ஆண்டு முதல் உட்புற கலன் வடிவமைக்கும் பட்டறை நிறுவப்பட்டது. படிப்படியாக உற்பத்தித் திறன் அதிகரிக்கப்பட்டு, கடந்த 1974-ஆம் ஆண்டில் 750 பெட்டிகள் தயாரிக்கக் கூடிய நிலையை எட்டியது.
 தொழிற்சாலை அமைப்பு: ரயில் பெட்டி இணைப்புத் தொழிற்சாலை இரண்டு பிரிவுகளை கொண்டுள்ளது. அவை கூடுகள் பிரிவு மற்றும் உட்புறக் கலன் பிரிவு. கூடுகள் பிரிவில் ரயில்பெட்டிகளின் வெளிப்புறக் கூடுகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. உட்புறக் கலன் பிரிவில் பெட்டியின் உட்புற இருக்கைகளும் பிற வசதிகளும் பொருத்தப்படுகின்றன.
 அதிக எண்ணிக்கையிலும் ஏராளமான மாடல்களிலும் ரயில் பெட்டிகளைத் தயாரிப்பதால், இந்திய அளவில் புகழ்பெற்ற தொழிற்சாலையாகத் திகழ்கிறது ஐ.சி.எஃப். இங்கு தயாரிக்கப்பட்ட ரயில்கள் மற்றும் ரயில் பெட்டிகள் இலங்கை, வங்கதேசம், மலேசியா உட்பட 17 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. புறநகர் ரயில்கள், மின்சார ரயில்கள் உள்ளிட்ட வழக்கமான ரயில் பெட்டிகளைத் தயாரிப்பதுடன் ஐ.சி.எஃப். நின்றுவிடவில்லை. பிரமிக்கத்தக்க வகையிலான சொகுசு ரயில் பெட்டிகளையும், அரண்மனை போன்ற வசதிகளுடன் கூடிய பேலஸ் ஆன் வீல்ஸ், மகாராஜா எக்ஸ்பிரஸ், டெக்கான் ஒடிஸி போன்ற அதிநவீன சொகுசு ரயில் பெட்டிகளையும் தயாரித்துள்ளது.
 ஐ.சி.எஃப். நிறுவனத்தின் சமீபத்திய சாதனை, " ரயில் 18' என்றழைக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ். இது, முழுக்க முழுக்க ஐ.சி.எஃப். நிறுவனத்தின் சொந்தத் தயாரிப்பு. இந்த ரயிலைத் தான் கடந்த பிப்ரவரியில் பெருமிதத்துடன் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.
 ஐ.சி.எஃப். தொடர் சாதனைகள்: ஐ.சி.எஃப்-இல் 1955 முதல் இப்போது வரை 500-க்கும் மேற்பட்ட வடிவமைப்புகளில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான ரயில் பெட்டிகளைத் தயாரித்து சாதனை படைத்துள்ளது. இவற்றுள் தானியங்கி புறநகர் ரயில் பெட்டிகள், சுற்றுலா சொகுசு ரயில் பெட்டிகள், படுக்கை வசதி, குளிர்சாதன வசதி கொண்ட பயணிகள் ரயில் பெட்டிகள், கொல்கத்தா மெட்ரோ ரயிலுக்கான அதிநவீன ரயில் பெட்டிகள், இந்தியாவின் முதல் அதிவேக "வந்தே பாரத்' ரயிலுக்கான பெட்டிகள் ஆகியவை அடங்கும்.
 ஒவ்வொரு ஆண்டும் ஐ.சி.எஃப். புதிய ரயில் பெட்டிகளை அதிக எண்ணிக்கையில் தயாரித்து சாதனை புரிந்து வருகிறது.
 2018-19-ஆம் ஆண்டில் 50-க்கும் அதிகமான வடிவங்களில் 3,262 பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. உலகில் எந்த ஒரு ரயில் பெட்டி தொழிற்சாலையும் இந்த அளவுக்கு தயாரித்தது கிடையாது என்கின்றனர். நடப்பு ஆண்டில் (2019-2020) 4,238 பெட்டிகள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 புறநகர் ரயில் பயணிகளுக்கான மின்தொடர்கள் மற்றும் டீசல் மின்தொடர்களை பெட்டிகளைத் தயாரித்தளிப்பதிலும் ஐ.சி.எஃப். தனித்து விளங்குகிறது.
 "வந்தே பாரத்' விரைவு ரயில்: கடந்த ஆண்டு முதன்முறையாக இந்திய ரயில்வேயின் அதிவேக "வந்தே பாரத்' விரைவு ரயிலுக்கான ரயில் பெட்டிகளை இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ், 80 சதவீத உள்நாட்டுப் பொருள்களைக் கொண்டு ஐ.சி.எஃப். தயாரித்தது. இந்த சாதனை வெற்றிக்கு கைமேல் பலனாக மேலும் 44 ரயில் தொடர்களை தயாரிக்க ரயில்வே அமைச்சகம் பெரம்பூர் ஐ.சி.எஃப்.-க்கு ஆர்டர் வழங்கியுள்ளது.
 ஏற்றுமதியாகும் பெட்டிகள்: ஐ.சி.எஃப். சார்பில், இதுவரை 17 நாடுகளுக்கு 600-க்கும் மேற்பட்ட பெட்டிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில் இலங்கையிடம் 6 டீசல் மின்சார ரயில் தயாரிக்க ஆர்டர் பெறப்பட்டு, தற்போது 78 பெட்டிகள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதுதவிர, அடுத்த இரண்டு ரயில்களுக்கான பெட்டிகள் 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. இதுதவிர, இலங்கை ரயில்வேயில் பிரதான பாதையில் ரயில் இயக்கத்துக்காக 160 பெட்டிகள் தயாரிக்க ஆர்டர் பெறப்பட்டுள்ளது.
 கார்பன் குறைக்கும் முயற்சியில் ஐ.சி.எஃப்: இந்திய ரயில்வேயில் கார்பனுக்கு எதிரான நிறுவனங்களில் ஒன்றாக ஐ.சி.எஃப். திகழ்கிறது. தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் 7 காற்றாலைகளை ஐ.சி.எஃப். நிறுவியுள்ளது. இதன்மூலமாக, 1.5 மெகா வோல்ட் ஆம்பியர்ஸ் அளவு மின் உற்பத்தி செய்யப்படுகிறது. புதுப்பிக்கத் தக்க ஆற்றல் மூலம் பயன்படுத்தி, பசுமை ஆற்றல் ஏற்படுத்தப்படுகிறது. ஐ.சி.எஃப். இல் ஒருங்கிணைந்த கழிவு மேலாண்மை பின்பற்றப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில், ஒருங்கிணைந்த கழிவு மேலாண்மை பின்பற்றப்படுகிறது. ஐ.சி.எஃப் சார்பில் ஏரி சீரமைக்கப்பட்டு, சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்த ஏரியாக மாற்றியதால், புலம்பெயரும் பறவைகள் வரத்து அதிகரித்துள்ளது. இதுதவிர, ஐ.சி.எஃப்.இல் மழை நீரை சேகரிப்பதற்கு தேவையான விரிவான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com