தீப்பெட்டிக்கு குடியாத்தம்

மாடி வீடு முதல் குடிசையில் வசிப்பவர் வரை அனைத்துத் தரப்பினரும் பயன்படுத்தும் ஒரு சில பொருள்களில் தீப்பெட்டியும் ஒன்று. நவீன லைட்டர்கள் வந்தபோதிலும், தீப்பெட்டிகளின் பயன்பாடு குறையவில்லை.
தீப்பெட்டிக்கு குடியாத்தம்

மாடி வீடு முதல் குடிசையில் வசிப்பவர் வரை அனைத்துத் தரப்பினரும் பயன்படுத்தும் ஒரு சில பொருள்களில் தீப்பெட்டியும் ஒன்று. நவீன லைட்டர்கள் வந்தபோதிலும், தீப்பெட்டிகளின் பயன்பாடு குறையவில்லை. நாட்டின் தீப்பெட்டித் தேவையை 50 சதவீதத்துக்கு மேல் பூர்த்தி செய்வது தமிழகம்தான். தமிழகத்தில் முதலாவதாக சிவகாசியில் தான் தீப்பெட்டித் தொழில் அறிமுகமானது. அதற்கடுத்த சில மாதங்களில் இத்தொழில் குடியாத்தத்தில் தொடங்கப்பட்டது.
 குடியாத்தம் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடிசைத் தீப்பெட்டித் தொழிற்சாலைகளும், 15 பகுதி இயந்திர தீப்பெட்டித் தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. ஆள்பற்றாக்குறையால் இத்தொழில் நலிவின் நிலைக்குச் சென்றது.
 இந்நிலையில் சிறு, குறு தொழில்களை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டதன் பயனாக, சிறு, குறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் 25 பேர் ஒருங்கிணைந்து குடியாத்தத்தில் பொதுப் பயன்பாட்டு மையம் (கன்சார்டியம்) அமைத்தனர். இதற்குத் தேவையான ரூ.1.50 கோடி மதிப்பிலான இயந்திரத்தை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு மானியம் வழங்கியது.
 இந்த இயந்திரத்தில் ஒரு பகுதியில் சாதாரணக் குச்சிகளைக் கொட்டினால், அதுவே தானியங்கி குச்சிகளை பாலிஷ் செய்து, மெழுகு பதித்து, மருந்து தோய்த்த குச்சிகளை வெளியே தள்ளும். இந்தக் தீக்குச்சிகளை புதிதாய்த் தொழில் தொடங்குவோர் வாங்கிச் சென்று, பெட்டியில் அடைத்து தங்கள் பிராண்டு வில்லைகளை ஒட்டி விற்பனைக்கு அனுப்பலாம்.
 குடிசைத் தீப்பெட்டித் தொழிலைத் தொடங்க சுமார் 1,200 சதுர அடி கட்டடமும், ரூ. 1 லட்சம் முதலீடும் போதுமானது. இதனால் குறைந்தபட்சம் 20 பேருக்கு வேலை கொடுக்கலாம். குடியாத்தத்தில் தயாராகும் தீப்பெட்டிகள் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. உற்பத்தியாகும் தீப்பெட்டிகளை விற்பனை செய்ய முடியுமா? என்று சிறு முதலீட்டாளர்கள் கவலைப்படத் தேவையில்லை.
 ஏனெனில் இங்குள்ள தீப்பெட்டிகளைப் பெறும் மொத்த உற்பத்தியாளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கின்றனர். இதற்காக அவர்கள் முன்பணமும் தருகின்றனர். எனவே, தீப்பெட்டிகளைத் தயாரித்தால் போதும், விற்பனையும் எளிது.
 குடியாத்தம் கன்சார்டியத்தில் அங்கத்தினராக உள்ளவர்கள் தங்கள் தேவைக்கேற்ப தீக்குச்சிகளை எடுத்துச் சென்று பெட்டிகளில் அடைத்து, தங்கள் நிறுவன வில்லைகளை பெட்டிகள் மேல் ஒட்டி விற்பனைக்கு அனுப்புவர். கன்சார்டியத்தில் அங்கத்தினர்களாக இல்லாவிட்டாலும், தீப்பெட்டித் தொழிலை நடத்த உரிமம் பெற்றவர்கள் கட்டணம் செலுத்தி, மருந்து தோய்த்த தீக்குச்சிகளை வாங்கிச் சென்று பெட்டிகளில் அடைத்து, அவரவர் வில்லைகளை பெட்டிகளில் ஒட்டி விற்பனைக்கு அனுப்பலாம்.
 பாதுகாப்பு நடவடிக்கைகள், பாதுகாப்புக் கருவிகள், தொழிற்சாலையைச் சுற்றி போதிய இடைவெளி, தேவையான தண்ணீர் வசதி உள்ளிட்ட அரசின் விதிமுறைகளைப் பின்பற்றினால் இத்தொழிலை செய்மையாகச் செய்யலாம்.
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com