தொழில் புரட்சிக்கு வித்திடும் வெளிநாட்டு முதலீடுகள்...

தொழில் புரட்சிக்கு வித்திடும் வெளிநாட்டு முதலீடுகள்...

தமிழகத்தில் நடத்தப்பட்ட இரு சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடுகள் மூலம் அதிக அளவில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு வருவதன் காரணமாக, பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும்

தமிழகத்தில் நடத்தப்பட்ட இரு சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடுகள் மூலம் அதிக அளவில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு வருவதன் காரணமாக, பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
 முதல் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு கடந்த 2015-ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையில் 10 ஆயிரத்து 73 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டன. இதன் மூலம் ரூ. 2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி உத்தரவாத முதலீடுகளாக அளிக்கப்பட்டன.
 முந்தைய 15 ஆண்டுகளில் வரப்பெற்ற மொத்த அந்நிய நேரடி முதலீடுகளுக்கு இணையாக, மாநாடு நடைபெற்ற நான்கே ஆண்டுகளில் தமிழகம் புதிய அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்த்துள்ளது.
 இந்திய பொருளாதாரத்துக்கான கண்காணிப்பு நிறுவனம் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட தனியார் துறை முதலீடுகளின் அளவு ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 772 கோடி.
 2015-இல் நடைபெற்ற சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட பல்வேறு நிறுவனங்களின் ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 961 கோடி முதலீடுகள் பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள்ளன. அவற்றின் மூலம் ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 822 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
 வணிக உற்பத்தி தொடக்கம்: பிரதான தொழில் நிறுவனங்கள் பல தங்களின் வணிக உற்பத்தியை தொடங்கியுள்ளன. குறிப்பாக, அப்பல்லோ டயர்ஸ், டிஎல்எப் இன்போ சிட்டி, கேஇஎப்-கிருஷ்ணகிரி, செயின்ட் கோபேன், ஐடிசி லிமிடெட், எச்சிஎல், சிபிசிஎல் விரிவாக்கம், ஆம்வே விரிவாக்கம், விப்ரோ, லோட்டஸ் பிட்வேர், டிவிஎஸ் மோட்டார்ஸ், சன் எடிசன் சோலார் பவர், என்சிஆர் கார்ப்பரேஷன், கொடிசியா தொழில் பூங்கா, டோக்கியோ வங்கி, டிஎன்பிஎல், சுதன் ஸ்பின்னிங் மில் என பல தொழில் நிறுவனங்கள் தொழில்களைத் தொடங்கி வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.
 இரண்டாவது மாநாடு: இரண்டாவது சர்வதேச முதலீட்டாளர் மாநாடு கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு துறைகளின் சார்பில் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை சார்பில் 12 ஆயிரத்து 360 ஒப்பந்தங்களுடன், மொத்தம் ரூ.3 லட்சத்து 431 கோடிக்கு உத்தரவாத முதலீடுகள் அளிக்கப்பட்டன.
 இதில், 221 நிறுவனங்கள் பணிகளைத் தொடங்கி, பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள்ளன. இது மொத்த ஒப்பந்தங்களின் எண்ணிக்கையில் 73 சதவீதம் ஆகும். சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை சார்பில் கையெழுத்திடப்பட்ட 2 ஆயிரத்து 783 தொழில் திட்டங்கள், பணிகளைத் தொடங்கி பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள்ளன.
 குறிப்பாக, ஹூண்டாய், எம்.ஆர்.எப்., டிபிஐ, மாண்டோ, சுந்தரம் க்ளேட்டன் உள்ளிட்ட 22 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. எக்கி ஹோமா, ரினாட்டஸ், ரைமா டெக்னாலஜி உள்ளிட்ட நிறுவனங்கள் வணிக உற்பத்தியைத் தொடங்கி விட்டன.
 யமஹா மியூசிக், ஹனான், ராஜபாளையம் மில்ஸ், நிஸ்வின் புட்ஸ் ஆகிய நிறுவனங்கள் விரைவில் முழு வணிக உற்பத்தியைத் தொடங்கத் தயார் நிலையில் உள்ளன.
 பிற முதலீடுகள்: முதலீட்டாளர் மாநாடுகளில் மட்டுமல்லாமல், பல்வேறு நிறுவனங்கள் தாமாக முன்வந்து முதலீடுகளை மேற்கொண்டுள்ளன. குறிப்பாக ரூ.4 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ள சீயட் நிறுவனம் அனைத்து கட்டுமானப் பணிகளையும் ஒரே ஆண்டில் நிறைவு செய்து அக்டோபர் மாதம் வணிக உற்பத்தியைத் தொடங்கவுள்ளது. இவ்வாறு தமிழகம் தொழில் துறையில் மிகப்பெரிய அளவில் புரட்சியைத் தொடர்ந்து செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com